No icon

வரலாற்றில் உயிர்ப்பு பெருவிழா

கிறிஸ்தவ திருஅவை, ஏப்ரல் 21 ஆம்
தேதி கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா வைக் கொண்டாடுகிறது. இவ்விழாவின் பல அம்சங்களும், பாஸ்கா காலத்தின் மற்ற விழாக்களும் எந்தெந்தக் காலகட்டத்தில் உருப்பெற்றன என்பதை நாம் இங்கே பார்ப்போம்.
கி.பி.30ஆம் ஆண்டில் நம் ஆண்டவர் இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் நிகழ்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கணிக்கின்றனர். ஆண்டவரின் விண்ணேற்றத்துக்குப்பின் தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள், “யூதர்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார்” என்று மக்கள் மத்தியில் போதித்தார்கள். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பலரும் மனமாற்றம் அடைந்து திருமுழுக்குப் பெற்றனர் என்று விவிலியம் சான்று பகர்கின்றது.
திருத்தூதர்களின் போதனைகளால் எருசலேம்
தொடங்கி, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் திருஅவை விரைவாகப் பரவியது. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள்
பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்
கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும்” என்று திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார். இயேசு கிறிஸ்து வாரத்தின் முதல் நாளில் உயிர்த்
தெழுந்ததால், முதல் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வாரத்தின் முதல் நாளில், அப்பம் பிடுவதற்காக அவர்கள் ஒன்றுகூடி வந்தார்கள் (திருத்தூதர் பணிகள் 20:7) என்று காண்கிறோம்.
திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்த முதல் கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வையே ஒரு கொண்டாட்டமாகக் கண்டனர். ஆகவே, கிறிஸ்துவின் மறைபொருள் சார்ந்த எந்தவொரு விழாவையும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம் சிறப்பிக்கவில்லை. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை ஆண்டுக்கு ஒருமுறை யூதர்களின் பாஸ்கா விழாவையொட்டி சிறப்பாக நினைவுகூரும் வழக்கம் தோன்றியது. புதிதாக கிறிஸ்தவம் தழுவியவர்களுக்கு உயிர்ப்புப் பெருவிழா நாளில் திருமுழுக்கு வழங்கும் பழக்கமும் அக்காலத்தில் உருவானது. 
3ஆம் நூற்றாண்டில், கிழக்கத்திய திருஅவை
யைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாஸ்கா விழாவன்றும் (நிசான் 14ந்தேதி), மேற்கத்தியத் திருஅவையின் உறுப்பினர்கள் பாஸ்காவைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமையும் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வழக்கம் இருந்தது. காலக் கணிப்புகள் வேறுபட்டதால், ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு நாளில் இவ்விழாவைக் கொண்டாடும் நிலை காணப்பட்டது. அருளடையாள எண்ணெய்களை பாஸ்கா திருவிழிப்பு வழிபாட்டில் புனிதப்படுத்தும் வழக்கமும் இருந்தது. திருத்தூதர்கள்மீது தூய
ஆவியார் இறங்கி வந்ததன் நினைவாகப் பெந்தக்
கோஸ்து ஞாயிறும் அக்காலத்தில் கொண்டாடப் பட்டது.
4 ஆம் நூற்றாண்டில், உயிர்ப்புப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்காக யூதர்களின்
நாட்காட்டியைச் சாராத, பொதுவான நாள் வேண்டு
மென திருஅவைத் தலைவர்கள் விரும்பினர். 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச் சங்கம், வசந்தகால சமநாளுக்குப் (மார்ச் 21 ஆம்  தேதி)
பிறகு முழுநிலவு நாளையடுத்த முதல்
ஞாயிறன்று இவ்விழாவைச் சிறப்பிக்க ஆணை யிட்டது. அதன் பின் வரும் ஆண்டுகளின் சுழற்சிவட்ட எண்ணிக்கையில் இருந்த குழப்பங் களால், உயிர்ப்புப் பெருவிழாவை வேறுபட்ட நாள்களில் கொண்டாடும் நிலை தொடர்ந்தது. உயிர்ப்புத் திருவிழிப்புத் திருப்பலியில் பாஸ்கா மெழுகுத்திரி பயன்படுத்தும் வழக்கமும் அக்காலத்தில் தோன்றியது.
 உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து 40 ஆம் நாளில், ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை சிறப்பிக்கும் வழக்கம் நான்காம் நூற்றாண்டின் இறுதியில் திருஅவை முழுவதும் ஏற்கப்பட்டது. உயிர்ப்புப் பெருவிழாவை எண் கிழமையாகக் (எட்டு நாள்கள்) கொண்டாடும் வழக்கமும் உருவானது. “கிறிஸ்து உயிர்த்ததால் சாவும் பாதாளமும் தூக்கியெறியப்பட்டன. கிறிஸ்து உயிர்த்ததால் அலகைகள் வீழ்ந்தன, வானதூதர்கள் அக்களிக்கின்றனர். கிறிஸ்து உயிர்த்ததால் வாழ்வு ஆட்சி செய்கிறது” என்ற புனித கிறிசோஸ்தொம் யோவானின் (-கி.பி.407) வார்த்தைகள் உயிர்ப்புப் பெருவிழாவின் மேன்மையைப் பறைசாற்று கின்றன.
5ஆம் நூற்றாண்டில், பெந்தக்கோஸ்து விழா கொண்டாட்டம் சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தது. திருவிழிப்பு வழிபாட்டையும் கொண்டிருந்த இவ் விழாவிலும் புதிய கிறிஸ்தவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. உயிர்ப்பு ஞாயிறு முதல் பெந்தக்கோஸ்து ஞாயிறுவரை பெரும் விழாக்காலமாக கருதப்பட்டது. இந்த ஐம்பது நாட்கள் காலமே, கத்தோலிக்கத் திருஅவையில் பாஸ்காக் காலமாகக் கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பு
ஞாயிறு முதல் இறை இரக்கத்தின் ஞாயிறு வரையிலான காலம் ‘பாஸ்கா எண்கிழமை’ என்று அழைக்கப்படுகிறது.
கி.பி.525ஆம் ஆண்டு முதல் கி.மு. - கி.பி. என்று காலத்தைப் பகுத்த புனித தியோனைசியுஸ் எக்சிகூஸ் (470-544) உருவாக்கிய நாட்காட்டியைக் கொண்டு உயிர்ப்பு பெருவிழாவுக்கான நாள் கணிக்கப்பட்டது. இதனால், எல்லா இடங்களிலும் ஒரே தேதியில் இவ்விழாவைக் கொண்டாட வழிவகை ஏற்பட்டது. 6 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக, உயிர்ப்புப் பெருவிழாவுக்கு பதில் புனித வியாழனன்று அருளடையாள எண்ணெய்களைப் புனிதப்படுத்தும் நடைமுறை உருவானது. பாஸ்கா மெழுகுத்திரியில் நடப்பு ஆண்டின் எண்ணைப் பதிக்கின்ற வழக்கம் 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது.
8ஆம் நூற்றாண்டு வரை, உயிர்ப்புப் பெரு
விழாவுக்காக நள்ளிரவில் தொடங்கி இரவு
முழுவதும் நடைபெற்ற திருவிழிப்புச் சடங்குகள்,
விடியற்காலையில் திருவிருந்துடன் நிறை வடைந்தன. 9 ஆம் நூற்றாண்டில், புனித சனிக் கிழமை பிற்பகலிலேயே உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு சடங்குகளை சிறப்பிக்கும் வழக்கம் சில இடங்களில் தோன்றியது. அதன் விளைவாக, வழிபாடுகள் பொருளற்ற சடங்குகளாக மாறின.  10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்ற விண்
ணேற்றப் பெருவிழாவின் எண்கிழமைக் கொண்டாட்டம், 12 ஆம் நூற்றாண்டில் உரோமில் ஏற்கப்பட்டது. 
புனித சனிக்கிழமை பிற்பகலிலேயே உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பல இடங்களுக்குப் பரவியது. அதே காலத்தில், வண்ணந்தீட்டிய முட்டைகளை (Easter Egg) உயிர்ப்பு பெருவிழா நாளில் பரிசளிக்கும் வழக்கம் ஐரோப்பிய நாடுகளில் உருவானது. 1566ஆம் ஆண்டு திருத்தந்தை 5ஆம் பயஸ், புனித சனிக்கிழமை பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் உயிர்ப்புத் திருவழிபாடுகளை நடத்தத் தடைவிதித்து ஆணை வெளியிட்டார். 1582 ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் கிரகோரி அறிமுகம் செய்த நாள்காட்டி சீர்திருத்தத்தை ஆர்த்தோடாக்ஸ் திருஅவையினர் ஏற்காததால், உயிர்ப்புப் பெருவிழா தேதியில் மீண்டும் முரண்பாடு தோன்றியது.
17ஆம் நூற்றாண்டில், பிரிந்த சகோதரர்களின் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தில் ஈஸ்டர் முயல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 1951ல் திருத்தந்தை 12 ஆம் பயஸ், பாஸ்கா திருவிழிப்பை புனித சனிக்கிழமை இரவிலேயே கொண்டாட அனுமதி
வழங்கினார். 1955ஆம் ஆண்டு, ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவுக்கான எண்கிழமை கொண்டாட்டம் நீக்கப்பட்டது. 2000 ஏப்ரல் 30 ஆம் தேதி, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை ‘இறை இரக்கத்தின் ஞாயிறு’ என்று திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அறிவித்தார்.
உயிர்ப்புப் பெருவிழா தற்போது, மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் வரும் ஒரு ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. மேற்கத்தியத் திருஅவையினர் கிரகோரியன் நாள்காட்டியையும், கிழக்கத்திய திருஅவையினர் ஜூலியன் நாள்காட்டியையும் பயன்படுத்துவதால், சில ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் வேறுபட்ட நாள்களில் இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது. உயிர்ப்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடுவதற்கான தேதியை உருவாக்க, 1997ஆம் ஆண்டு ‘திருஅவை களின் உலக மன்றம்’ வைத்த கோரிக்கை பரிசீலனை யில் உள்ளது. 
“உயிர்ப்பின் நற்செய்தி மிகவும் தெளிவானது. நாம் உயிர்த்த இயேசுவிடம் திரும்பிச் சென்று, அவரது உயிர்ப்புக்குச் சாட்சிகளாக மாற வேண்டும். இது நேரத்துக்கு திரும்பிச் செல்வதோ, ஒரு விதமான ஏக்கமோ அன்று. இயேசு இவ்வுலகில் மூட்டவந்த தீயைப் பெற்றுக்கொள்ளவும், அதை உலகின் கடையெல்லைவரையுள்ள மக்களிடம் கொண்டு செல்லவும் நாம் திரும்பிச் செல்வதாகும்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். நாம் உயிர்த்த இயேசுவின் அன்பில் முழுமையாக நனைந்து, அவரது நற்செய்தியின் சாட்சிகளாக மாற இந்த பாஸ்கா காலம் நமக்கு உதவட்டும்!

Comment