No icon

ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உலக அறிக்கையின் பின்னணியில்

சிகப்பு எச்சரிக்கை-3 ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உலக அறிக்கை

இப்புவியை அழிப்போரை அழிக்க நேரம் வந்துவிட்டது (திவெ 11:18)

மண்ணைப்பார்!  நீரைப் பார்!

காற்றைப்பார்!  உயிரினங்களைப்பார்!

மனித முகங்களைப் பார்!

குழந்தைகளின் முகத்தைப் பார்!

IPCC சிகப்பு எச்சரிக்கை பார்!

திருத்தந்தை பிரான்சிஸ் இறைவா உமக்கே புகழ் திருமடலைப் பார்!

கண்களை அகலத்திறந்து பாரதநாட்டைப் பார்!

தமிழ்நாட்டைப் பார்! சென்னையைப் பார்!

எங்கு பார்த்தாலும் அழிவின் ஆரம்பங்கள் கண்களுக்கு தெளிவாக புலப்படும். மனித செயல்பாடுகளின் (Human activity) உச்சக்கட்ட துஷ்பிரயோகம்!

1967 ஆம் ஆண்டு அமெரிக்க வரலாற்று ஆசிரியர் லின் வயட் ஜீனியர் (Lynn White Jr) என்பவர் “The historical roots of our Ecological crisis” (சுற்றுச்சூழல் தாக்கத்திற்காக மனித வரலாற்றுப் பின்னணிகள்) எனும் கட்டுரையை எழுதி, ஒரு மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தினார்.

அப்படி என்ன எழுதினார்? அவர் எழுதியது என்னவென்றால், இன்றைய தினம் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணம் ஆபிரகாம் வழிவந்த மதங்களே ஆகும். இந்த சீரழிவிற்கு பெருத்த காரணம் கிறித்தவ சமயமே என்று அதிர வைத்தார். கிறித்தவ இறையியல் அனைத்துமே மனிதனை மையமாக கொண்ட (Anthropocentrism) ஆன்மீகத்தையே பரிந்துரை செய்தன என்றார்.

தொடக்க நூல் 1:26-28 வசனங்களை மையமாக வைத்து கிறித்தவ இறையியல்கள் செய்யப்பட்டன. மனிதன் மட்டுமே இறப்பு உயிரினம்! மற்ற உயிரினங்களின் நோக்கமெல்லாம் மனிதனுக்கு சேவை செய்வதே! எனும் போதனையை தனது வழி வந்த மக்களுக்கு கிறிஸ்தவ மதம் முன்வைத்தது. அது மட்டுமல்ல! மேற்சொன்ன அதே விவிலிய வாசகங்களில் காணப்படும் “அடக்கி ஆள்” (dominion) எனும் வார்த்தைகளை மனிதமைய நோக்கங்களுக்காக கடந்த 2000 வருடங்களாக உபயோகித்திருக்கிறது.

“படைப்பை உங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்துங்கள்” (தொநூ 1:28) எனும் விவிலியச் சொற்களை தவறுதலாக புரிந்துகொண்டு, செய்யப்பட்ட இறையியல்கள் பின்வரும் தவறான செயல்பாடுகளை நியாயப்படுத்தின!

சிலுவைப்போர்கள், காடழிப்பு, விலங்கினங்கள் அழிப்பு, தொழிற்புரட்சி, பசுமைப்புரட்சி, முதலாளித்துவம் (capitalism), முதல் இரண்டாம் போர்கள், காலனியாதிக்கம், அடிமைத்தனம், கட்டாய மதமாற்றம், உச்சநிலை பொருளாதார வளர்ச்சி, (High Economic Growth)  பெரு உற்பத்தி, நுகர்வுக் கலாச்சாரம், இயற்கை வளங்களை சுரண்டுதல், உலக மயமாக்கம் (Globalization) போன்ற பேரழிவுகளை உருவாக்கியது ஆபிரகாம் வழிவந்த சமயங்களே என்று லின் வயட் குற்றம் சாட்டினார்.

இந்தப் பேரழிவுக்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்களே சரிகட்ட வேண்டும். எனவே, ஆபிரகாம் வழிவந்த சமயங்கள், முக்கியமாக கிறித்தவ மதம் சுற்றுச்சூழல் சீர்கேட்டினைச் சரிகட்ட மாபெரும் பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என லின் வயட் அழைப்பு விடுத்தார்.

சுற்றுச் சூழல் பாதுகாவலராக 12 ஆவது நூற்றாண்டில் சுற்றுச் சூழலை நேசித்த, புனித பிரான்சிஸ்கு அசிசியாரை அறிவிக்க வேண்டும் என்று கட்டுரையில் எழுதினார்.

நவம்பர் மாதம் 29 ஆம் தேதி 1979 ஆம் வருடம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்களால் புனித பிரான்சிஸ் அசிசியார், சுற்றுச்சூழல் நாயகனாக பிரகடனப்படுத்தி, 1967 ஆம் ஆண்டு லின் வயட் எழுதிய கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இறைவா உமக்கே புகழ் (Laudato Si, 67)  திருமடலின் 67 ஆம் பத்தியில் மறைமுகமாக 1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கம் தருகிறார். அது பின்வருமாறு:

“விவிலிய வசனங்களை (தொ.நூ 1:28) இவ்வாறு உபயோகித்ததை, தாயாகிய திருஅவை தவறு என்று ஒத்துக்கொள்கிறது. பல வேளைகளில் கிறித்துவ சமயம் இப்பேர்பட்ட தவறான இறையியல்களை உருவாக்கி, தவறான பாதைக்கு வழிகோலியது உண்மையாக இருந்தாலும், தற்போது அப்பேர்பட்ட இறையியல்களை செய்வது தனது என்று நிராகரிக்க வேண்டும். “இறைச்சாயலாக” (Imago dei) உருவாக்கப்பட்ட மனிதன் தனது “அதிகாரத்தை” தவறாகப் புரிந்துக்கொண்டு “படைப்பை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற எண்ணங்களை புறக்கணிக்கப்பட வேண்டும். விவிலிய திருவசனங்களை அந்தந்த காலத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் விவரிக்க மனித இனம் முயல வேண்டும்! (இறைவா உமக்கே புகழ், 67).

