No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கானாவூர் அரும்செயல், இறையன்பின் வெளிப்பாடு

ஜனவரி 16ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமையின் திருப்பலி நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் கானாவூர் திருமணத்தில் இயேசு நிகழ்த்தியது, புதுமை அல்ல, மாறாக ஓர் அரும் அடையாளம் என புனித யோவான் நற்செய்தி முன்வைப்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரையை வழங்கினார்.
’இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்’ (யோவா 2:11), என நற்செய்தியில் காணப்படும் ’அரும் செயல்’ என்பதன் அர்த்தம் என்ன என சிந்திப்போம் என  அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கானாவூரில் நிகழ்ந்தது, இயேசுவின் வல்லமை குறித்து சிந்திப்பதற்கு அழைப்பு விடவில்லை, மாறாக, அவரின் அன்பு வெளிப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது, எனவும் எடுத்துரைத்தார்.
ஒரு தம்பதியர் தங்கள் திருமணவிழாவின்போது ஒரு பிரச்சனையை சந்தித்தபோது, அங்கு கடவுளின் அன்பும், கனிவும், இரக்கமும் அருகில்தான் உள்ளது என்பதை வெளிப்படுத்திய இந்த அரும் செயல் இடம்பெறுவதற்கு அன்னைமரியா காரணமாக இருந்தார் என்பதையும், இயேசுவும் யாருக்கும் தெரியாமல் இந்த அரும் செயலை ஆற்றினார் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அன்னை மரியா யாருக்கும் தெரியாமல் இந்த பிரச்சனையை இயேசுவிடம் கொண்டு வந்ததும், இயேசுவும் இரகசியமாக இந்த அரும்பெரும் செயலை ஆற்றியதும், நல்ல இரசம் பரிமாறப்பட்டதற்குரிய பெருமை மணமகனுக்குச் சென்றதையும்  பார்த்த இயேசுவின் சீடர்களின் மனதில் விசுவாசத்தின் விதை வளரத்துவங்கியது, அதாவது, இறையன்பு இயேசுவில் தன் இருப்பைக் கொண்டிருந்ததை சீடர்கள் கண்டுகொண்டனர் என திருத்தந்தை பிரான்சிஸ் தன் மூவேளை செபஉரையில் சுட்டிக்காட்டினார்.
இயேசு நிகழ்த்திய முதல் அரும்செயல், ஓர் அசாதாரண குணப்படுத்தலாகவோ, எருசலேம் கோவிலில் நிகழ்ந்த மகத்தான அரிய செயல்பாடாகவோ இல்லாமல், ஒரு சாதாரண தம்பதியின் தேவைக்கு உதவுவதாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியாவைப்போல் நாமும் இயேசுவின் உதவியைக் கேட்கும்போது, அவரும் நமக்கு உதவி, அந்த அன்பால் நாம் மேற்கொள்ளப்பட்டு, அவரின் சீடர்களாக மாறுவோம் என எடுத்துரைத்தார்.
திருமண விழாக்களில் முதலில் நல்ல இரசம் பரிமாறப்படும், பின்னர் இரசம் தீர்ந்துவிடும்வேளையில் அடர்த்தியற்ற இரசம் பரிமாறப்படும், ஆனால் இங்கோ அதற்கு நேர் மாறாக நடந்துள்ளதுபோல், இயேசு நமக்குக் கொணரும் மகிழ்ச்சியும் முழுமையானது மற்றும் நீர்  கலக்காத அடர்த்தி நிறைந்தது என திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
நாமும் நம் கடந்தகால நிகழ்வுகளை மனதில் கொணர்ந்து, நம் துயர நேரங்களில் கடவுள் நம் அருகில் வந்து தன் கனிவைக் காட்டியதையும், அதனை நாம் கண்டுகொண்டதையும், அது நம் இதயத்தில் கொணர்ந்த மகிழ்வையும் குறித்து எண்ணிப்பார்த்து, அந்நேரங்களை மீண்டும் நம் வாழ்வில் வாழ முயல்வோம் என்ற அழைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மூவேளை செபவுரையை நிறைவுச் செய்தார்.
 

Comment