No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்குப் புதிய தலைவர்

மால்டாவின் துணை ஆயரும். COMECEக்கான மால்டா ஆயர் பேரவையின் பிரதிநிதியுமான ஆயர் ஜோசப் கலியா-குர்மி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், புதிய ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா அவர்களைக் குறித்து   தான் பெருமிதம் கொள்வதாகவும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இயற்றுபவர்களுக்கும் திருஅவைக்கும் இடையே பயனுள்ள உறவுமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவராக இவர் இருப்பார் என்றும் கூறியுள்ளார். 
ராபர்ட்டா மெட்சோலா இளம் வயதுடையவராக இருந்தாலும் அனுபவம் வாய்ந்தவர் என்றும், பிளவுகள் நிறைந்துள்ள ஐரோப்பிய அரசியலில், பெரிய ஒருமித்த கருத்தை அவரால் ஊக்குவிக்க முடியும் என்றும் ஆயர் ஜோசப் கலியா-குர்மி அவர்கள், மேலும் நம்பிக்கைத் தெரிவித்தார். ராபர்ட்டா மெட்சோலா அவர்கள், நாடாளுமன்ற அவையின் முன்னாள் அரசுத்தலைவர்  டேவிட் சசோலியின் உயர்மட்ட துணைத் தலைவராகப் பணியாற்றிதோடு, சிறந்த அனுபவங்களையும், ஆழமாக வேரூன்றிய ஐரோப்பிய மதிப்பீடுகளையும், தனது பணிக்காலத்தில் கொண்டு வருவார் என்று, தான் நம்புவதாகவும் ஆயர் ஜோசப் கலியா-குர்மி தெரிவித்தார். 
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 43 வயதான ராபர்ட்டா மெட்சோலா அவர்கள்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகச்சிறிய நாடான மால்ட்டாவைச் சேர்ந்த அரசியல்வாதி என்றும், அவையை நடத்தப்போகும் இளம் வயது கொண்ட தலைவர் என்றும் ஐரோப்பிய மக்கள் கட்சியின் மிகப்பெரிய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர்  டேவிட் சசோலி அவர்கள், ஜனவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராபர்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய தலைவராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    

Comment