No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் மீதான அன்பும், கட்டளைகளைக் கடைப்பிடித்தலும்

கட்டளைகளைக் கடைபிடித்தல், மற்றும், தூய ஆவியார் குறித்த வாக்குறுதி என இரண்டு அடிப்படைசெய்திகளை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது என, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மே மாதம் 17 ஆம் தேதி ஞாயிறு நற்செய்தி வார்த்தைகளில் (யோவான் 14:15-21) ’என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்என்ற இயேசுவின் வார்த்தைகளை முன்வைத்து, இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள அன்புகட்டளைகளை கடைப்பிடிப்பதோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதை திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

இயேசு நம்மை நோக்கி, தன்னை அன்புகூரவேண்டும் என கேட்பது, அவரின் பாதையை பின்பற்ற, அதாவது, தந்தையாம் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற விடப்படும் அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள்’ (யோவான் 13:34) என இயேசு, ஒருவரையொருவர் அன்புகூர ஏற்கனவே விடுத்த கட்டளையில், நான் உங்களை அன்புகூர்ந்ததுபோல் என்னை அன்புகூருங்கள் என்று கேட்பதையல்ல, மாறாக, நீங்கள் ஒருவரை ஒருவர் அன்புகூருங்கள் என அழைப்பதைக் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரதிபலன் பார்க்காது நமக்கு வழங்கப்படும் இயேசுவின்  அன்பு, இலவசமானது, மற்றும், நம் வாழ்வின் அடித்தளமாக இருக்க வேண்டியது என்றார்.

ஒருவரையொருவர் அன்புகூரும் பாதையில் தன் சீடர்களுக்கு உதவ விரும்பும் இயேசு, துணையாளர் ஒருவரை அனுப்புமாறு, தன் தந்தையிடம் வேண்ட உள்ளதாக அறிவிப்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சஸ் அவர்கள், இந்த துணையாளரே, கடவுளின் கொடையாகிய தூய ஆவியார் என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களின் இதயத்தில் வந்திறங்கும் தூய ஆவியார், அவர்களை வழிநடத்தி, ஒளிர்வித்து, எத்தகையச் சூழலிலும் அவர்கள் இயேசுவின் பாதையில் தொடர்ந்து வழிநடக்க, பலத்தை வழங்குகிறார் என்று திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியாரை வரவேற்பவர்களாக செயல்படும்போது, நம் இதயங்களை மாற்றி, அவைகளை அன்பையும் உண்மையையும் நோக்கி திறக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் வார்த்தைகள், நம்மை தீர்ப்பிட அல்ல, மாறாக, நம்மைக் குணப்படுத்தவும், நம்மை மன்னிக்கவும் என வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இறைவார்த்தை எனும் ஒளியை நம் பாதையில் காட்டி நம்மை வழிநடத்துபவர் தூய ஆவியார் என, தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறினார்

Comment