No icon

அருள்முனைவர் சகோதரி ஜெரார்டின்

முதியோர் இல்லம்

ஜெகன் ஒரு கால்பந்தாட்ட வீரன். அவன் காலில் பட்ட பந்து அவனது வெற்றிக்கு இலக்கான கோட்டுக்குள் சீறிப்பாய்ந்து விடுவதே அவன் விளையாட்டின் திறமை.

பள்ளிக்கூட நாட்களில், வகுப்பு முடிந்ததும் புத்தகங்களும், நோட்டுகளும் அவன் வீட்டின் சன்னல் வழியே உள்ளே நுழைந்துவிடும். ஆனால் அவனை மாலை 6 மணிக்குத் தான் வீட்டில் பார்க்க முடியும். அதற்கு முன் பார்க்க வேண்டுமானால் பள்ளி கால் பந்தாட்ட மைதானத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

படிப்பில் அவன் சுட்டி, ஆனால், வீட்டில் புத்தகத்தைப் படிக்கத் திறந்தால், அவனையும் அறியாமல் கண் இமைகள் மூடிவிடும். இதற்காக அவன் அப்பாவிடம் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

அவன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கும் போது, இரு சாதியினைச் சார்ந்த மாணவர்கள் மோதலில் ஒரு சாதியைச் சார்ந்தவன் இன்னொரு சாதியினைச் சார்ந்தவனை அரிவாளால் வெட்டி சாய்க்க, அந்த துயர நிகழ்வை கல்லூரியின் கால்பந்து மைதானத்தில் நின்று பார்த்த ஜெகன் தன்னிலை இழந்தான். இந்த நிகழ்வுக்குப் பின் தூக்கமின்றி அவன் கழித்த இரவுகள் பல. எனவே நரம்பியல் மற்றும் மனவியல் மருத்துவர்களிடம் கொண்டு செல்லப்பட்டான். மருத்துவர்கள் தேவையான மருந்தை கொடுத்துவிட்டு, அவனது வாழ்க்கையில் எவ்வித அதிர்ச்சியும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அவனது அப்பாவிடம் கூறினர்.

ஜெகன் அப்பா, அம்மாவிடம் சொன்னார் ‘ஜெகனுக்கு நாம் திருமணம் பார்க்க வேண்டாம். அவனை நம்ம காலம் வரை பார்த்துடலாம். அதுக்கப்புறம் என்ன செய்யலாம் என யோசிப்போம். அம்மாவுக்கும் அது சரியெனப்பட்டது.

ஜெகனுக்கு மனதுள்,‘ எனக்கு கலியாணம்னு ஒண்ணு இருக்காதா?

இப்பவே அப்பா, அம்மாவுக்கு பாரமா? எப்படித்தான் தனியா வாழப் போறேனோ’ என்ற கவலை இருக்கத்தான் செய்தது. ஆனால் அவன் யாரிடமும் சொல்லாமல், அமைதியில் வாழ்ந்தான்.

அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் அவனுக்கு நிகழ்ந்தது வேறொன்று. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைபார்த்து வந்த அவனைத் திருமணம் செய்து கேட்டவர்களிடம், ஜெகனது நிலையைச் சொல்லி வைத்தார் அவனது அப்பா.

பக்கத்து ஊரிலிருந்து அவனை வரன் கேட்க வந்த பெரியவரிடம் அப்பா எப்படி சொல்லியும், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லி, திருமணத்தை நடத்தி வைத்தார் அப்பா.

திருமணம் என்கின்ற ஒன்று தன் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்று நினைத்த ஜெகனுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாகவே கடந்தது. அழகிய ஓர் ஆண் மகனுக்கு அவன் தந்தையானான்.

‘அவனது நோய்க்கு அவன் இரவில் தினமும் மாத்திரைகள் எடுக்க வேண்டும். மாத்திரை எடுத்தவுடன் தூங்கிவிடுவான். எது நடந்தாலும் தெரியாது. சில வேளைகளில் காலையில் அயர்ந்து தூங்கிவிடுவான். தூக்கத்தில் அவனை எழுப்பக் கூடாது’. இது தான் டாக்டரது உத்தரவு.

