No icon

அருள்சகோதரி முனைவர் எஸ். இருதய கலைச்செல்வம், விலங்கியல் துறை பேராசிரியை

என்ன வளம் இல்லை இங்கே!

கல்வி என்பதும், கல்வி வளர்ச்சி என்பதும் ஆசிரியர்கள், மாணவிகள், கரும்பலகை, புத்தகங்கள், நோட்டு, பேனா இறுதியில் தேர்வு என்பதோடு முடிந்து விடுவதில்லை. இக்கூட்டு மற்றும் தொடர் நிகழ்வுகள் முழுப்பயன் தரவேண்டுமெனில், அது சார் ஆய்வகங்களும், கட்டுமான அமைப்புகளும் மிகவும் அவசியம். ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள் குறித்து பார்க்கலாம்.

அருங்காட்சியகங்கள்

அரும்பொருட்களைச்  சேகரித்து, காட்சிக்கு வைத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைத்து அச்சேகரிப்புகளின் முக்கியத் துவத்தை அவர்களுக்கு புகட்டும் விதமாக வரலாற்று அருங்காட்சியகம், விலங்கியல் மற்றும் வன்பொருள் அருங்காட்சியகங்கள் இக்கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன. ஆரிய வகை நாணயங்கள் வரலாற்று அருங்காட்சியகத்திலும், உயிரியல் மாதிரிகள் விலங்கியல் அருங்காட்சியகத்திலும் பல்வேறு தலைமுறைகளின் டிஜிட்டல் கலைப்பொருட்களோடு, கணினி வன்பொருளின் தொகுப்பு வன்பொருள் அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்படுகிறது.

BSR ஆய்வகம்:

கல்லூரிப் படிப்பின்போது, மாணவியருக்கு அடிப்படை அறிவியல் ஆய்விற்காக பல்கலைக் கழக மானியக் குழுவிடமிருந்து பெறப்பட்ட நிதி யிலிருந்து, பி.எஸ்.ஆர் ஆய்வு மையம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆய்வக ஆராய்ச்சிக்கான நவீன கருவிகளும், புல மின் அளவிக் கருவிகளும் இவ்வாய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலிருந்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக வழங்கப்படும் நிதியைப் பெற்று கடந்த 2016 ஆம் ஆண்டு, அதி நவீன கருவிகளை இந்த ஆய்வகங்களில் நிறுவி அறிவியல் ஆராய்ச்சிகளை கிராமப்புற மாணவியரிடம் ஊக்குவிக்கிறது இக்கல்லூரி என்றால் அது மிகையாகாது.

செயற்கைக்கோள் கல்வி மையம் (Ever Onn Centre)

இணைய வழியிலான கல்விதனை கிராமப்புற மாணவியரிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில், Ever Onn Centre நிறுவனத்துடன் இணைந்து இணைய வழிக்கல்வி 2006 ஆம் ஆண்டு முதல் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி நேரம் முடிவுற்றபின், குறிப்பிட்ட சில மாணவியர் மட்டும் இணையவழிக் கல்விக்கென சிறப்புக் கட்டணம் செலுத்தி இதில் இணைந்து கல்வி பயின்றனர். இங்கு பயிற்சி பெற்ற மாணவியர் பலர் வளாக நேர்காணலில் தேர்வாகி, பல பெரிய நிறுவனங்களில் இன்று பணிசெய்து வருவது இக்கல்வி மையத்தின் வெற்றியாகும்.

