No icon

​​​​​​​அருள்முனைவர் S. அற்புதராஜ், பங்குத்தந்தை & துணை அதிபர், வேளாங்கண்ணி.

பாஸ்கா விழாவுக்கு முன் தயாரிப்பு: நாற்பது நாள்கள்

திரு அவைக்குச் சொந்தமான தனி திருவழிபாட்டு வழிகாட்டி உண்டு. திருவழிபாட்டு ஆண்டும்  உண்டு. இந்த ஆண்டைப் பின்பற்றித்தான், இந்த ஆண்டுச் சக்கர ஓட்டத்தில்தான், திரு அவை இறைவனுக்குச் செலுத்தும் வழிபாட்டு முறை அமைந்துள்ளது. இதனை அருளின் ஆண்டு என்றும் கூறலாம். ஏனெனில், இந்த ஆண்டில் கொண்டாடப்படும் விழாக்களின் மறையுண்மைகளின் வழியாய் மனிதர்களுக்குக் கடவுளின் அருள் அளிக்கப்படுகின்றது.

திருவழிபாட்டு ஆண்டின் இருபெரும் பகுதிகள்

திருவழிபாட்டு ஆண்டை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியும் ஒரு முக்கிய விழாவைத் தன் மையமாக, கொடுமுடியாகக் கொண்டுள்ளது: ஒரு பகுதியின் மையம், கொடுமுடி கிறிஸ்மஸ் விழா; இன்னொரு பகுதியின் மையம், கொடுமுடி பாஸ்கா விழா. கிறிஸ்மஸ் விழாவைச் சுற்றி இருக்கும் காலத்தை கிறிஸ்மஸ் காலச் சக்கரம் எனவும், பாஸ்கா விழாவைச் சுற்றி இருக்கும் காலத்தைப் பாஸ்கா காலச் சக்கரம் எனவும் சொல்கிறோம். இம்முக்கிய விழாக்களுக்காக முன் தயாரிப்பு செய்வது, திரு அவையின் இறை வழிபாட்டுத் தத்துவங்களுள் ஒன்றாக இருக்கிறது. அதன்படி பார்த்தால் விழாக்களுக்கெல்லாம் விழாவாகிய பாஸ்கா விழாவுக்கு மூன்று நிலைகளில் முன் தயாரிப்பு செய்கிறோம்.

முதல் நிலை

தவக்காலத்திற்கு முன் வரும் வாரங்கள் : இது அழைப்பின் காலம். மனந்திரும்பும் காலமாகிய தவக்காலத்திற்கு திரு அவை நம்மை தயாரிக்கும் காலம். (ஜனவரி 9 முதல் மார்ச் 1 முடிய)

இரண்டாம் நிலை

தவக்காலத்தின் நான்கு வாரங்கள் : இது செபம், தவம், தானம் ஆகியவற்றை உள்ளடக்கிய, வாழ்க்கைச் சீரமைப்பின் காலம்.

மூன்றாம் நிலை

பாடுகளின் இரண்டு வாரங்கள் : கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்க இதில் பங்கு பெறும் காலம்.

இவ்வாண்டு மார்ச் 2 ஆம் நாள், திருநீற்றுப் புதன் அன்று தவக்காலம் தொடங்கியது. நம் ஆன்மீக வாழ்வில் இது ஒரு முக்கியமான காலம். நம் ஆன்மீக வாழ்வுக்கு பலனளிக்க வேண்டிய காலம். உள்ளத்தை உரசிப் புதுப்பிக்க உகந்த காலம். புனித பவுலடியார் சொல்வதைப்போலஇதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!” (2 கொரி 6:2). கிறிஸ்துவோடு பாலைநிலத்திற்குச் சென்று, அவரைப் போல் தவம் செய்து, எதிரியான சாத்தானோடு போர்புரிந்து, வெற்றி பெற வேண்டிய காலம். சுருங்கக்கூறின், இது திரு அவையின் வருடாந்திர, பொது ஆன்ம தியானம் எனலாம்.

இக்காலத்தைச் சரியாகப் பயன்படுத்து வதற்கும், இதன் முழுப்பயனைப் பெறுவதற்கும் இதனைப் பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். ஒவ்வொரு பார்வையும் இப்புனித காலத்தின் ஒவ்வொரு தோற்றத்தை, அழகை, பலனை எடுத்துக்காட்டுகிறது.

