No icon

ஓராண்டில் மக்கள் தலைவரான

2019 மே மாதம் கன்னியா குமரி நாடாளு மன்ற தொகுதி யிலிருந்து தேர்ந் தெடுக்கப் பட்டதும் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய அலுவலகத்தில் நன்றி தெரிவிப்பதற்காக வந்திருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களிலிருந்து ஊர் நிர்வாகக் கமிட்டியினர் வந்திருந்தனர். தன்னை வெற்றிபெற உழைத்த மீனவ மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசும்போது,"என்னை வெற்றிபெறவைக்க... நீங்கள் அனைவரும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ மக்களும் முழு மூச்சாக உழைத்தார்கள். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து உங்கள் வெற்றியாகவே நினைத்து அசுர வேகத்தில் தேர்தல்பணி செய்தீர்கள். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையமும், இணையம் சர்வதேச சரக்குப்பெட்டக மாற்று முனையத்திற்கு எதிரானபோராட்டக் குழுவும் எந்தவித உதவியும் என்னிடமிருந்து எதிர்பார்க்காமல் கடலோரம் மட்டுமல்லாமல் உள் நாட்டிலும் எனக்காகத் தேர்தல் பணி செய்தீர்கள். கடற்கரை கிராமங்களும், உள்நாட்டு மீனவ கிராமங்களும் ஓட்டுகளைப் பிரிய விடாமல் மொத்த ஓட்டுகளையும் எனக்கேவழங்கி பெருவாரியான  வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். நீங்கள்என்மீது கொண்ட நம்பிக் கைக்கு நான் எப்போதும்நன்றி யுடையவனாக இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டு மானாலும் என்னை அழைக்க லாம். நீங்கள் அழைத்தமாத்திரத்தில் உங்கள் வசந்தகுமார் உங்கள் முன் வந்து நிற்பேன்" என்று மக்களின் கைதட்டலுக்கிடையே நன்றி தெரிவித்து பேசினார்.

அந்த அரங்கில் கூடி வந்திருந்த மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் தவறாமல் கோரிக்கை மனுக்களைக் கொண்டுவந்திருந்தனர். அந்த கோரிக்கை மனுக்களில் தங்கள் ஊரின் தேவைகள் என்னென்ன... குறுகிய காலத்தில் செய்யவேண்டியது என்னென்ன... நீண்ட காலத் திட்டங்கள் என்னென்ன... மத்திய அரசு செய்ய வேண்டியது என்னென்ன... மாநில அரசிடம் கேட்டுப் பெறவேண்டியது என்னென்ன... என்ற நீண்ட பட்டியல் இருந்தது.

ஒட்டுமொத்த மீனவ மக்களின் கோரிக்கைகளாக நெய்தல் மக்கள் இயக்கம் 13 கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனு அளித்தது.
1.மீனவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்து நாடாளுமன்ற, சட்டமன்ற ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மத்திய அரசில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்ற தனி கேபினெட் அமைச் சகம் உருவாக்க வேண்டும்.

3.கடல் அரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.

4.இனிவரும் சட்டமன்ற தேர்தல்களில் கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பாக மீனவர் களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும்.

5.நாடாளுமன்ற உறுப்பினருக் கான தொகுதி மேம்பாட்டு நிதியில், நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கு நான்கில் ஒரு பங்கு நிதியை ஒதுக்கவேண்டும்.

6. அந்நிய நாட்டுக்கப்பல்களுக்கு வரியில்லா மானிய விலை எரிபொருள் வழங்குவதுபோல் உள்நாட்டுப் பாரம்பரிய விசைப் படகு மீனவர்களுக்கும் எரிபொருளை அதே அளவு மானியத்தில் வழங்கவேண்டும்.

7.வெளிப்பொருத்தும் இயந்திரங்களைக் கொண்டு மீன்பிடித்தொழில் செய்யும் நாட்டுப் படகுகளுக்கு மாதம் 1000 (ஆயிரம்) லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவேண்டும்.

8.விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 50ரூ மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கவேண்டும்.

9. அனைத்து கடலோரச் சமூக மக்களுக்கும் தினசரி 100 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும்.

10.30 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ மக்கள் குடியிருக்கும் மிகமோசமாக பழுதடைந்து ஆபத்துகளை ஏற்படுத்தும் சிங்காரவேலர் அரசு தொகுப்பு வீடுகளை மாற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.

11.பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் மீன்வளம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மீனவர்களின் ஒப்பற்ற தலைமை மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிலை அமைக்க வும், அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் முயற்சி எடுக்க வேண்டும்.

