No icon

அருள்பணி. ஜான் பால், துணை ஆசிரியர்

ஓய்வுப்பெற்ற ஹாங்காங் கர்தினால் ஜென் கைதும், திருப்பீடத்தின் கவலையும்

ஹாங்காங் மறைமாவட்டத்தின் பணிநிறைவுப் பெற்ற ஆயரும் ஓய்வுப்பெற்ற கர்தினாலுமான மேமிகு ஜோசப் ஜென் ஸெ-கியூன் (90 வயது) அவர்கள் மே மாதம் 11 ஆம் தேதி சலேசிய இல்லத்தில், தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீன கம்யூனிஸ்ட் அரசால் கைது செய்யப்பட்டு, சில மணி நேர விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இருப்பினும் ஹாங்காங் - வான் ச்சாய் காவல் நிலையத்திற்கு வெளியே அவரின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகவியலாளர்கள் சமூக வலைதளங்கள் வழியாக வெளியிட்டதால் உடனடியாக பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கர்தினால் ஜோசப் ஜென் ஸெ-கியூன்- பின்னணி!

1940 களில் அவர்தம் சொந்த மாநிலமான ஷாங்காய் மாகாணத்திலிருந்து ஹாங்காங்கிற்கு தப்பி வந்த நாள் முதல், சீன கம்யூனிச கட்சிக்கு எதிராக தொடர்ந்து நிலையான, கடுமையான விமர்சனத்தை முன்வைப்பவர் கர்தினால் ஜென் அவர்கள், சலேசிய சபையில் சேர்ந்து குருவாகி, பின்னர் ஆயராக நியமிக்கப்பட்டார்.

ஹாங்காங்க மறைமாவட்டத்தின் ஆயராக 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆயராகப் பணியாற்றி, 2006 ஆம் ஆண்டு கர்தினாலாக திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்ட கர்தினால் ஜோசப் ஜென் அவர்கள், சலேசிய சபையைச் சேர்ந்த கர்தினால் ஜோசப் ஜென் அவர்கள், ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்காகவும்ஒரு நாடு - இரு அமைப்புகள்என்ற அடிப்படையில் அதற்கெதிராக, அதன் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார். பல ஆண்டுகளாகவே ஹாங்காங்கில் நடைபெறும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்களில் பங்கெடுக்கும் மூத்த போராளி கர்தினால் ஜென் ஆவார். 1984 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சீன - பிரிட்டிஷ் பிரகடனத்திற்குப் பிறகு, சீன அரசு வாக்குறுதி அளித்தபடி ஹாங்காங் தன்னாட்சிக்கு வழிவகுக்கவில்லை என்பதால், சீன கம்யூனிஸ்ட் கட்சியைக் குற்றஞ்சாட்டி பெய்ஜிங்குக்கு எதிராகப் போராடி வருகிறார்.

குடை இயக்கம்என்ற பெயரில் ஜனநாயக ஆதரவு மாணவர்கள் போராடியபோது, அந்த மாணவப் போராளிகளோடு கர்தினால் ஜென் அவர்களும் வீதிகளில் இறங்கி, அவர்களோடு தங்கி, உண்டு, உறவாடி, தெருக்களில் உள்ள கூடாரங்களில் உறங்கினார்.

2019 ஆம் ஆண்டு கூட 90 வயது முதிர்வயதிலும் உடல் தளர்ந்த நிலையிலும் போராட்டங்களில் பங்கெடுத்து உற்சாகப்படுத்தினார். தற்போதும்கூட சமூக வலைதளங்களில் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்து தொடர்ந்து இயங்கினார்.

கைதும் பின்னணியும்

கர்தினால் ஜோசப் ஜென் அவர்கள், சீன கம்யூனிச கட்சியை விமர்சித்த காரணத்தால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். ஹாங்காங் மறைமாவட்டம் 90 வயது நிரம்பிய கர்தினால் ஜோசப் ஜென் அவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது. மறைமாவட்டம் முழுவதும் கர்தினால் அவர்களுக்காக சிறப்பான செபம் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. இது குறித்து மே மாதம் 12 ஆம் தேதி ஹாங்காங் மறைமாவட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாங்கள் சட்டத்தின் ஆட்சியை எப்போதும் மதித்துப் போற்றுகிறோம். வரும்காலத்திலும் கூட, நாங்கள் அடிப்படைச் சட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் மதச் சுதந்திரத்தை தொடர்ந்து அனுபவிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கர்தினால் ஜென் அவர்கள் ஏனைய ஜனநாயகத்திற்கு ஆதரவான ஏனைய மூன்று வழக்கறிஞர்களுடன் கைது செய்யப்பட்டார். சீன கம்யூனிச கட்சி ஜனநயாகத்திற்கு ஆதரவான போராட்டத்தை நசுக்கும் நோக்கில் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க கோடிஸ்வரரும் கர்தினால் ஜென் அவர்களுக்கு நெருக்குமானவருமான ஜிம்மி லாய் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டஉதவியையும் மருத்துவ நிதி உதவியையும் அளித்த 612 ஹூமானிட்டேரியன் ரிலிஃப் ஃபன்ட் என்ற அரசுசாரா அமைப்பின் ஐந்து உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது.

மறைமாவட்ட செய்திக் குறிப்பில், ஹாங்காங் காவல்துறையும் நீதி அமைப்பும் கர்தினால் ஜென் வழக்கில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் என் ஆயன்; எனக்கு குறையேதும் இல்லை என்பதை நம்புகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளது.

இருப்பினும், ஒருவகையில், ஜனநாயக ஆதரவு இயக்கம் நான்கு இலட்சம் கத்தோலிக்கர்களைக் கொண்ட ஹாங்காங் கிறிஸ்தவ சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு காவல்துறையினரின் துணை கொண்டு கம்யூனிஸ்ட் ஆதரவு நிர்வாகம் ஒடுக்கிய இந்த ஜனநாயக ஆதரவு இயக்கத்தை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் கத்தோலிக்கர்களில் உள்ளனர்.

சிறப்பு தன்னாட்சிமிக்க ஹாங்காங் பகுதியின் புதிய முதன்மை நிர்வாக அதிகாரியாக, ஜான் லீ அவர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு நாள்களில் கர்தினால் ஜென் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான இவர், ஹாங்காங் சந்தேகப் பேர்வழிகளை சீனாவிற்கு கொண்டுச் சென்று அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரரணைக்குள்ளாக்க வழிவகுக்கும் நாடுகடத்தும் சட்டம் 2019 உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். ஜூன் மாதம் பொறுப்பேற்கும் இவர், இச்சட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரமாக இருப்பார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

வத்திக்கான் - சீன இரகசிய ஒப்பந்தம் - எதிர்ப்பு

அண்மைக்காலங்களில் வத்திக்கான், சீன கம்யூனிச அரசோடு தன் உறவுகளைப் புதுப்பித்து, ஆயர்களை நியமனம் செய்வதற்கு 2018 ஆம் ஆண்டு மேற்கொண்டதாக நம்பப்படுகிற திருத்தூதரக ரீதியிலான இரகசிய ஒப்பந்தத்தை கர்தினால் ஜென் அவர்கள் கடுமையாக விமர்சித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு, சீன நாட்டில் பல்வேறு ஆண்டுகளாக துன்புறும் மறைமுக கிறிஸ்தவர்களோடும் அங்குள்ள திரு அவையோடும் தோழமையை ஏற்படுத்திக்கொள்ள சீன கம்யூனிச அரசு வழியாக வத்திக்கான் திருப்பீடம் முயற்சித்தது. இருப்பினும் பெய்ஜிங், சீனத் திரு அவையைக் கட்டுக்குள்கொணர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவுக்கொள்கைப்படி சீன தேசப்பற்றுமிக்க கத்தோலிக்கச் சங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேச விரோத குற்றச்சாட்டு

612 மனிதாபிமான நிவாரண நிதியகங்களின் நிர்வாகியாக, அவரது பங்கு தொடர்பாக கர்தினால் ஜென் மீது "வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு" என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதியானது ஜனநாயக ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் சட்டம் மற்றும் மருத்துவச் செலவுகளை செலுத்துவதற்கு ஆதரவளித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், கர்தினால் ஜென் கைது செய்யப்பட்டதை திருப்பீடம் கவலையுடன் பார்க்கிறது என்றும், அங்குத் தொடர்ந்து நிகழும் சூழ்நிலையைத் தீவிரமாக உற்றுநோக்கிக் கவனித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

கர்தினால் ஜென்னுடன், முன்னாள் எதிர்க்கட்சி எம்.பியும் வழக்கறிஞருமான மார்க்கரெட் எங், கல்வியாளர் உய் போ- கெங், மற்றும் பாடகரும் பாடலாசிரியருமான டெனிஸ் ஹோ ஆகிய

மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதை ஹாங்காங் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Comment