ஒரு நாள் காலை மனைவி சொன்னாள் ‘கரண்ட் பில் கட்டணும். இன்னிக்குத் தான் கடைசி நாள்’. அவன் சொன்னான் ‘எனக்கு இன்னைக்கு உடம்புக்கு அசதியா இருக்கு. பையனை அனுப்பு’ இதைக்கேட்ட மகன் ஆமா, தின்னுட்டு, டி.வில கிரிக்கெட் பாத்துட்டு இருக்கிறதத் தவிர வேற என்ன வேலை தான் செய்றீங்க டாடி? வேலை செய்யணும்னா சுத்த சோம்போறி. எங்கிட்ட உங்க ஏமாத்து வேலைய வச்சிடாதிங்க’.

ராணி, எனக்கு முடியல்ல. பையன்கிட்ட போகச் சொல்’, இதைக் கேட்ட அவன் ஜெகனின் சட்டையைப் பிடித்தான், கிறுக்கா ஒனக்கு இந்த ஒரு வேலை கூட மம்மிக்கு செஞ்சுருக்க முடியாது? பொய் சொல்லாம போல நாயே’.

இதைக்கேட்ட ராணி தன் மகனைத் தட்டிக் கேட்கவில்லை. ஜெகனுக்கு தூக்கி வாரி போட்டது. ஜெகன் கலாச்சாரத்தின் பின் சற்று நகர்ந்து வந்து யோசிக்க ஆரம்பித்தான். இதே மாதிரியான பேச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்தன.

ஒரு நாள் அவன் அக்காவுக்கு போன் பண்ணினான்.

‘அக்கா, எனக்கு வீட்ல இருக்க பிடிக்கல்ல.

என்ன எல்லாருமே வெறுக்கிறாங்க’

ஏன்டா தம்பி, இப்படிச் சொல்றா?

‘நான் எந்த ஐடியா சொன்னாலும், எந்த விஷயம் ஆனாலும் எடுத்துக்க மாட்டேங்கிறாங்க’.

அப்படி நீ என்ன தான் நடந்தது?

‘அன்று ஊரடங்கு, வேலைக்கு ஆட்கள் வைக்கக் கூடாது. வீட்டு வேலை நடந்தால், அரசாங்கம் வீட்டை சீல் வச்சிடும்’. அதனால ஆட்களை வேலைக்கு கூப்பிட வேண்டாம்’னு சொன்னேன். உடனே மகன் சொன்னான்,

‘நான் ஆட்களை வேலைக்கு வரச் சொல்லிவிட்டேன் எனக்குத் தெரியாது, நீங்க தான் மேற்பார்வை செய்யணும்’ எனக்கு வேற வேலை இருக்கு’

உடனே ராணி சொன்னா ‘உங்களுக்கு இந்த வேலைய பாக்கிறத தவிர வேற என்ன வேலை தான் இருக்கு?’

மகன் ‘ஏ தப்பளையா? உனக்கென்னல தெரியும்?’ என்று கேட்டான்.

அக்கா ‘இப்போ சொல்லுங்க. நான் சொன்னது தப்பா?’

இதைக் கேட்ட அக்காவின் இரத்தம் துடித்தது. போன் போட்டு தம்பி மனைவியை திட்ட நினைத்தாள். மறுகணம் யோசித்தாள்.

தன்னால், அவனுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. குடும்பத்தில ஆயிரம் இருக்கும். அதுக்காக, அந்த குடும்பத்து விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று நினைத்த அவளது கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள் துளிர்த்தன. பாசமான தம்பி, இப்படி அவமானப்படுவதை அவள் விரும்பவில்லை. சின்ன வயசுல அவளும் அவனிடம் சண்டையிட்டிருக்கிறாள். ஆனால், இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை.

