No icon

ஆடம்பர அரசியா? ஏழைகளின் அன்னையா?

முன்னுரை
‘அலங்கார அன்னை’ எனும் தமிழ்ச் சிறப்புப் பெயர் ஒன்று மரியாவுக்கு உண்டு. அப்பெயரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்களும் தமிழகத்தில் இருக்கின்றன. மனிதராக இம்மண்ணில் பிறப்பெடுத்த தம் மகன் இயேசுவின் தாய் மரியாவை இறைத்தந்தை வேறு எந்த மானிடப் பெண்ணையும்விட மிகுதியாகத் தம் அருட்கொடைகளால் அணிசெய்தார் எனும் அருமையான செய்தியை அழகாக எடுத்துரைக்கிறது இச்சிறப்புப் பெயர். “அருள் மிகப் பெற்றவரே வாழ்க” (லூக் 1:28) என வானதூதர் அவருக்குச் சொன்ன வாழ்த்தும் இதில் ஓரளவு எதிரொலிக்கிறது.
ஆம், மரியன்னையின் பேரெழில் அவரது உடல் தோற்றத்தின் வடிவழகோ பிற அலங்காரங்கள் அல்லது ஆடம்பரங்களின் கவர்ச்சியோ அல்ல. அது இறைவன் அவருக்குத் தந்த அருளின் மிகுதி, அழைப்பின் உயர்வு, “நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என அந்த அழைப்பை முழுமையாக ஏற்ற அவரது விழுமிய வீரமிகு நம்பிக்கை, அதற்கேற்ப உலகம் வாழ தம்மையும் தம் மகனையும் அர்பணித்த அவரது தியாகம் என்பவையே அன்றி வேறு எதுவும் அல்ல. ஆம், இறை அருளே அவரது அழகு, அன்பே அவரது ஒப்பற்ற எழில், நம்பிக்கையே அவரது ஆளுமையின் மேன்மை, தியாகம்தான் அவரது நிறை மாட்சியும் உயர் சிறப்பும்.
ஆனால், கத்தோலிக்க மரியா பற்றன்பர்கள் எல்லாரும் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என நாம் சொல்லுதற்கு இல்லை. இதில் பல ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியரும் அடங்குவர். இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் அவர்கள் மரியாவை ‘மண்ணுக்கும் விண்ணுக்கும் அரசி’ என அழைப்பது மட்டுமன்றி மண்ணக அரசிகளுக்கான தோரணையில் அவருடைய திரு உருவங்களுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் பட்டாடைகள் அணிவிக்கின்றனர்; பல இலட்சம் செலவில்
மணிமகுடம் சூட்டுகின்றனர்;  இன்னும் பல இலட்சங்கள் செலவிட்டுத் தங்க நகைகள்
அணிவிக்கின்றனர்; அவருடைய ஏழை மக்களை மறந்து அல்லது கறந்து கோடிகள் செலவிட்டு அவரது மாட்சிக்காகக் கோபுரக் கோயில்களும் குருசடி களும் கட்டுகின்றனர்.
அண்மையில் மரியாவை அருள் காவலராகக் கொண்ட ஒரு சிற்றூர் கோயிலுக்குச் சென்றிருந் தேன். அன்று அவ்வூர் மக்கள் அன்னைக்கு எடுத்த பத்து நாள் திருவிழாவின் நான்காம் நாள். அன்னையின் திருஉருவப் பகுதி மட்டும் அல்ல, திருப்பீடமும் பீடமுற்றமும்கூட பூக்கடையாகவே காட்சி அளித்தன. அன்று ஒரு நாள் மட்டும் கோயில்
பூக்களுக்காக அவர்கள் செல
விட்டிருந்தது ரூபாய் 12 ஆயிரம். “ஏன் இவ்வளவு பூக்கள்?” என்ற என் கேள்விக்குக் கிடைத்த பதில்தான் சற்று வேடிக்கையானது; “நேற்று விழாவைச் சிறப்பித்த 10ஆம் அன்பியத்தார் 10 ஆயிரத்
திற்குப் பூக்கள் வாங்கியிருந்தார்
கள். பங்குப்பேரவைத் துணைத் தலைவரே எங்களது 11ஆவது அன்பியம்தான். அவர்களைவிட நாங்கள் இளைத்தவர்களா, என்ன?”
இவ்வாறு, ஆடம்பர அரசி
யாகக் கொண்டாடுவது, ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இம்மண் ணில் வாழ்ந்த வரலாற்று மரியா
வுக்கு இயைந்ததா? அல்லது இன்று விண்ணக மாட்சியடைந்துள்ள அவருக்கு ஏற்றதா? இதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மை யான, உயர்வான சிறப்பா? இதனை அன்னை மரியா உண்மையாகவே விரும்புவார்களா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுப்பார்ப்பது நமது மரியா பற்றன்பை சீர்படுத்திச் செம்மைப்படுத்த இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்.
வரலாற்று மரியா ஓர் ஏழைப் பெண்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத்து ஊரில் வாழ்ந்த வரலாற்று மரியா ஓர் ஏழைப் பெண். இதனை நாம் நற்செய்தி நூல்கள் தரும் தகவல்களிலிருந்தும் அண்
மைக்கால வரலாற்று, அகழ்வியல் ஆய்வுகளி லிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
நற்செய்தி ஏடுகள் காட்டும் மரியா நாசரேத்து
எனும் எத்தகைய சிறப்பும் அற்ற ஊரிலே வாழ்ந்தவர்; யோசேப்பு எனும் கூலித் தொழிலாளிக்கு வாழ்க்கைப்பட்டவர்; பெத்லகேம் சென்றபோது, விடுதியில் இடம் இன்றி ஒரு மாட்டுத்தொழுவத்தில் தம் மகனைப் பெற்றெடுத்து, கந்தைத் துணிகளில் பொதிந்து அவரை விலங்குகளின் தீவனத் தொட்டியில் கிடத்தியவர். மேலும் குழந்தை இயேசுவை அவர் கோயிலில் ஒப்புக்கொடுத்து மீட்ட போது அவர் தந்தது ஏழைகளின் காணிக்கையாகிய இரு மாடப்புறாக்கள் அல்லது புறாக் குஞ்சுகளே (லூக் 2:24). மேலும், தலைசாய்க்கக் கூட இடமில்லாதவராய் இயேசு வாழ்ந்து, பணிசெய்ததும் கடன் வாங்கிய கல்லறையிலே அவர் அடக்கம் செய்யப்பட்டதும் அவர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
வரலாற்று, அகழ்வியல் ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றின்படி இயேசு காலத்து நசரேத்து ஏறக்குறைய 500 பேர் கூட்டுக் குடும்பங்களாக 50 வீடுகளில் வாழ்ந்த ஒரு சிற்றூர். செல்வர் அல்லது ஓரளவு வசதி வாய்ந்தவர் வாழ்ந்தது எனச் சொல்லும் வகையிலான ஒரு வீடுகூட அங்கு அன்று இல்லை. மேலும், அன்றைய பாலஸ்தீனத்தில், பணக்காரர்கள் 10 விழுக்
காட்டினரே; அவர்கள் வாழ்ந்தது பெரிதும் எருசலேம்
போன்ற பெருநகர்களில்தான். ஏனைய 90ரூ மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழைக் குடியானவர்களும் கூலித் தொழிலாளர்களுமே. நாசரேத்தில் வாழ்ந்தது பெரிதும் ஏழைக் குடியான
வர்களே. யோசேப்பு வேளாண்தொழிலும் அது இல்லாத வேலைகளில் தச்சுத் தொழில் உட்பட்ட கட்டிடத்தொழிலும் செய்த ஒரு குடியானவர் அல்லது கூலித் தொழிலாளரே. அவர் மனைவி மரியாவும் அவருடன் வயலிலும் தோட்டத்திலும், கட்டிடத்தொழிலும் அல்லது தச்சுத் தொழிலிலும், வெயிலிலும் குளிரிலும் வீட்டிலும் வெளியிலும் கடினப்பட்டு உழைத்து பிழைப்பு நடத்தியவரே.
