No icon

இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் காரித்தாஸ்

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்கள், இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இரணில் விக்ரமசிங்கே அவர்களையும் பதவி விலகச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் துயரநிலை பற்றி இலங்கை காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி மகேந்திர குணதிலேகே எடுத்துக் கூறியுள்ளார்,

முப்பது ஆண்டுகளாக இலங்கையில் சிறப்புடன் செயல்பட்டுவரும் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி மகேந்திர குணதிலேகே அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், உக்ரைன் போரினால் இலங்கை மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் எரிவாயுவிற்கு என்று மக்கள் நீளமான வரிசையில் காத்துக்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் காரித்தாஸ் அமைப்பு பிற உள்ளூர் தன்னார்வக் குழுக்களுடனும், புத்த, இந்து, முஸ்லிம் குழுக்களுடனும் இணைந்து தேவையிலிருப்பவர்களுக்கு, உணவு மற்றும் நலவாழ்வு உதவிகளைச் செய்து வருவதாகவும், இதனை மிக ஆர்வத்துடன் செய்துவரும் அவர்கள் வழியாக, தேவையிலிருப்பவர்களுக்கு உதவுவது தங்களது பணி என்றும்  அருள்பணி குணதிலேகே எடுத்துரைத்துள்ளார்.

பொருளாதாரச் சரிவு

15 விழுக்காடு தேயிலை ஏற்றுமதியும், 45 விழுக்காடு கோதுமை இறக்குமதியும் உக்ரைனுடன் செய்துவந்த இலங்கை, உக்ரைன்-இரஷ்யா போரினால் எதிர்மறையான விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும், நாட்டிற்குள் எரிவாயு வருவதற்கான தடைகள் நிலவுவதால் மக்கள் வேலைக்குச் செல்வது பாதிக்கப்படுவதாகவும் அருள்பணி மகேந்திர குணதிலேகே கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழா அன்று நடந்த குண்டுவெடிப்பு, 2020, 2021ஆம் ஆண்டுகளின் கோவிட்-19 பெருந்தொற்று, 2022ம் ஆண்டில் இடம்பெற்றுவரும் உக்ரைன்-இரஷ்யா போர் என நான்கு மோசமான ஆண்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்களிடத்தில், அரசு நிர்வாகம் மற்றும் அரசுத்தலைவர்களின் தவறான முடிவெடுக்கும் தன்மையால், அவர்கள் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது என்பதையும் அருள்பணி குணதிலேகே எடுத்துக் கூறினார்.

பொருளாதர நெருக்கடியினால் மக்கள் உயிர் வாழ மிகவும் துன்புறுகின்றார்கள் எனவும், 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழும் இலங்கையில், 10 இலட்சம் மக்கள் வேலை இழந்துள்ளதாகவும், 50 இலட்சம் மக்கள் உணவின்றி வாடுகின்றார்கள் எனவும், மேலும் அருள்பணி குணதிலேகே கூறினார்.

Comment