No icon

கேரளாவில் குறைந்து வரும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

செய்தி

கேரளாவில் குறைந்து வரும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கேரள மாநிலம் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட மாநிலமாக அறியப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக மக்கள்தொகை  கணக்கெடுப்புப்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது திருஅவைத் தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  1950 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24.06 சதவீதமாக இருந்த மக்கள்தொகை எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆறு சதவீத அளவில் குறைந்து 18.33 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்று நிலையிலிருந்து படிப்படியாக மக்கள்தொகை குறைந்து வருவது கிறிஸ்தவர்களின் சமூக அரசியல் பொருளாதார எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று கிறிஸ்தவத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.  தேசிய மக்கள்தொகை கட்டுப்பாடு கொள்கைப்படி பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் சுருங்கிப் போனது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான்,  சீரோ மலபார் மறைமாவட்டமான பாளை மறைமாவட்ட ஆயர், வத்திக்கானின் அறிவுரைப்படி குடும்ப ஆண்டாக சிறப்பிக்கப்படும் இவ்வாண்டில் கிறிஸ்தவ குடும்பங்கள், குறிப்பாக 2000 ஆண்டிற்குப் பிறகு திருமண தம்பதியர், நான்கு அல்லது அதற்கு அதிகமான  பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டால், மாதந்தோறும் 1500 ரூபாயும் உயர்கல்விக்கான உதவியும் கிடைக்கும் என்று அறிவித்தார். மேலும் நான்காவது குழந்தைப் பெற்றுக்கொள்ளும்போது திருஅவையே பேறுகால செலவை ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தார். இது பொதுவெளியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இருப்பினும் ஒரு சில மறைமாவட்டங்கள் இதே போன்ற குடும்ப நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகின்றன.  கேரளாவில் உள்ள ஆயர்கள், இதற்கு முன்பு அரசு பரிந்துரைத்த மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்கான அரசின் பரிந்துரைகளை ஆதரித்தோம்; ஆனால் தற்போதுள்ள நிலைமை என்பது வேறு என்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டை கடுமையாக மேற்கொண்ட சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உலகம் அறியும் என்றும் கூறியுள்ளனர்.  பொருளாதார வசதி நிறைந்த கிறிஸ்தவக் குடும்பங்கள்கூட ஓரிரண்டு பிள்ளைகளுடன் நின்றுவிடுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. திருஅவை இன்றைய இளைய தலைமுறையினருக்கு குடும்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கை சரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கூக்குரலாக உள்ளது.

Comment