IPCC சிகப்பு எச்சரிக்கை “மனித செயல்பாடுகள் உருவாக்கிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை பணிக்குழு (NG1) The Physical science basis of Climate Change  எனும் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் (6th Assessments Report) தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. ஏறக்குறைய 14,000 ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ச்சி செய்து, அவற்றை 3500 பக்கங்களில் சுருக்கி, ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது

IPCC  அறிக்கை லின் வயட் எழுதிய கட்டுரை, திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய இறைவா உமக்கே புகழ், போன்றவைகளை படித்தால் நம் கண்களுக்கு தெளிவாக புலப்படுவது என்னவென்றால் “அடக்கி ஆள்” (dominion Gen 1:28) அடிப்படையில் கடந்த 2000 வருடங்களாக செய்யப்பட்ட "மனித செயல்பாடுகள்" (Human activity)  குறிப்பாக முதலாளித்துவம் (Capitalism) அடிப்படையில் உருவாக இரண்டு காரணிகள்:

* உச்சநிலை பொருளாதார வளர்ச்சி (High Economic Growth)

* விஞ்ஞானம், தொழில் நுட்பம் ( Science & Technology)

மேற்சொல்லப்பட்ட இவ்விரு காரணிகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் நிகழ்வில் நேரடியாக தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றன என்று IPCC சிகப்பு எச்சரிக்கை தெரிவித்திருக்கிறது.

இறைவா உமக்கே புகழ், முதல் அத்தியாயம் “நமது பொது வீடாகிய பூமிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது” எனும் தலைப்பில் இப்புவியை “பார்க்க” நம்மை அழைத்துச் செல்கிறார். அவை பின் வருமாறு:

* சுற்றுச்சூழல் மாசை பார்ப்போம்

மண் மாசு, நீர் மாசு, காற்று மாசு, உயிரினங்கள் மாசு

* குப்பை எனும் தூக்கி எறியும் கலாச்சாரம்

* குடிநீர் நெருக்கடி * உயிரினங்களின் பேரழிவு (Mass extinction) 

* மானிட வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள்

மேற்சொல்லப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டு விளைவுகள் எல்லாமே “மனித செயல்பாடுகளால்” (Human activity) ஆனவையே! இறைவா உமக்கே புகழ் 21 ஆம் பத்தியில் திருத்தந்தை இவ்வாறு மனித செயல்பாடுகளை விவரிக்கிறார். ‘நமது பொது வீடாகிய இப்புவியானது, நாளுக்கு நாள் ஒரு குப்பைத் தொட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது” (இறைவா உமக்கே புகழ், 21).

பூமியில் மேற்பரப்பில் உள்ள மலைகளையும், மரங்களையும், ஏரிகளையும், நதிகளையும் வளர்ச்சி (Progress) எனும் பெயரில் குப்பைத்தொட்டிகளாக மாற்றியிருக்கிறோம். விளை மண்ணில் விஷத்தைக் கொட்டி சாகடித்தோம். அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இவ்வாறு எழுதுகிறார், விளை மண்ணை (Soil) எந்த நாடு அழிக்கிறதோ, அந்த நாடு விரைவில் அழிந்துவிடும்” பாரத நாட்டு மண்ணை பாருங்கள், பாரத நாடு ஒரு பாலைவனமாக, மாறிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்!

சென்னையைப் பாருங்கள்! உங்கள் சொந்த ஊரைப் பாருங்கள்!

நாம் முன்னேற வேண்டும், நாம் வளர வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பதையும் இழந்து விடுவோம் என்கின்ற பயம் எனக்கு இருக்கிறது.

மண் மாசு, நீர் மாசு, காற்று மாசு, உயிரினங்கள் மாசு போன்றவை கட்டுக்கடங்காமல் தலைக்கு மேல் போய்விட்டது! இதனால் மன மாசு (Mental Pollution)  உருவாக இருக்கிறது!

நாம் செய்யும் பெரும்பாலான “மனித செயல்பாடுகள்” பாவங்களாக (Sin) மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. “படைப்புக்கு எதிராக, படைப்புக்கு ஊறு விளைவிக்கின்ற செயல்பாடுகள் எல்லாமே பாவம்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் இறைவா உமக்கே புகழ் திருமடலின் 8ஆம் பத்தியில் தொடர்ந்து எழுதுகிறார்.

“மனிதர்கள் - படைப்பில் உள்ள உயிரினங்களை அழிப்பதும்

மனிதர்கள் - இப்புவியின் சமநிலைச் சரித்து, இதன் மூலம் உருவான புவி வெப்பம்

மனிதர்கள் - இயற்கை வளங்களையும், காடுகளையும் அழிப்பது; நீர்நிலைகளை, மண்ணை மாசுபடுத்துவது

மனிதர்கள் - மண், நீர், நிலம், காற்று, உயிரினங்கள் போன்றவைகளை அழிப்பது “பாவமாக” கருத வேண்டும்.

(தொடரும்)

Comment