1. புனித லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், கிறிஸ்துவின் முழுப் பொதுவாழ்வையும், இயேசு எருசலேமை நோக்கிய பயணத்தை, ஒரு நீண்ட பயணமாக வடித்துக் காட்டுகின்றார்: “இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்ல தீர்மானித்தார்” (லூக் 9:51). கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் - தன் தந்தையின் திருவுளப்படி, மனித குலத்தை மீட்பதே. எருசலேமில் தன்னுடைய பாடுகளின் பலனால் இறப்பினாலும், உயிர்ப்பினாலும் மனிதரை மீட்க வேண்டியது தனது தந்தையின் திருவுளம் என்பதை, அவர் நன்கு தெரிந்திருந்தார். அதனால், எருசலேம் இயேசுவுக்கு தான் போய் சேர வேண்டிய இடமாக, தனது மானிட பிறப்பின் நோக்கமாக, தன் வாழ்வின் கொடுமுடியாக காட்சியளித்தது. அவர் கண்கள் எப்போதும் எருசலேமின் மீதே இருந்தன. இந்த உண்மையை உணர்த்தவே, புனித லூக்கா தன்னுடைய நற்செய்தியை எழுதும்போது, இயேசுவின் பொது வாழ்வில் நிகழ்ந்தவற்றை யெல்லாம், இயேசு எருசலேம் நோக்கிச் சென்ற பயணத்தில் நடந்ததாக அமைத்துள்ளார்.

தவக்காலத்தின் தொடக்கத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவனின் பார்வையும் எருசலேம் நோக்கி இருக்க வேண்டும். நம் ஆண்டவர் கிறிஸ்துவைப்போல், நம் பார்வை எருசலேம் நோக்கி உறுதியாய், நேராய் இருக்க வேண்டும். அவருடைய வாழ்வின் கொடுமுடி எருசலேம். நம் தவக் காலத்தின் கொடுமுடியும் எருசலேமே.

அவருடைய வாழ்வின் இறுதி நிகழ்வு இறப்பும், உயிர்ப்பும். நமது தவக்காலத்தின் இறுதி நிகழ்வு பெரிய வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு. அவருடைய பொதுவாழ்வு அவருடைய மீட்புச் செயலுக்கு ஒரு முன் தயாரிப்பாக இருந்ததுபோல, நமது தவக்காலம் கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்புக்கு முன் தயாரிப்பாக அமைய வேண்டும். பாஸ்கா விழாவின்போது, நாம் செய்ய வேண்டியவை இரண்டு: கிறிஸ்துவோடு பாவத்திற்கு இறப்பது, கிறிஸ்துவோடு புது வாழ்வுக்கு உயிர்ப்பது. உலகை மீட்க அவர் இறந்து உயிர்க்க வேண்டியிருந்தது. நாம் அந்த மீட்பில் பங்கு பெற வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல, இறந்து உயிர்க்க வேண்டும். இறப்பதும், உயிர்ப்பதும் ஒரு நாளில் அல்லது மூன்று நாளில் நடக்கக்கூடிய செயலல்ல.

நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் பாவத்திற்கு இறக்க வேண்டும். அதாவது, பாவத்தைச் சாகடிக்க வேண்டும். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் புதுவாழ்வில் உயிர்க்க வேண்டும். அதாவது, நம் ஆன்மாவில் உள்ள அருளை அதிகரிக்க வேண்டும். இறைவனோடு இன்னும் அதிகமாய் இணைய வேண்டும். இறைவாழ்வு வாழ வேண்டும். உண்மையில் பெரிய வெள்ளியன்று நாம் கிறிஸ்துவோடு, நம்மையே சிலுவையில் அறைந்து, பாவத்தைச் சாகடிப்பது உண்மையானால் அதிக முன்தயாரிப்பாக இந்த 40 நாள்களில், நாள்தோறும் இதைச் செய்ய வேண்டும். இந்த நாற்பது நாள்களும் பாவத்தை முற்றிலும் விலக்க, அருளைப் பெருக்க முயன்றால், புனித வெள்ளியன்று உண்மையாக கிறிஸ்துவோடு பாவத்திற்கு முற்றிலும் இறப்போம். பாஸ்கா விழாவன்று முழு உயிரோடு உயிர்த்தெழுவோம். ஆக, ஆன்மீகவாதிகளான நமக்கு இது முக்கியமான காலம். நம்மை மட்டுமன்று, நம் நற்செய்தியைக் கேட்கும் அனைவரையும் எருசலேமை நோக்கித் திருப்ப வேண்டிய காலம்.