எனவே பிற்கால ஐரோப்பிய ஓவியர்
களும் சிற்பிகளும் படங்களில் வரைந்தும் திருஉருவங் களாக வடித்தும் தந்து சென்றுள்ளதுபோல மரியா செக்கச் சிவந்த அல்லது வெள்ளைவெளீரெனத் திகழ்ந்த அழகுப் பதுமையோ, பகட்டான  பட்டாடை யும் பளபளக்கும் மணிமுடியும் தரித்த ஆடம்பர அரசியோ அல்ல. மாறாக, அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பாமர அல்லது ஏழைப் பெண். “அடிமையின் தாழ்நிலை” (லூக் 1:48) என அவர் தம் நிலைப்பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இதுவே.
விண்ணக மரியாவும் ஆடம்பர அரசி அல்ல
மரியா ஏழையாக மட்டும் அல்ல, இறைவனையே முற்றிலும் சார்ந்திருக்கும் எளிய மனம் கொண்டவராகவும் வாழ்ந்தவர். இதனால்தான் “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணகம் அவர்களுக்கே உரியது” (மத் 5:2) எனும் இயேசுவின் உறுதிமொழிக்கு ஏற்ப இறையாட்சியின் நிறைவாகிய விண்ணக மாட்சி எனும் பேறு பெற்றவர்.
விண்ணக மாட்சி என்பது தலையிலே தங்கக் கிரீடம் தாங்கி, பளபளக்கும் பட்டாடைகளுடனும் மின்னும் வண்ண விளக்குகளுடனும் வானவீதியிலோ அலங்கார தேர்களிலோ வலம் வருவது அல்ல. மாறாக அது இறைவனின் அன்பிலும் அருள் பண்பிலும் உலகோர்க்கு வாழ்வளிக்கும் உயர் வல்லமையிலும் நிறைவாகப் பங்கேற்கும் நிலையே. “கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்” (1கொரி15:45) என உயிர்த்த இயேசுவின் மாட்சிநிலை பற்றி பவுலடியார் குறிப்பிடுவது ஓரளவு மரியாவுக்
கும் பொருந்தும். அதாவது, இன்றும் மரியா எளியவரே, ஏழையரின் உள்ளத்தவரே, எல்லாருக் கும் அருளுதவி நல்குபவரே. இதுவே இறைவனில் மலர்ந்த மரியாவின் மாட்சி.
ஆம், சின்ன மனிதர்கள்தாம் பெரிய ஆடம்
பரங்களையும் அலங்காரங்களையும் விரும்புகின் றனர். பணி வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்காத
வர்கள்தாம் பல வேளைகளில் வெள்ளிவிழா, பொன்விழா என பெரிய அலம்பலும் ஆரவாரமும் செய்கின்றனர். உண்மையிலேயே பெரிய மனிதர்கள் எப்போதும் எளியவர்களாகவே இருப்பர்;
‘நிறைகுடம் ததும்பாது’ எனும் தமிழ்ப் பழமொழி இதையே உணர்த்துகிறது. இது உயிர்த்த இயேசுவுக்கு மட்டும் அல்ல, மரியாவுக்கும் புனிதர்
களுக்கும் பொருந்துவதே. அவர்களது விண்ணக மாட்சி மண்ணக அரசர்கள், அரசிகள், ஏழைகளை உறிஞ்சிக் கொழுத்த பணக்காரர்கள் என்போரின் பாணியில் பட்டும் பகட்டும் அரியணையும் மணிமுடியும் அல்ல. மாறாக ஏழை எளியவருடன் ஒன்றாகி, எல்லாருக்கும் உறவாகி வாழ்வளிக்கும் வல்லமையுடன் உடனிருந்து செயல்படுவதே அவர் களது மாட்சி. ஆம், நாம் அவர்களை உயர்த்துவது அல்ல, அவர்களால் நாம் உயருவதே அவர்களுக்கு உண்மையான பெருமை. “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” (யோவா 12:32) எனும் கூற்றின் படி இயேசு எல்லாருக்கும் வாழ்வளிக்கும் தமது சிலுவைச் சாவே தமது உயர்வு, உயிர்ப்பு என கூறுவதும் இதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாத  மரியா பற்றன்பர்கள் பலர் என்றும் எளியவரும் ஏழையரின் அன்னையுமான அவரை ‘அரசி’ என அழைக்கின்றனர்; அரசிக்கு உரிய பகட்டான ஆடைகள், அலங்காரங்கள், அணிகலன்கள், ஆடம்
