No icon

புது தலைமையின் கீழ்

மீண்டெழுமா காங்கிரஸ்?

ஏன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி, கார்ப்பரேட், ஆர்.எஸ்.எஸ் - மகுடியான பாஜகவை வீழ்த்தி சனநாயக இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு சமீபத்திய சில உதாரணங்களே நமக்கு போதும்!

காட்சியும் சாட்சியும் - 1

அண்மையில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தனது 11 ஆவது பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் வழங்கியது. அதில் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள். குறிப்பாக, மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளில் மற்றும் அவை முன்னெடுக்கும் அனைத்து நிகழ்வுகளில் இந்தி மொழியே இடம்பெறும். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிலையங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் விருப்ப மொழியாகவும் இருக்கும். இத்தகு பரிந்துரைகள் தமிழகத்தை மட்டுமல்ல; பல்வேறு பண்பாடு கலாச்சார மொழிகொண்ட இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலங்களின் தனித்துவத்தையும் பாதிக்கும். மீண்டும் இன்னொரு மொழிப் போராட்டத்தை  பா.. தூண்டுகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை புதைத்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்த முயலும் இந்த பா.. வகையறாக்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை, விலைவாசியேற்றத்தை, வறுமை சூழலை, சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் மதவெறி தீண்டுதல்களை திசைதிருப்ப அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைகள் வழியாக மக்களை துண்டாட முயற்சிக்கின்றனர்.

காட்சியும், சாட்சியும் - 2

சமீபத்தில் வாஷிங்டன் புரூக்கிங்ஸ் நிறுவனத்தில், “இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு எனும் தலைப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அதில், “வரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளவுள்ள முக்கிய பிரச்சனைகளில் முதன்மையாக எரிசக்தியின் விலை, மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவற்றை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் தான் உள்ளன என்றார். அத்தோடு, “நாட்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கிற உண்மையை கக்கிவிட்டார். இதனை உறுதி செய்யும் விதமாய் 2022 ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டியல் (GHI) ஆய்வு முடிவும் வெளிவந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 121 நாடுகளில் இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பின் தங்கி, 107 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பட்டினி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளிவிட்டு அம்பானி, அதானி பெருமுதலாளிகளுக்கு சேவை செய்து வருவதுதான் மோடி அரசின் சாதனை. அதானி உலகப் பணக்காரர் வரிசையில் உயர்ந்து கொண்டே போகிறார்.அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் இதுவரை 12 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், “இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக, நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று பேட்டியளிக்கும் நிதியமைச்சரின் ஞானத்தை என்னவென்பது!

காட்சியும், சாட்சியும் - 3

பா.. ஆட்சிக்கு வந்தபின் ஆர்.எஸ்.எஸ் சீருடை முதல் அமைப்பின் கட்டமைப்பிலும், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த விஜயதசமி அன்று நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100 ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு மலையேறும் வீராங்கனையான சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, “உலகம் முழுவதும் சனாதன கலாச்சாரத்தைப் பரப்புவது அனைத்து இந்தியர்களின் பொறுப்புஎன்று சூளுரைத்துள்ளார்.

அண்ணாமலை போன்ற வகையறாக்களைக் கொண்டு, அனுதினமும் ஏதோ வாய்க்கு வந்ததை பேசி மக்களை திசைதிருப்பும் பாணியை ஆர்.எஸ்.எஸ் பா.. கையிலெடுத்திருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் இதற்கு நற்சான்று.

மீண்டெழுமா காங்கிரஸ்?

நாம் நினைக்கும் சின்ன விஷயங்களில் கூட கொடூரத்தன்மை, வன்முறையை புகுத்தி, பன்முக தேசத்தினை மேம்படுத்த அனுமதியளித்த மக்களிடமிருந்து நகர்ந்து எப்படி தங்களது சுயநலத்திற்காக நாற்காலிகளை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாஜகவினர்! இந்தியா என்ற பன்முக கருத்தாக்கத்தைக் காப்பாற்றாமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை நிறைவேற்றும் பா..-வால் இந்தியாவுக்கு இனி எந்த நன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதே ஆதாரப்பூர்வ உண்மை. கார்ப்பரேட்டுகளின் அரவணைப்பில் ஊடகங்களின் துதிபாடலில் மோடி தலைமையிலான பாஜகவின் எழுச்சி நம்முடைய நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் காக்கும் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம். நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற இருக்கையில் அமர்ந்து, பாஜகவின் கொடூரத் தாக்குதலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய முதல் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

ஆனால் காங்கிரஸ் நிலை?

2019 ஆம் ஆண்டு, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வந்த நிலையில், மீண்டும் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி, கட்சி தேர்தலை நடத்தியது. அதில்

7,897 வாக்குகள் பெற்று, மல்லிகார்ஜூன கார்கே தலைவராகியுள்ளார். அவருக்கு வயது 80. கட்சிக்கு வலுவான பிடியுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். காங்கிரசின் மிக முக்கியமான தலித் முகங்களில் ஒருவர். பெரிய தலைவர்களுடன் குறிப்பாக, காந்தி குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்இப்படி பல நற்கூறுகளை அவர் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அவருக்கு முன்னிருக்கும் சவால்கள் ஏராளம். கட்சியின் மீது தனது கட்டுப்பாட்டை  நிலைநாட்டுவது, அனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ளச் செய்வது, தனது கருத்துக்களை ஏற்கவைப்பது, நாட்டை இன்று பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் பா.. - விற்கு எதிராக அனைத்து தரப்பினரையும் ஓரணியில் ஒன்றிணைப்பது என புதிய தலைவர் எதிர்கொள்ளவிருக்கும் மிகமுக்கியமான சவால்களாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். புதிய தலைமையின் கீழ் கட்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புவோம்.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்து வரும் பா.. - விற்கு ராகுல் காந்தியின் தேசம் தழுவிய ஒற்றுமை யாத்திரை எத்தகு பதிலடியைக் கொடுக்கும், இது அரசியலில் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலம் வெளிச்சமிடும். எதுவாயினும், பாரத ஒற்றுமைப் பயணம் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டம் மட்டுமல்ல; மாறாக, முடங்கிப்போன தொண்டர்களை முடுக்கிவிடும் செயல் என்பதனை காங்கிரஸ்காரர்கள் உணர்ந்து, இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். பாசிச பாஜக-வை வீழ்த்துவதன் மூலமே இந்திய சனநாயகத்தைக் இனி காப்பாற்ற முடியும்.

மூன்றாவது தேசிய கட்சிக்கு இடமுண்டா பலமுண்டா?

தற்போதைய சூழலில் சில மாநிலக் கட்சிகள் தத்தமது மாநிலங்களில் பாஜகவை வலுவாக எதிர்த்து வெற்றி பெறுகின்றன. ஆனால், அவற்றால் தேசிய அளவில் பாஜகவுக்கு தகுந்த மாற்று சக்தியாக உருவெடுக்க முடியுமா? என்பது மில்லியன் கேள்வி. ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கட்சி பெறும் வாக்குகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலுமே தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு கட்சி தன் மாநிலத்திற்கு வெளியே போட்டியிட்டு சில தொகுதிகளை வெல்வது அல்லது குறைந்தது 4 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுவது மட்டுமே தேசியக் கட்சியாக மாறுவதற்கான வழிமுறை.

கடந்த காலங்களை உற்றுநோக்குகையில் சில கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் வெற்றிபெற்று, தேர்தல் ஆணையத்தின்படி, தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றாலும், களத்தில் அக்கட்சிகளால் தேசியக் கட்சியாக வளர இயலவில்லை. தற்பொழுது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, வேறொரு மாநிலத்தில் ஆட்சியமைத்த முதல் பிராந்திய கட்சியாக உள்ளது.

பல குறுக்கு வழிகளில் நாடு முழுவதும் பா.. பலத்தை அதிகப்படுத்தி வந்தாலும், பல்வேறு மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது. பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காலூன்ற பா.. சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், அக்கட்சிகளுடன் போட்டியிடுவதை விடுத்து பல்வேறு மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடனேயே பா.. கூட்டணி என்கிற யுக்தியையும் கையாள்கிறது. அதுவும் கைகொடுக்கவில்லை என்றால் வெற்றி பெறுபவர்களை விலைக்கு வாங்கும் அயோக்கியத்தனமும் இங்குண்டு! காங்கிரசின் பலம் குறைந்த நிலையில் இருந்தாலும், ஒன்றிய அளவில் இருப்பு கொண்டுள்ள மற்றொரு கட்சியாக காங்கிரசே உள்ளது. இந்த இரு கட்சிகளையும் சுற்றியே இந்திய தேசிய அரசியல் உள்ளது என்பதே உண்மை.

திசை திருப்பும் சக்திகளிடம் எச்சரிக்கை

பா.. எதிர்ப்பு என்பதில் எள்ளளவும் மறுப்பில்லாமல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளது. மாநில கட்சிகள் தேசியக் கட்சியாக உருவெடுக்கும் கனவில் ஏற்படும் பாதகம் மீண்டும் பாஜக-வுக்கு சாதகமாக வாய்ப்புண்டு அல்லவா! எனவே, எப்படி எல்லாரும் ஓரணியாய் இணைவது? இதுதான் தற்போது நமக்கிருக்கும் மிகப்பெரும் சவால். கூடுதலாக நம்மை திசைதிருப்பும் சக்திகளிடமும் நாம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நடத்திவரும் ஜன் சூரஜ் நடைப்பயணம் பாஜக-வுக்கு ஆதரவான செயல்பாடு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர் துவக்கத்தில் மோடிக்கு தேர்தல் வேலை செய்தார். பின்னர், தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, பீகாரில் நிதிஷ் குமார், மேற்கு வங்கத்தில் மம்தா, தமிழகத்தில் மு.. ஸ்டாலின் ஆகியோருக்கு பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக ஜக்கிய ஜனதாதளத்திலிருந்து விலகி, காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். காங்கிரசில் சேரப்போவது இல்லை என்றும் அறிவித்தார். பாஜக-வை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டாலும், பாஜக-வைக் காட்டிலும், சமீபகாலமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மிக மோசமாக கேலி செய்து வருகிறார்.இந்நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வரும் நேரத்தில் தனது 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திற்கான ஜன் சூரஜ் பாத யாத்திரையை பிரசாந்த் கிஷோர் துவங்கியுள்ளார். திசைதிருப்பும் சக்திகளிடமும் எச்சரிக்கை அவசியம்.

Comment