2. தவக்காலத்தில் இயேசு ஒரு போர் வீரராகத் தோன்றுகிறார். கிறிஸ்து தூய ஆவியினால் பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு 40 நாட்கள் அலகையோடு போராடி, வெற்றியும் பெற்றார். அலகை அவரைச் சோதித்தது. நாமும் இந்தத் தவக்கால 40 நாட்களில், கிறிஸ்துவைப்போல், நம் சோதனைகளை மேற்கொண்டு, அலகையோடு போர் புரிந்து, இறுதியாய் நாம் வெற்றி பெற வேண்டும். கிறிஸ்தவன் ஒவ்வொரு நாளும் போராட வேண்டும் - உண்மையே. இருப்பினும், சிறப்பாக இந்த 40 நாள்களில் இன்னும் உற்சாகமாக, நம் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி சோதனைகள் மீது, பாவ நாட்டங்கள் மீது முழு வெற்றி கொள்ள வேண்டும்.

3. கிறிஸ்து தனது 40 நாள் பாலை நில வாழ்வின் போது, ஒரு தவசியாகவும் தோன்றுகிறார். தன் நேரத்தை போராட்டத்தில் மட்டுமல்ல; செபத்திலும், இறைவனோடு எந்நேரமும் ஒன்றித்து, தவத்திலும் கழித்தார். கிறிஸ்துவின் பாலை நில வாழ்வைப் புதுப்பிக்கும் நமக்கும் தவக்காலம் மற்ற நாட்களை விட, மிகுதியான செபத்தின் காலம். எந்நேரமும் இறைவனோடு ஒன்றித்து உரையாட வேண்டிய காலம். தவத்தினால் நம்மை ஒடுக்கும் காலம்.

4. தவக்காலம் மீட்பின் காலம். உயிர் கொடுக்கும் காலம். கிறிஸ்து தன் பாடுகளினால் மனுக்குலத்திற்கு மீட்பும், தெய்வீக உயிரும் பெற்று வைத்திருக்கின்றார். இந்த மீட்பையும், தெய்வீக உயிரையும் ஒவ்வொரு மனிதனும் பெற்று கொள்ள, பகிர்ந்து கொள்ளத் தகுந்த காலம் இத் தவக்காலம்.

5. தவக்காலத்தில் சொல்லப்படும் திருப்பலி மன்றாட்டுகளைப் பார்த்தால், தவக்காலத்தில் திரு அவை நமக்குக் குறிப்பிடும் பக்தி முயற்சிகளைக் கண்ணுற்றால் இன்னொரு எண்ணமும் நமக்குத் தோன்றும்.

நோன்பு:

நோன்பு, தர்மம் இந்த இரண்டு சொற்களும் திருப்பலி மன்றாட்டுகளில் திரும்பத் திரும்ப வருகின்றன. தொடக்கத் திரு அவையில், மத்திய காலத்தில் மக்கள் தவக்காலத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை நோன்பு இருந்தனர். இப்போது பல காரணங்களை முன்னிட்டு, ஒரு சில நாள்களிலே மட்டும் ஒரு சந்தி இருக்கக் கடமை. நமக்கு இப்போது திருநீற்றுப் புதனும், புனித வெள்ளியும் கட்டாய நோன்பு நாளாக இருக்கிறது. சில சலுகைகளைப் பயன்படுத்தி, நாம் நாட்களை குறைத்து விட்டோம். எனினும், நோன்பு என்னும் சொல் குறிப்பிடும் முழுப்பொருளையும் நாம் உணர வேண்டும். குறுகிய அர்த்தத்தில் பார்த்தால், நோன்பு என்றால் ஒரு நாளைக்கு ஒரு முழுச் சாப்பாடு மட்டும் உண்ணல். பரந்த அர்த்தத்தில் பார்த்தால், எந்த நாட்டங்களையும், விருப்பங்களையும், இன்பங்களையும் அடக்குதல், குறைத்தல், ஒறுத்தல் என்பதாகும். தவக்காலத்தின் திருப்பலியில் சொல்லப்படும் தவக்காலத்தின் தொடக்கவுரை IV இல்:

எங்கள் உண்ணா நோன்பின் வழியாக

நீர் எங்கள் தீய நாட்டங்களை அடக்குகின்றீர்;

மனதை மேலே எழுப்புகின்றீர்;

நற்பண்புகளையும் அவற்றிற்கான பரிசுகளையும்

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகப் பெருகச் செய்கின்றீர்.”