‘தம்பி, கவலப்படாதப்பா. வீட்டுக்குள் ஆயிரம் இருக்கும். கொஞ்ச நேரத்துல அவங்க சொன்னது தப்புன்னு நினைப்பாங்கப்பா’ என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

 ‘அக்கா, எனக்கு இந்த வீட்ல நிம்மதி இல்ல. நான் சொல்றதுக்கு எதிரா தான் மத்தவங்க பேசுறாங்க. நான் நினைக்கிறதுக்கு எதிராத் தான் மத்தவங்க நினைக்கிறாங்க.

எனக்கு மனநிலை சரியா இல்லையா அக்கா?’ என்று கேட்டான். ஒவ்வொரு தடவையும், தம்பி போனில் கூப்பிடும் போது அக்காவுக்கு கவலைதான். ஆனால் அதை அவள் வேறு யாரிடமும் சொல்வதில்லை.

சில நாட்கள் ஜெகன் பேச்சைக் கேட்க அக்காவுக்கு எரிச்சலாகத் தான் இருக்கும். ‘உங்க வீட்டு சமாச்சாரத்தை எங்கிட்ட சொல்லாதே’ன்னு சொல்வாள்.

ஒரு நாள் அவன் சொன்னான் ‘அக்கா என்னோட மனகஷ்டத்த யாரிட்டேயும் சொல்ல பிடிக்கல்ல. உங்ககிட்ட சொல்லிட்டா, எனக்கு ஏதோ ஆறுதலா இருக்கும். எனக்குன்னு ஒருத்தங்க இருக்காங்க’ன்னு தோணும். என்னோட பாரமே இறங்கிடும்’.

சில நேரம் அக்கா போதிக்க ஆரம்பித்து விடுவாள் ‘எல்லா வீட்டிலும் இப்படி ஒரு கஷ்டம் அல்ல வேறொரு கஷ்டம் இருக்கும். நீ தான் ஒன்ன சந்தோசமா வைக்க முடியும். அடுத்தவங்க தரக்கூடிய சந்தோசம் நிலைக்காது. அதுனால, நீ ஒன்ன சந்தோஷமா வைக்க பழகிக்கன்னு சொல்வாள்.

இப்படியாக, ஒவ்வொரு தடவையும் கவலையை தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த அக்கா ஒரு நாள் சொன்னாள், ‘ஒன்ன உம் மகனோ, பொண்டாட்டியோ இனிமேல் கிறுக்கான்னு சொன்னா, நீ உடனே கேளு – நீ அவனுக்கு மவன் தானே அல்லது நீ அவனுக்கு பெண்டாட்டி தானே?’ அப்படின்னாவது அமைதியா இருப்பாங்களா என்ன’ என அவள் நினைத்தாள்.

அவனது அக்கா தன் மனம் கவலைக்குள்ளான நிலையில் இந்த தொடர்கதைக்கு முடிவு கட்ட நினைத்தாள். ஒரு தடவை சொன்னாள் ‘என்னால உன்ன கவனிக்க முடியாது. அதுனால, முதியோர் இல்லத்துல சேத்து விட்டுடுறேன் டா’ என்று சொல்லி விட்டு அவன் கையில் முதியோர் இல்ல அட்ரஸைக் கொடுத்தாள் அக்கா.

சில நாட்களுக்குப்பின் அடுத்த பிரச்சனை வீட்டில் உருவெடுத்தது. மகனுடைய வீட்டின் முன் கார் நிறுத்துமிடம் எந்த பக்கத்தில் அமைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம்.

மகன் சொன்னான் ‘வீட்டிற்கு வடக்குப்பக்கம் வைக்கலாம்’.

உடனே அவன் மனைவி சொன்னாள் அப்படி வைத்தால் ‘வீட்டின் பார்வை போய்விடும்’.

ஜெகன் சொன்னான் ‘வீட்டின் தெற்கு பகுதியில், கார் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஒரு கம்பி அளி போட்டு வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்’.

பேசுவதைக் கேட்டதும் மனைவி ராணி சாடினாள் ‘கிறுக்கா, உனக்கு விவரம் இருக்கா?’

‘நீ செத்தா தான் இந்த வீடு நல்லாயிருக்கும்’ என்றாள்.

கொஞ்ச நேரத்தில் அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் யாரிடமும், எங்கே செல்கிறான் என்பதை சொல்லவில்லை.

