No icon

குடந்தை ஞானி

புனித சார்ல்ஸ் தெ ஃபுக்கு, நம் காலத்தின் இறைவாக்கினர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மே 18 ஆம் தேதி புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், புதன் பொது மறைக்கல்வியுரையை ஆற்றுவதற்குமுன்னர், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சார்லஸ் தெ ஃபுக்கு ஆன்மீகக் குடும்பம் என்ற அமைப்பைச் சார்ந்தவர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மே 15 ஆம் தேதி ஞாயிறன்று புனிதராக அறிவிக்கப்பட்ட பத்துப் பேரில் ஒருவரான புனித சார்ல்ஸ் தெ  ஃபுக்கு அவர்களின் தனிவரத்தால் உள்தூண்டுதல் பெற்றுள்ள இவ்வமைப்பினருக்கு ஆற்றிய உரையில், இப்புனிதர், கிறிஸ்து மக்கள் மீது வைத்திருந்த அன்பையே எப்போதும் மையப்படுத்தினார் என்று பாராட்டிப் பேசினார்.

இப்புனிதர், இயேசு, பிறரன்பு ஆகிய இரு சொல்லாடல்களில் நம்பிக்கையின் அர்த்தத்தை உள்ளடக்கி வைத்திருந்தார் என்றும், இவர், இயேசுவின் சொந்த ஊரான நாசரேத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தபின்னர், அவ்வூரில் இயேசு வாழ்ந்து மறைந்த வாழ்வில் பொதிந்துள்ள உண்மைகளைக் கண்டுபிடித்தார் என்றும் திருத்தந்தை கூறினார். இயேசு, மக்களின் துன்பம்நிறை வேலையை பொறுமையோடு சுமந்துகொண்டு, குடும்பத்திலும், நகரத்திலும் அன்றாடம் வாழ்கின்றார் என்பதை, புனித சார்லஸ் தெ ஃபுக்கு போன்று, அவ்வமைப்பினரும் தொடர்ந்து கற்பனைசெய்து பார்ப்பதற்கு திருத்தந்தை ஊக்கப்படுத்தியுள்ளார். பிறரன்பு, நம்பிக்கையின் சாரம் என்பது பற்றி புனித சார்லஸ்ஸின் வாழ்விலிருந்து எடுத்துக்காட்டி விளக்கிய திருத்தந்தை, கிறிஸ்தவத்தை வாழ்தல் என்பது, அனைவருக்கும் ஒரு சகோதரராக, குறிப்பாக அல்ஜீரியா நாட்டின் சஹாரா பாலைவனத்தில் வாழ்ந்தபோது, அவர் ஒரு சகோதரராக வாழ்ந்தது பற்றியும் எடுத்துரைத்தார்.

தான் இறையியல் கல்வியைக் கற்றபோது தனது உருவாக்கத்திற்கு இப்புனிதரின் ஆன்மீகம் பெரிதும் உதவியது என்றும், தனது பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் ஆண்டவருக்கு மிகவும் விருப்பமான பாதையை எளியமுறையில் தெரிந்துகொள்ளவும் இப்புனிதர் உதவினார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். எல்லாக்காலத்திலும், எல்லா இடங்களிலும் இயேசுவுக்கு நாம் வழங்கவல்ல மிகத்தூய்மையான சான்று, மகிழ்ச்சி என்பதால், புனித சார்லஸ் தன் வாழ்வில் அனுபவித்த மகிழ்வை மையப்படுத்தி வாழுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த அமைப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment