No icon

இந்தோனேசியாவில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும்!

வத்திக்கானுக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையேயான உறவு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தோனேசியாவில் மதச்சகிப்புத்தன்மை அதிகமாக இருப்பதாகவும், பிறருடன் இணைந்து வாழ்வதில் இந்தோனேசியா கிறிஸ்தவர்கள் எவ்விதச் சிரமத்தையும் சந்திக்கவில்லை எனவும் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தோனேசியாவின் கர்தினால் இக்னேஷியஸ் ஸுஹர்யோ ஹார்ட் ஜோட்மோட்ஜோ கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் செப்டம்பர் மாதத் துவக்கத்தில் இந்தோனேசியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதைக் குறித்துப் பேசிய கர்தினால் இக்னேஷியஸ், இந்தோனேசியாவில் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, இந்நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் இஸ்லாமியரும் திருத்தந்தையை வரவேற்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பதாகவும், இஸ்லாமிய தலைமைக்குரு திருத்தந்தையின் திருப்பயண அறிவிப்பை வரவேற்றதில் முதல் நபராகச் செயல்பட்டதாகவும் கூறினார். மற்ற மதத்தவருடன் சுமூகமாக வாழ முடிகின்ற இந்தோனேசியாவில், நாட்டு நிர்வாகத்தின் உயர்மட்டத்திலும் கிறிஸ்தவர்கள் பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும், நாட்டு நிர்வாகம் அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்துகிறது என்றும் கர்தினால் இக்னேஷியஸ் கூறியுள்ளார்.

Comment