என, நோன்பின் மேன்மையைப் பாடிப் பாராட்டுகின்றோம். நாம் மேற்சொன்னபடி, புகைப்பிடித்தல், சில பொழுதுபோக்குகள், இன்ப உலாவுகள், சினிமாக்கள், நீண்ட உறக்கம், விருப்பமான சில தின்பண்டங்கள், இன்னும் நமக்குப் பிரியமானவற்றை விலக்கும்போது அல்லது குறைக்கும்போது நாம் ஒரு விதத்தில் நோன்பு இருக்கிறோம் எனலாம். குருக்கள் இரவு சொல்லும் செபத்தில் ஒரு பாடல் இக்கருத்தை எடுத்துச் சொல்கிறது: பேச்சிலும், உணவிலும், பானத்திலும், தூக்கத்திலும் இன்பங்களிலும் நம்மைக் கட்டுப்படுத்துவோம்... விழித்திருப்பதில்... இன்னும் ஆவலாய் இருப்போம். நோன்பைப் பற்றிய புதுச் சலுகைகளைப் பயன்படுத்துபவர்கள் வேறு ஒறுத்தல் முயற்சிகளிலும், செபத்தாலும், முன்மாதிரியான கிறிஸ்தவ வாழ்வாலும் நோன்பு இல்லாததற்காக ஈடுசெய்ய வேண்டும் என்றும், திருத்தந்தையர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

தர்மம்:

நோன்புக்கும், தர்மத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. நோன்பின் நோக்கங்களுள் ஒன்று தர்மம். நம் உணவைக் குறைத்து, அதன் வழியாகப் பிறருக்கு உதவி செய்யவே ஒருவேளை நோன்பு இருக்கின்றோம். எனவே, தவக்காலம் தானம் செய்யும் காலம். எல்லாரும் தானம் செய்ய வேண்டும். இதற்கு விதிவிலக்கே இல்லை. பணம், பொருள் இல்லையென்றால், வேறுவிதங்களில் பிறருக்கு உதவி செய்யலாம். மிக எளியவன் கூட இவ்விதத்தில் தர்மம் செய்யலாம். தவக்காலத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கண்டிப்பாக ஒரு வேளை நோன்பு இருக்க வேண்டும். அவசியம் தர்மம் செய்ய வேண்டும்.

 நோன்பு: உணவைக் குறைத்தல் அல்லது ஏதாவது தவ முயற்சி.

  தர்மம் : பிறருக்கு பொருளுதவி அல்லது ஏதாவது பிறரன்பு உதவி; ஒறுத்தலுக்கு பிறரன்பு பணிக்கும் விதிவிலக்கில்லை.

6. 40 நாள்கள் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் கழித்த 40 ஆண்டுகளுக்கான அடையாளம். பாலை நிலத்தில் தங்கிவிடவோ அல்லது அடிமை நாடான எகிப்துக்குத் திரும்பிச் செல்லவோ அவர்கள் விரும்பினர். இதுதான் அவர்களுக்கு பெரிய சோதனை. மேகத்தூணாய் இருந்து வழிகாட்டி, வழி நடத்திச் சென்ற கடவுளின் தலைமையின் கீழ் நடந்து, இறுதியாய் வாக்களித்த நாட்டை அடைய வேண்டிய தேவை இருந்தது. நாமும் இந்த 40 நாள்களில் பாஸ்கா விழாவை நோக்கி நடக்கிறோம். எபிரேயர்களைப் போல, வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி நடக்கின்றோம். இருந்தாலும், நம்முடைய விருப்பம்போல, ஆசாபாசங்களுக்கு ஏற்ப வாழ அடிக்கடி சோதனை வருகின்றது. ஆனால், நமது திருமுழுக்கு நாளன்று, கடவுளுக்காகவும், பிறருக்காகவும் வாழும் வாழ்வைத் தேர்ந்து கொண்டோம். தன்னல வழியை விலக்கிவிட்டு, அன்பு வழியை தெரிந்து கொண்டோம். தொடர்ந்து அதே வழியில் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் நடப்போம். அப்போது, நாமும் இந்த 40 நாள்களின் முடிவில் வாக்களித்த நாட்டில் நுழைவோம். இதுவரை நாம் தவக்காலத்தை பல கோணங்களில் பார்த்தோம். காரணம், நம் ஒவ்வொருவருக்கும் இக்காலம் அருள் பொழியும் வளமான காலமாக அமையவே விரும்புகின்றோம். தவக்காலம் ஆண்டின் வசந்தகாலம் (Spring time), புத்துயிர் பூக்கும் புதுமைக் காலம். குளிர்காலத்திலிருந்து இயற்கையானது புத்துயிர்ப் பெற்று, பொலிவுறுவது போல, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆன்மாவும் பாவ இருளும், குளிரும் நிறைந்த குளிர்காலத்திலிருந்து வெளிவந்து, அருளாகிய புத்துயிரோடும், அன்பாகிய வெப்பத்தோடும், புண்ணியங்களாகிய மலர்களோடும், மணம் கமழ்ந்து, எழில் கொழித்துத் திகழ வேண்டும்! இதுவே உங்களுக்கு எங்களின் உண்மையான தவக்கால வாழ்த்தும், தாழ்மையான செபமும் ஆகும்.

Comment