ஆலோசனை மையம்

ஒரு மாணவி பெற்ற கல்வியின் வெற்றி என்பது, அவர் சார்ந்த குடும்பப் பின்னணி, அவர்களின் சரியான வழிகாட்டுதல் மற்றும் சமூகக் காரணிகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அத்தகைய வெற்றி சரியான ஆலோசனையும், ஆற்றுப்படுத்துதலும், வழிகாட்டுதலும்  முறையாய் வழங்கப்படும் சூழலில் வழிமாறும் எத்தனையோ இளம்பெண்களைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தில், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் ஆலோசனை மையம் செயல்படுகிறது. திண்டுக்கல் அனுகிரஹா ஆலோசனை மையத்தில், ஆலோசனையாளர் பயிற்சி முறையாகப் பெற்ற கல்லூரி முதல்வர் மற்றும் 8 பேராசிரியைகள் இப்பணிதனை நன்முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜெ.. கல்லூரி தொழில் முனைவோர் குழு தொடங்கப்பட்டது. இங்கு மெழுகுவர்த்திகள், செயற்கை மலர், சுகாதார நாப்கின்கள், ஃபினாய்ல், சோப் பவுடர், தரை விரிப்புகள், கண்ணாடி ஓவியம், விளக்கப்படம் பிணைப்பு, காகிதப் பைகள் மற்றும் பூச்செண்டு போன்றவை தயாரிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது. இப்பொருட்களின் விற்பனை மூலம் வருவாய் ஈட்டி, அதனைக் கொண்டு கல்லூரியில் தேர்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணம் செலுத்த இயலா மாணவியருக்கு உதவிகள் செய்யப்படுகிறது. மேலும், மாணவியர் கல்லூரியில் பயிலும் காலகட்டத்திலேயே தங்கள் படிப்பிற்கான பணத்தினை ஈட்டிக்கொள்ளEarn while Learnஎன்பதையும் கற்றுத் தந்து மாணவியர் தங்கள் காலில் நிற்கும் வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகிறது.

HEPSN (Higher Education for the Person with Special Needs)

உயர்கல்வி பெற உடல்நலக் குறைவு ஒரு தடையாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் HEPSN அமைப்பு. கல்லூரியில் பயிலும் சிறப்பு மாணவியர் இனம் கண்டறியப்பட்டு, இவ்வமைப்பு வாயிலாக அரசு சலுகைகள் பெற்றுத் தரப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி நல்கையுடன் வாங்கப்பட்ட சிறப்பு உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்துறையில் அனுபவமிக்க நபர்களைக் கொண்டு, சிறப்பு பயிற்சிப் பட்டறைகளும் ஆண்டுதோறும் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சிறப்புக் குழந்தைகள் நாளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புனித பிரான்சிஸ் அசிசி பூங்கா

புனித பிரான்சிஸ் அசிசி பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கை சூழலோடு தொடர்புடையவர். அவரிடம் காணப்பட்ட இயற்கை ஆர்வம் இளம் தலைமுறையினரிடமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது புனித பிரான்சிஸ் அசிசி பூங்கா. இப்பூங்காவில் பறவைகள், மீன்கள், அசோலா. பச்சைப் பாசி (spirulins) வளர்க்கப்பட மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. காளான் வளர்ப்புக்கும், பிற மருத்துவச் செடிகள் வளர்ப்புக்கும் பயிற்சிக்குமான களமாக இந்தப் பூங்கா செயல்படுகிறது.

காளான் வளர்ப்பு மையம்

முதுகலை விலங்கியல் ஆராய்ச்சி மையம் 2018-19 ஆம் கல்வியாண்டில், காளான் வளர்ப்பு மையத்தைத் தொடங்கியது. சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கும் காளான் உற்பத்திக்காக விலங்கியல் துறையின் தன்னார்வலர்கள் காளான் படுக்கையை கண்காணித்து, பராமரித்து, விளைச்சலை அறுவடை செய்தனர். மாணவர்கள் ஈட்டிய வருவாய் அவர்களின் படிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டு விடுதி

மாணவியரால் வெள்ளை மாளிகை என அன்போடு அழைக்கப்படும் 100 படுக்கை வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி நல்கையில் கட்டப் பட்டுள்ளது. முனைவோர் பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி மையமாக வடிவமைக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Comment