No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புனித இரேனியசை மறைவல்லுநராக அறிவிக்கப் பரிந்துரை

திருஅவையில் மூன்று இறையடியார்களின் வீரத்துவப் பண்புகள் குறித்த விபரங்களையும், 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரேனியஸ் அவர்களை திருஅவையில் மறைவல்லுநராக அறிவிப்பதற்குரிய பரிந்துரையையும், திருத்தந்தையிடம் இவ்வியாழனன்று கர்தினால் மார்செல்லோ செமராரோ சமர்ப்பித்தார்.
திருஅவையில் புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், ஜனவரி 20 ஆம் தேதி, வியாழனன்று காலையில் திருத்தந்தையை சந்தித்து இந்த விபரங்களைச் சமர்ப்பித்த வேளையில், 130க்கும் 140க்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய துருக்கியில் உள்ள ஸ்மிர்னா என்னுமிடத்தில் பிறந்து, பிரான்சின் லியோன் நகரில் ஆயராகப் பணியாற்றி  202 ஆம் ஆண்டு உயிரிழந்த புனித இரேனியசை, திருஅவையின் மறைவல்லுநர்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரையையும் முன்வைத்தார்.
இத்தாலியைச் சேர்ந்த இறையடியார்கள், கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்த  பிரான்செஸ்கோ சவேரியோ டோப்பி, திருஇதயங்களின் சிறுபணியாளர்கள் சபையைத் தோற்றுவித்த மரியா தெரசா டி வின்சென்டி, பிறரன்பு புதல்வியர் சபையின் கேப்ரியல்லா போர்கரினோ ஆகியோரின் வீரத்துவப் பண்புகள் குறித்த விபரங்களையும், புனிதர்பட்ட படிநிலைகளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கர்தினால் மார்செல்லோ செமராரோ சமர்ப்பித்தார்.
 

Comment