12. நவம்பர் 21, உலக மீனவர்தின விழாவை தேசிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் அரசு விடுமுறைதினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13. குறைந்தபட்சம் 6 (ஆறு) மாதத்திற்கு ஒருமுறை யாவது மீனவ மக்களை ஒன்றாக சந்தித்து அதுவரை நிறைவேற்றிய திட்டங்கள் பற்றியும் இனிமேல் செய்யும் பணிகள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
என்று வைக்கப்பட்ட அத்தனை கோரிக்கைகளையும் பொறுமையாக வாசித்து காலம் என்னை அனுமதித்தால் இந்த கோரிக்கைகளை மட்டுமல்ல; நீங்கள் வைக்காத கோரிக்கைகளையும் ஒன்றும் விடாமல் நிறைவேற்றித் தர பாடுபடுவேன் என்று உறுதி கூறினார்கள்.

லூர்தம்மாள் சைமன் பிறந்தநாள்
மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் மேற்கொண்ட வேகம் அடுத்த மாதத்திலிருந்தே வெளிப்பட்டது. செப்டம்பர் 20 ஆம் நாள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் வருகிறது என்பதை குறும்பனை பெர்லினின் குப்பையில் போன கோப்புகள் "புத்தகத்தைப் படித்து அறிந்துகொண்டு தன்னுடைய வசந்த் டி.வி.யில் மாண்புமிகு லூர்தம்மாள் சைமனைப் பற்றி ஒரு தொலைக்காட்சி ஆவணப் படத்தை வெளியிட்டார். தேங்காப்பட்டணம் சந்திப்பு, குளச்சல் துறைமுகம், மணக்குடி போன்ற இடங்களில் நடந்த லூர்தம்மாள் சைமன் பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொண்டு ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கியதோடு, லூர்தம்மாள் சைமன் அவர்களுடைய முழு உருவ வெண்கல சிலையை தன் சொந்த செலவில் அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார். நாகர்கோவிலில் லூர்தம்மாள் சைமன் பெயரில் விளையாட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கினார். நவம்பர் 21ல் குளச்சலில் நடந்த உலக மீனவர் தின விழாவில் கலந்துகொண்டு, தான் நிறைவேற்ற நினைக்கும் அத்தனை கோரிக்கைகளையும் பட்டியலிட்டுப் பேசிபத்தாயிரத்திற்குமேல் கலந்து கொண்டிருந்த அத்தனை மக்களின் கரகோசத்தைப் பெற்றார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை குமரிமாவட்ட உயர் அதிகாரி திருமிகு. பாஸ்கரன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையான கடலோர இணைப்புச் சாலை மற்றும் தேங்காப்பட்டணம் - இரையுமன் துறை, துறைமுக உயர் மேம்பாலத் திட்டத்தைக் கேட்டுப் பெற்று நாடாளுமன்றத்தில் பேசி அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத்தில் தான் பேசிய கன்னிப் பேச்சிலேயே மீனவர்களின் கோரிக்கைகளான மானிய எரிபொருள், விபத்துகால நிவாரணம், கடலரிப்பு தடுப்புப் பணி, இன்சூரன்ஸ் போன்றவைகளை உரத்துப் பேசினார். கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்தில் ஈரான் கடலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் சுமார் 700 பேரை மீட்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். மாண்புமிகு பிரதம மந்திரி மோடி அவர்களையும், வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயசங்கர் அவர்களையும், கப்பல்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் தொடர்ந்து நேரில் சந்தித்து  மீனவர்களை மீட்டுக்கொண்டுவரவும், கப்பல் அனுப்பவும், விமானம் அனுப்பவும் இடைவிடாமல் முயற்சி செய்தார்.

கொரோனா காலத்தில் அவர் சென்னையில் இருந்தாலும் அவருடைய பெயரால் தினம் பத்து இடங்களிலாவது நிவாரண உதவிகளும், கபசுர குடிநீர் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இருந்தாலும் அவர் நேரில் வந்து வழங்கவேண்டும் என்று தொகுதி மக்கள் வேண்டி விரும்பி அழைத்ததால், குமரி மாவட்டத்திற்கு வந்து நிவாரண உதவிகளும், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொய்வில்லாமல் சென்றுசேர உதவினார். அது ஒரு மக்கள் இயக்கமாகவே நடைபெற்றது.கடைசியாக எனக்கு வந்த தகவலில் வரும் சட்டமன்ற தேர்தலில் கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மீனவ வேட்பாளர்களை களமிறக்கவேண்டும் என்று கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்ததாக அறிந்தேன். எச். வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக பணிசெய்யக் கிடைத்த காலம்வெறும் ஓராண்டு மட்டுமே! அந்த ஓராண்டிலேயே அவர் செய்த பணிகளால் மக்கள் தலைவராக உயர்ந்து நின்றார். அவர் நினைத்ததுபோல் காலம் அனுமதித்திருந்தால் எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் ஏக்கத்துடன் கூறுகிறார்கள்.

இனி நாங்கள் யாரிடம் செல்வோம்...
திரும்பி ஒருமுறை வரமாட்டீரா?!
என்று கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

Comment