மாலையானது, இரவானது அவன் வீட்டிற்கு வரவில்லை, வீட்டு வேலை நடக்கும் இடத்தில் பார்த்தார்கள் அவன் அங்கில்லை. அவனுடன் பிறந்தவர்களுக்கும், அவனது நண்பர்களிடமும் போன் போட்டு கேட்டார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.

மனைவிக்கும், மகனுக்கும் மனதின் கவலையின் ரேகை படர்ந்தது. ‘எம் புருசன் பத்திரமா இருக்கனு’ம்னு ராணி வேண்டிக்கிட்டாள். அவள் பேயறைந்தவள் போலானாள். ஏதோ தப்பு செஞ்சிட்டோம் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள்’.

ஆறு மாதங்களுக்குப் பின் அவன் மதுரையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டார்கள். அக்காவிடம் மனைவியும், மகனுமாக சேர்ந்து சண்டை போடச் சென்றார்கள்.

அவள் கேட்டாள்.

‘என் தம்பி கிறுக்கன். அவன வச்சி உங்களால காப்பாத்த முடியாது அவன் ஒவ்வொரு தடவையும் அனுபவிச்ச வேதனைகளை உங்களால் புரிஞ்சிட முடியல்ல. வேதனை பொறுக்க முடியாம, ஒருதடவை முதியோர் இல்ல அட்ரஸைக் கேட்டான். நானும் கொடுத்தேன்.

அண்ணி, அவனப்பத்தி எல்லாம் உங்க வீட்டில அப்பா சொல்லித்தான் திருமணம் செய்து வச்சாங்க. நீங்க அவன இத்தன வருசமா காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி.

அவன் இருக்கிற இடத்து அட்ரஸைத் தர்ரேன். ஆனால், அவன இனிமேல் நீங்க கஷ்டப்படுத்தாம இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்’.

ராணி சொன்னாள் ‘நீங்க எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமில்லியா அண்ணி’. ‘ஒரு தடவையல்ல; பல தடவைகள் அவன் எதைச் சொன்னாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் போனது மட்டுமல்ல; கலாச்சார சீரழிவு வார்த்தைகளைச் சொல்லும் போது, அவனும் உங்களப் போல உடலும், உணர்வும் உள்ள மனுசன்னு நினைக்கக் கூட உங்களால் முடியல்ல இல்லையா?’ இப்படி சொல்லும் போது அக்காவின் கண்கள் கண்ணீரை அருவியாய் கொட்டின.

‘நாங்க அப்படி சொன்னது தப்புதான், மன்னிச்சிடுங்க அண்ணி’ என்றாள் ராணி. ‘டாடி பாவம். நாங்க தான் கஷ்டப்படுத்திட்டோம்’னு சொன்னான் மகன். அடுத்த நாள் காரில் அவனைப் பார்க்க மதுரையிலுள்ள முதியோர் இல்லம் சென்றனர். தூரத்திலிருந்தே அவனைப் பார்த்தனர். அவன் அந்த முதியோரோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தான். அந்த முதியோர் இல்லத்தை நடத்துபவர் அவனிடம் வந்து, ‘உங்க மனைவியும், மகன் குடும்பமும் உங்களைப் பார்க்க வேண்டுமாம்’ என்றார்கள். அவன் ‘அவர்களை அனுப்பிடுங்கன்’னு சொன்னான். முதியோர் இல்ல இயக்குநர் சகோதரி ‘போய் பார்த்துவிட்டு வந்து விடுங்கள்’ என்றார். அவன் பார்த்தான். அவர்கள் அவனை வீட்டுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி பாசமா கூப்பிட்டார்கள் அவனோ ‘நான் இங்கே இருந்து இந்த அப்பாமார்களையும் அண்ணன்மார்களையும் கவனிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது வருகிறேன். இப்போது அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் போகிறேன்’ என்று சொல்லி விட்டு அவர்களுக்கு உதவி செய்ய முதியோர் இல்லத்தின் சாப்பாட்டு அறைக்குள் சென்றான்.

Comment