No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் அதிசயிக்கவைத்த திடீர் சந்திப்பு

ஜனவரி 11 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல், உரோம் நகரிலுள்ள, பேன்ந்தியோன் பகுதியில் உள்ள பழைய ஒலிப்பதிவுக் கடை ஒன்றிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திடீரென சென்றார் என்றும், தான் பேராயராக இருந்த காலத்திலிருந்தே கடையின் உரிமையாளர்களை நன்கு அறிவார் என்றும் வத்திக்கான் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாலை ஏறத்தாழ 7 மணியளவில் வந்திறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழியாகச் சென்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார் என்றும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திருத்தந்தை ஆசீர்வதித்தத்தோடு, பத்து நிமிடங்கள் அக்கடையின் உள்ளே சுற்றிப் பார்க்க நேரம் ஒதுக்கினார் என்றும்,  வத்திக்கான் பத்திரிகை அலுவலகத்தின் இயக்குனர் மேட்டியோ புருனி அவர்கள் கூறினார்.
இதற்கிடையில், ஒரு சிறிய கூட்டம் ஒன்று, திருத்தந்தை வெளியேறுவதை தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் படம்பிடிக்கத் தயாராக இருந்தது என்றும், அவர்களில்,  முக்கியமாக இளைஞர்கள், திருத்தந்தை எந்த வகையான இசையில் ஆர்வமாக இருப்பார் என்று ஜன்னல்கள் வழியாக அவரை உற்றுப்பார்த்தபடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தக்கடையின் உரிமையாளர் லெடிசியா, அவரது மருமகன் மற்றும் அவரது மகளை ஆசீர்வதிப்பதையும் பார்த்து ரசித்தனர் என்றும் அங்கே குழுமியிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.  
திருத்தந்தையின் இந்தத் திடீர் சந்திப்பின் இறுதியில், கடையின் உரிமையாளரின் மகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நீலநிற காகிதத்தில் சுற்றப்பட்ட பாரம்பரிய இசைத்தகடுகளைப் பரிசாக வழங்கினார் என்றும் செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மூக்குக் கண்ணாடியை  மாற்றுவதற்காக, உரோம் நகரின் வரலாற்று மையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்றார் என்பதும், அதன் பின்னர், மீண்டும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி, வத்திக்கான் அருகில் உள்ள கடை ஒன்றிற்குப் புதிய காலணிகள் வாங்கச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comment