No icon

இயேசு சபை

இயேசு சபையின் 30வது அகில உலகத் தலைவரின் மரணம்

இயேசு சபையின் 30வது அகில உலகத் தலைவராகப் பணியாற்றிய அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் (Adolfo Nicolás) அவர்கள், மே 20 ஆம் தேதி புதனன்று இறையடி சேர்ந்தார் என்பதை, உரோம் நகரிலுள்ள இயேசு சபை தலைமையகம் அறிவித்தது.

உலகெங்கும் பரவியிருக்கும் இயேசு சபை உறுப்பினர்களுக்கு அச்சபையின் தற்போதைய உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா (Arturo Sosa) அவர்கள், இச்செய்தியை ஒரு மடல் வழியே பகிர்ந்துகொண்ட வேளையில், "மே 20ம் தேதி, டோக்கியோவில், நமது முன்னாள் உலகத் தலைவர், அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்களை இறைவன் தன்னிடம் அழைத்துக்கொண்டார் என்பதை, மனவருத்தத்துடன், அதேவேளை, மனம் நிறைந்த நன்றியோடு உங்களுக்கு அறிவிக்க விழைகிறேன்" என்று இம்மடலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடோல்ஃபோ 'Adolfo என்றும்  நிக்கோ 'Nico'  என்றும் பாசமாக அழைக்கப்பட்ட அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 29 ஆம் தேதி, இஸ்பெயின் நாட்டின் பாலென்சியா  ஞயடநnஉயை எனுமிடத்தில் பிறந்தார்.

1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி, தன் 17வது வயதில் இயேசு சபையில் இணைந்த அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், 14 ஆண்டுகள் பயிற்சியை முடித்து, 1967 ஆம் ஆண்டு, மார்ச் 17 ஆம் தேதி அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

அவர் அருள்பணித்துவப் பயிற்சியில் இருந்தவேளையில், ஜப்பான் நாட்டில் பணியாற்ற அனுப்பப்பட்டு, அந்நாட்டை தன் பணித்தளமாக ஏற்றுக்கொண்டார். அங்கு, அவர், இறையியல் பேராசிரியராகவும், பின்னர், ஜப்பான் இயேசு சபை மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸ் நாட்டில் 10 ஆண்டுகள் பணியாற்றியவேளையில், கிழக்கு ஆசிய மேய்ப்புப்பணி மையத்தின் (East Asian Pastoral Institute) இயக்குனராகவும், பின்னர், கிழக்கு ஆசியா - ஓசியானியா மண்டல இயேசு சபை தலைவர்கள் அவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு, சனவரி மாதம், உரோம் நகரில் கூடிய இயேசு சபையின் 35வது உலகளாவிய பொது அவையில், சனவரி 19 ஆம் தேதி, அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்கள், இயேசு சபையின் 30வது அகில உலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் தலைமைப்பணியை 8 ஆண்டுகள் திறம்பட செய்த அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், உடல் நலக்குறைவின் காரணமாக, 2016ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி, அப்பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.

தன் வாழ்வின் இறுதி நான்கு ஆண்டுகளை, பிலிப்பீன்ஸ் மற்றும் ஜப்பானில் கழித்த அருள்பணி நிக்கோலஸ் அவர்கள், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டோக்கியோ நகரில் காமிஷாகுஜி யில்  Kamishakujiiš ல் உள்ள லொயோலா இல்லத்தில் தங்கியிருந்தார். அவ்வில்லத்தில், 2020ம் ஆண்டு, மே 20 ஆம் தேதி, தன் 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அருள்பணி அதோல்போ நிக்கோலஸ் அவர்களின் வாழ்வின் முக்கியத் தருணங்களை தன் மடலில் குறிப்பிட்டுள்ள இயேசு சபை உலகத் தலைவர் அர்த்தூரோ சோசா அவர்கள், இம்மடலின் இறுதியில் அருள்பணி நிக்கோலஸ் அவர்கள் உருவாக்கிய ஒரு செபத்துடன் இம்மடலை நிறைவு செய்துள்ளார்.

இச்செபத்தின் தமிழாக்கம்:

ஆண்டவராகிய இயேசுவே, அனைத்திற்கும் மேலாக, உமது பணியில் ஒத்துழைப்பதற்கு எங்களை அழைக்க முடிவு செய்தீரே, அப்படி எங்களில் என்ன வலுவின்மையை நீர் கண்டீர்?

எங்களை அழைத்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உலகம் முடியும்வரை எங்களுடன் இருப்பதாக நீர் அளித்த வாக்கினை மறக்கவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கிறோம்.

நீர் எம்மோடு இருக்கிறீர் என்பதை அவ்வப்போது மறந்துவிட்டு, இரவு முழுவதும் வீணாக உழைத்தோம் என்ற உணர்வால் நாங்கள் அடிக்கடி அலைகழிக்கப்படுகிறோம்.

எங்கள் வாழ்விலும், பணியிலும் உமது உடனிருப்பை இன்று, நாளை, மற்றும் எதிர்காலத்தில் உணர்த்தியருளும்.

உமது பணிக்கென நாங்கள் வழங்கியுள்ள வாழ்வை, உமது அன்பால் நிறைத்தருளும்.

பரிவிலும், மகிழ்விலும் குறையுள்ளவர்களாய், மற்றவர்களை ஒதுக்கும் வகையில், ’எங்களுடையது’, ’என்னுடையதுஎன்று சிந்திக்கத்தூண்டும் அகந்தையை எங்கள் இதயங்களிலிருந்து அகற்றியருளும்.

எங்கள் அறிவையும், மனதையும் ஒளிர்வித்தருளும். நாங்கள் விரும்பியவண்ணம் அனைத்தும் நடக்காதபோது, புன்னகை செய்வதற்கு மறவாமல் எங்களைத் தூண்டியருளும்.

ஒவ்வொரு நாளின் இறுதியிலும், உம்மோடு இன்னும் அதிகமாக உறவு கொள்வதையும், எங்களைச் சுற்றிலும், அதிக மகிழ்வை, நம்பிக்கையை உணரவும் செய்தருளும்.

இவையனைத்தையும் எங்கள் எதார்த்தமான நிலையிலிருந்து கேட்கிறோம். நாங்கள் வலுவற்ற, பாவம் நிறைந்த மனிதர்கள். ஆனால், உமது நண்பர்கள்.

ஆமென்.

Comment