No icon

​​​​​​​திரு. குழந்தை ராஜ், காரைக்குடி

தவக்கால சிந்தனை – 1

தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளைப் (Passion) பற்றி பெரும்பாலும் பேசியும், ஒறுத்தல் முயற்சி, பக்தி, தான தர்மம், பாதயாத்திரை, சின்னோரன்ன பணிகளில் நாம் சற்று ஈடுபட்டு மன திருப்தியடைகிறோம். வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதைகளில் கலந்து, கண்ணீர்விட்டவர்களும் உண்டு. இயேசுவின் பாடுகளை நாம் இவ்வளவு பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டியதில்லை. அவரின் உலக வாழ்வு பிறக்கும் முன்பே தோன்றி, விண்ணகம் சென்ற வரை உள்ள 33 1/2 +10 மாதங்கள் நடைபெற்ற தினசரி வாழ்வா/சாவா என்று புரிந்து கொள்ளலாம்.

Passion என்பதற்கு emotion like anger, love என்று பொருள் உண்டு. உணர்ச்சிவசப்பட்ட கோபம் மட்டுமல்ல; உள்ளுணர்வு உந்தித்தள்ளும் அன்பே பிரதானம். இயேசு தனது துன்பங்களை பொருட்படுத்தவே இல்லை. சாத்தான் சோதித்தபோதும், இரத்த வியர்வை வேர்த்த போதும், பேதுரு மறுதலித்த போதும், கற்றூணில் கட்டப்பட்டு, அடிக்கப்பட்டபோதும், கன்னத்தில் அறையுண்ட இயேசு, தளரா மனம் உள்ளவராக தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி மகிழ்ந்தார்.

மனிதனின் பிறப்பு தற்செயலானதுஎன அப்துல் கலாம் சொல்வார். ஆனால், இயேசுவின் பிறப்பு முன் குறிக்கப்பட்ட ஒன்று. இயேசு பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே தொடக்க நூலிலும், பின்னர் 700 ஆண்டுகளுக்கு முன்பு எசாயா இறைவாக்கினர் நூலிலும், மீக்கா நூலிலும் இயேசுவின் பிறப்பு, இடம், தாய், சூழல் எல்லாம் முன்பே நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மனிதர்களுக்கு முதல் தரிசனம் தந்தார். 12 வயதில் மறைநூல் அறிஞர்களை திணறடித்தார். தாயின் கருவிலே பாடம் கேட்டவர், பழைய ஏற்பாட்டு நூல்களை சரளமாக மேற்கோள் காட்டி, எதிரிகளை தடுமாறி, தங்களின் குழியில் தானே விழும்படி செய்கிறார்.

உங்கள் தந்தை சாத்தான்மோசே உங்களுக்கு உணவு அளிக்கவில்லை, ஆபிரகாம் பிறக்கும் முன்னரே நான் இருக்கிறேன். யோவானைக் காட்டிலும் பெரியவர் நானே. தாவீது அரசர் என்னை என் தலைவர் எனக் கூறுகிறார் என்று, பலவாறு எதிரியை சூரையாடி இறையரசை புளிப்பு மாவாக, உப்பாக, ஒளியாக உலகில் நிறுவுகிறார்.

Compassion என்னும் Passion தான் இயேசு செய்தவைகளில் மிகப் பெரியது. 5000 பேருக்கும், 4000 பேருக்கும் உணவளித்ததும், பிறவிக்குருடனுக்குப் பார்வை அளித்ததும், தன்னுடைய வயதிற்குமேல் 38 ஆண்டுகளாக பெதஸ்தா குளத்தில் படுத்துக்கிடந்த உடல் ஊனமுற்றோர், நயீன் விதவையின் மகன், யாயீர் மகள், மார்த்தா-மரியாள் சகோதரன் லாசர் ஆகியோரை உயிர்ப்பித்தது இவைகளெல்லாம் அவரின் அளவற்ற அன்பு - இறையன்பை காட்டுகிறது.

இந்த/ assion களைத்தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, அவரின் இறுதிக்கால பாடுகளை, துன்பங்களை நாம் தாங்க முடியாது, தாங்கபோவதுமில்லை. யாராவது இயேசு பட்ட ஒரு கசையடியை பெறுவாரா? முள் முடி சூட்டிக்கொள்வாரா? ஆணி அறையப்படுவாரா? கன்னத்தில் அறைய சம்மதிப்பாரா? அவையெல்லாம் நடக்காத காரியம்.

ஆனால், அவரின் பரிவு, இரக்கம், தெய்வீக அன்பான Agape என்னும் Passion இல் நாம் பங்கு பெற முடியும். இயேசுவின் அன்பு (Passion) 5 வகை பணிகளை கொண்டது.

1. பசித்தோருக்கு உணவு 2. ஆடையில்லாதவருக்கு உடை 3. சிறைப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுதலை

4. நோயுற்றோரை சந்தித்து ஆறுதல் 5. எளியோருக்கு நற்செய்தி

இந்த 5 வகை பணிகளைச் செய்யாமல், கெட்டிக்காரத்தனமாக சிலுவைப்பாதை செபத்தில் கலந்து கொண்டு, தப்பி ஓடுவது தவறு. யோனா மாதிரி கடவுள் நம்மை ஒரு கணத்தில் திசை திருப்பிவிடுவார். வாழ்நாளில் கஞ்சனாக உள்ளவன் கடைசியில் டாக்டரிடம் பெரும் பணத்தை இழப்பான். அநியாயமாக சம்பாதிப்பவர்களை பிறர் ஏமாற்றுவார்கள்.

நாம் சம்பாதித்தோம் - நாமே கொடுத்தோம், நிம்மதியாகத் தூங்கினோம் என்ற மனப்பாங்கு வேண்டும். திரு அவையும், திரு ஆட்சியாளர்களும், இறைமக்களுக்கு இந்த பாதையை தான் காட்ட வேண்டும். நம் கோவில்கள் முன்பு எந்த பிச்சைக்காரர்களும் இருக்கக்கூடாது. பிரிவினைக்காரர்கள் தங்கள் போதகர்களுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுத்து, அவர்களைப் பணக்காரர்களாக்கிவிடுகிறார்கள். பணம் பெருகிய வாழ்வில் சாத்தான் எளிதாக புகுந்து விடுவான்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இழக்கிறோமோ அதைவிட அதிகமாக ஆண்டவர் தருவார். கொடுங்கள் கொடுக்கப்படும் என்பது வேதவாக்கு. வாழ்ந்து பாருங்கள் - விண்ணகம் உங்களுடையது தான். நன்றே செய்வீர் - இன்றே செய்வீர்.  

Comment