பரங்கள் என்பவற்றுடன் அவரைப் பணக்காரப் பாணியில் காட்டி ஆதிக்க அரசிகள், செல்வர்கள் கூட்டத்தில் சேர்க்கின்றனர்; இவ்வாறு ஏழை களிடமிருந்தும் பாமரர்களிடமிருந்தும் அவரை அந்நியப்படுத்தவும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதே அவரை மாட்சிப்படுத்துவது என அவர்கள் கருதுவது தவறு என்பது சற்று சிந்தித்தாலே தெளிவாகும். ஏனெனில், அத்தி பூத்தாற்
போல் அங்கொருவர் இங்கொருவர் தவிர அனைத்து அரசர்களும் அரசிகளும் பெரும் செல்வர்களும் ஏழைகளைச் சுரண்டிச் சொத்து, சுகம் சேர்த்தவர்களே; பாமர மக்கள் தங்கள் சகோதரர்கள் என்பதை மறந்து பகட்டாக அரண்மனைகளில் தாங்கள் மட்டும்  ஆடம்பரமாக வாழ்ந்தார்களே. பொதுவாக அவர்கள் சுரண்டல்காரர்கள், சுயநல
வாதிகள், ஆதிக்க வர்க்கத்தினர் என்பது தெரிந்ததே. மேலும், மன்னராட்சி என்றாலே அது ஓர் ஆதிக்க
ஆட்சி அமைப்புதான். இசுரயேல் மக்கள் தங்களுக்கு ஓர் அரசன் வேண்டும் எனக் கேட்ட போது சாமுவேல் தர மறுத்ததும், அரசர்கள் அல்லது அரசிகள் ஆட்சியில் அமர்ந்தால் என்னென்ன
அநீதிகள் செய்வார்கள் என அவர் பட்டியல் இடுவதும் (1சாமு 8:10-18) உண்மையே என்பதை இசுரயேலரின் வரலாறு மட்டும் அல்ல, நம் தமிழ்நாட்டு
வரலாறும் உலக வரலாறும் எண்பிக்கின்றன. இந்த ஆதிக்க அரசர்கள் அல்லது ஆடம்பரப் பணக்
காரர்கள் வரிசையில் மரியாவைச் சேர்ப்பது எந்த வகையில் அவருக்குப் பெருமையாக இருக்க முடியும். இதனால்தான் விவிலியம் மரியாவை எங்கும் அரசியாகக் காட்டவில்லை; மிகப் பெரும் பான்மையான காட்சி அனுபவங்களிலும் மரியா அரசியாகவோ ஆடம்பரப் பெண்ணாகவோ தோன்றவும் இல்லை.
அப்படியெனில் ‘மரியா விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டார்’ எனும் மறைநிகழ்வு ஏன் செபமாலையில் இடம்பெறுகிறது எனும் கேள்வி எழுகிறது. முதலில், அது ஒரு விவிலியப் படிப்பினை அல்ல. அடுத்து, தொடக்கக்காலத் திருஅவைத் தந்தையர்களும் மரியாவை அரசி எனக் குறிப்பிடவில்லை. அது அதிகாரபூர்வமாக திருஅவை ஆசிரியம் அறிக்கையிட்ட ஒரு நம்பிக்கைக் கோட்பாடும் அல்ல.
மாறாக, அவ்வாறு மரியாவைக் கருதுவது நான்காம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவம் தன்னையே மன்னராட்சியோடு இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட ஒரு தடுமாற்றமே. அரசர்களும் அரசிகளும் ஆடம்பரப் பிரபுக்களுமே உயர்ந்தவர்கள், உன்னதமானவர்கள் என மக்கள் தவறாகக் கருதிய ஒரு காலம் அது. எனவே அரசி என அழைப்பதுதான் மரியாவின் உயர் சிறப்பைச் சொல்ல சிறந்த முறை என அவர்கள் எண்ணிச் செயல்பட்டனர். மேலும் மரியாவுக்கு விண்ணில் அரசிகளுக்குரிய மணிமுடி சூட்டப்பட்டது என்பது அவரது நிறைவாழ்வின் மாட்சியையும் வாழ்வளிக்கும் அருளாற்றலையும் குறிக்கும் ஓர் உருவகமே அன்றி உண்மை நிகழ்வு அல்ல. மறுமையில் பெண் கொள்வதும் இல்லை கொடுப்பதும் இல்லை (காண். மத் 22:30) என இயேசுவே கூறியுள்ளதுபோல அங்கே மணிமுடி சூட்டுவதும் இல்லை, சூடுவதும் இல்லை; பட்டாடையும் இல்லை, பகட்டுகளும் இல்லை. அங்கு எல்லாம் அன்புமயம், அருள்மயம், இன்பமயம், இறைமயமே அன்றி வேறு எதுவும் இல்லை.
