No icon

திருத்தந்தை

விடாமுயற்சியுடன் செபியுங்கள்

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட நம்மைக் கையளிக்க வேண்டுமென்றும், விடாமுயற்சியுடன் செபிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

மே 8 ஆம் திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் ஸ்பிரிதானி என்றழைக்கப்படும் துறவற சபையின் 175வது ஆண்டை முன்னிட்டு அச்சபையின் உறுப்பினர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் கண்களால் ஏழைகளைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருஅவைக்கு உள்ளேயும் அதற்கு வெளியேயும் பன்னாட்டுக் கலாச்சார சவால்கள் நிறைந்த அவசர உலகில் துணிவுடனும் உள்மன சுதந்திரத்துடனும் பணியாற்றுங்கள் என்றுக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபையின் தனிவரத்தின் அழகு அவர்களது செயல்களில் தெளிவாக விளங்குகின்றது என்றும் பாராட்டினார்.

சபையின் பணிகளான, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தல், யாரும் செய்ய விரும்பாத பணிகளை ஏற்றுக்கொள்ளுதல், மிகவும் கைவிடப்பட்டவர்களுக்கு பணியாற்றுதல், மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை மதித்தல், உள்ளூர் அருள்பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி, சகோதரத்துவ வாழ்க்கை, எளிமை விடாமுயற்சியுடன் செபம் ஆகியவற்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துப் பாராட்டினார்.

நற்செய்தி அறிவிப்புக்கான இடங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் மட்டுமல்லாது இன்னும் நற்செய்தி அறிவிப்புத் தேவைப்படும் மேற்கத்திய நாடுகளிலும் அதனை அறிவிக்க வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரையும் சந்திக்க விரும்பும் இயேசுவின் கண்களால் ஒவ்வொருவரையும் பார்க்க வேண்டும் என்றும், ஏழைகளுடன் நெருங்கிப் பழகி அவர்களைக் கைகளால் தொட்டு தனது பார்வையை அவர்கள் மீது வைத்த இயேசு போல செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

தூயஆவியானவரால் பாதுக்காக்கப்படுதல் மற்றும் வழிநடத்தப்படுவதை விட பெரிய சுதந்திரம் எதுவும் இல்லை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவூட்டவும், வழிநடத்தவும், அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படவும், நிபந்தனைகளை அமைக்காமல், யாரையும் ஒதுக்காமல் செயல்படவும் நம்மை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும், எல்லா காலத்திலும் நேரத்திலும் நமக்கு என்ன தேவை என்பதை தூயஆவி அறிவார் என்றும் எடுத்துரைத்தார்.

துணிவுடன் உள்மன சுதந்திரத்தை விட்டுவிடாது, அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர்களின் வாழ்க்கையை வாழ்வின் முக்கியமாக மாற்றுங்கள் என்றும் துணிவு, திறந்த மனம் மற்றும் புதியதைச் செய்ய தூயஆவியின் செயலுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

1848 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் திருத்தந்தை புனித ஒன்பதாம் பயஸ் அவர்களின் விருப்பப்படி, 1703 இல் மிக இளம் திருத்தொண்டரால் (கிளாட்-பிரான்கோயிஸ் பவுலார்ட் டெஸ் பிளேஸால்) நிறுவப்பட்ட தூயஆவியின் சபை மற்றும் 1841 இல் புனித பிரான்சுவா லிபர்மேன் அவர்களால் நிறுவப்பட்ட திருஇருதய அன்னையின் சபை ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன

Comment