ஆடம்பரப் பெருக்கமும் அருள்வாழ்வுச் சுருக்கமும்
மண்ணக வாழ்வில் மட்டும் அல்ல, மறுமையின் நிறைவிலும் எளிமையே மரியாவின் அழகு; ஏழைகளுடன் நடப்பதே அவரது உயர்வு; அவர்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஆன முயற்சிகளிலும் போராட்டங்களிலும் இணைந்து ஈடுபட்டு அவர்களுக்கு அருளாற்றல் நல்கும் தோழமையே அவரது மேன்மை. இயேசுவுடன் இணைந்து மரியா மானிடருக்குத் தரும் இத்தகைய உறவும் உடனிருப்பும் அருளாற்றலும் ஈடுபாடுமே இறைவன் அவருக்குத் தந்துள்ள விண்ணேற்பு எனும் விழுமிய மாட்சியும் சிறப்பும். இதைவிடப் பெரும் மாண்பும் மாட்சியும் வேறு எவரும் அவருக்குச் சேர்க்க முடியாது. எனவே அவரை நாம் போற்றிப் புகழ்வதும், வாழ்த்தி வணங்குவதும், விழா எடுத்துச் சிறப்பிப்பதும் அவரது பெருமையையும் சிறப்பையும் இன்னும் அதிகம் வளர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, அன்பிலும் அருளிலும் நம்பிக்கையிலும் இறையாட்சி ஈடுபாட்டிலும் அவரைப்போல நாமும் வளர வேண்டும் என்பதற்காகவே. “உம்மைப்
போற்றிப் புகழ்ந்துரைப்பதால் உமது மாட்சி ஏற்றம் பெறாதெனினும் நாங்கள் மீட்படைய அது பயனளிக்கிறது” எனும் திருப்பலி மன்றாட்டு மரியாவுக்கும் பொருந்துவதே. ஆம், அவரை வாழ்த்துவதால் நாம் வாழுகிறோம்; நாம் நன்கு வாழ்வதுதான் அவரை உண்மையாகவே வாழ்த்துவது. அவரை மாட்சிப்படுத்துவது என்பது
அவரை மாதிரியாகக் கொண்டு நாம் மாற்றம் அடையவே. அத்தகைய மாற்றமும் வளர்ச்சியும் நம்மில் நிகழவில்லையென்றால் அது நாம் அவருக்குத் தரும் போற்றியும் புகழுரையும் சிறப்பும் ஆடம்பரங்களும் பொய்களும் போலிகளுமே அன்றி வேறு எதுவும் இல்லை.
மரியாவின் உயர் பண்புகளையும் பணிகளை யும் நமக்கு உணர்த்தும் வகையிலான எளிய அலங்காரங்களும் சிறிய ஆடம்பரங்களும் அவசியம் என்பதை எவரும் மறுப்பதில்லை. ஆனால், அதற்குப் பட்டும் பகட்டும் மிகை ஒப்பனைகளும் ஓலங்களும் அவசியம் அற்றவையே. மேலும், அவற்றைப் பெருக்குவதால் அருள்வாழ்வு வளருகிறது எனப் பொருள் இல்லை. மாறாக, பெருகும் ஆடம்பரங்கள் பொதுவாக அருகும் அருள்வாழ்வின் அறிகுறியே அன்றி வேறு எதுவும் அல்ல. மரியாவைப் பின்பற்றி வாழ்வதற்கு மாற்றுகளாக அவை விளங்குவதும் உண்டு. அவ்வாறு வாழத் தவறுவதால் ஏற்படும் மனஉறுத்தலை மூடி மறைக்கவும் மிகை ஆடம்பரங்கள் அறிந்தோ அறியாமலோ மக்களால் பயன்படுத்தப்படுவதும் உண்டு. இத்தகைய அலங்கார, ஆடம்பரப் பெருக்கத்தில் நம் பங்குகள், திருத்தூதுக் கழகங்கள், அன்பியங்கள் என்பவற்றிற்கு இடையே எழும் போட்டிகள் அவை செய்யப்படுவது அவற்றின் பெருமைக்காகவே அன்றி மரியாவின் பெருமைக்காக அல்ல என்பதையும் புலப்படுத்துகின்றன.
மரியா வணக்க முறைகளில் புதுப்பித்தல்
எனவே அரச, ஆடம்பர, பணக் காரத் தோரணையில் மரியாவைச் சித்தரிப்பதையும் மிகை ஆடம்பரங்களால் அவருக்குச் சிறப்புச் செய்வதையும் நாம் தவிர்ப்பது அவசியம். பட்டுகளும் பளபளப்புகளும், தங்கக் கிரீடங்களும் தேர்களும், வைர நகைகளும் நிச்சயம் அவருக்குத் தேவை அல்ல. அவற்றை அவர் விரும்புவதும் இல்லை. மாறாக, அவருடைய பண்புகளிலும் இறையாட்சி சமூகம் செய்யும் ஈடுபாட்டிலும் வளரும் மக்களே அவரது உண்மையான, உயர்வான மாட்சி. குறிப்பாக, அவருக்குச் செய்யும் ஆடம்பரங்களை எளிமைப்படுத்தி ஏழைகளை வாழ வைப்பதே அவர் தேடும் உண்மையான பற்றன்பு. ‘ஏழைகளுக்குச் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத் 25:40,45) என்பது மரியாவின் கூற்றும்தான்.
மேலும், மரியா வணக்கம் மிகை வளர்ச்சி கண்டிருந்த ஒரு நிலையே இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்திற்கு முன்பு கத்தோலிக்க திருஅவையில் பரவலாகி இருந்தது. அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து இங்கு கொணரப்பட்டு, இன்றும் இங்குத் தொடர்ந்து நிலைக்கின்ற மரியாபற்றிய மிகைப்படுத்தப்பட்ட சிறப்புப் பெயர்களும் அடைமொழிகளும் நற்செய்தி நூல்களின் அடிப்படையிலும் இரண்டாம் பொதுச்சங்கப் படிப்பினைகளின் ஒளியிலும் மறுஆய்வு செய்யப்படுவது அவசியம். ‘அரசி’ என்பது மட்டும் அல்ல. ‘தாவீதின் உப்பரிகையே’ ‘தந்தமயமான கோயிலே’, ‘தங்கமயமான கோயிலே’ என்பனபோன்ற சிறப்புப் பெயர்கள் விவிலிய அடித்தளம் அதிகம் அற்றவை மட்டுமன்றி, இன்றைய நம் வாழ்வுக்கு அதிகம் பொருளும் இல்லாதவை. எனவே, அவற்றைத் தவிர்த்து, விவிலியம், அண்மைக்கால திருஅவை ஆசிரிய படிப்பினைகள் என்பவற்றின் அடிப்படையில் நம் வாழ்வுக்கு அதிக அர்த்தமும் அழைப்பும் அருளும் தரும் புதிய புரிதல்களை நம் அருளுரைகளிலும், மன்றாட்டுகளிலும், புகழுரைகளிலும், மன்றாட்டு மாலையிலும் இணைத்துக்கொள்வது அவசியம். அருள்மிகப் பெற்றவர், ஆகட்டும் என்றவர், நம்பிக்கையின் மாதிரி, அர்ப்பணக் கன்னி, சீடத்துவத்தின் சிகரம், ஏழைகளின் அன்னை, வீரத்தின் விளைநிலம், தியாகத்தின் திருஉருவம், அருளின் நிறைஅழகு, புத்துலகப் பெண் என்பன அதற்குச் சில எடுத்துக்காட்டுகள். இவ்வாறு மரியா வணக்கம் புதுப்பிக்கப்படும்போது நம் கிறித்தவ வாழ்வும் ஆழம் பெற்று அருள்மயமாகும் வாய்ப்பு அதிகம்.
 

Comment