No icon

நல்லாயன் ஞாயிறு-  இறையழைத்தல் ஞாயிறு - 25.04.2021

பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு
(திப 4:8-12, 1 யோவா 3:1-2, யோவா 10:11-18)
நல்லாயன் ஞாயிறு- 
இறையழைத்தல் ஞாயிறு
கடவுள் என்னும் நல்லாயன்
இது நல்லாயன் ஞாயிறு. விவிலியத்தில் காணப்படும் மிகச்சிறந்த உருவகம் ‘நல்லாயன்’ ‘ஆயன்’ என்பது ‘தலைவனுக்கு’ மாற்றுச்சொல். பாதியைப் பாலைவனமாகக் கொண்ட பாலஸ்தீனத்தில் ஆட்டுமந்தைக்குப் புல் மற்றும் தண்ணீர் கண்டுபிடிப்பது, இரவு பகல் பாராது பாதுகாப்பது பெரும் சவாலான காரியமாகும். சில துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்தோடு வார மற்றும் ஆண்டு விடுமுறைகள் உண்டு. ஆனால் ஆயன், விவசாயி போன்றோர் - இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் - நிறைய பணியாற்ற வேண்டும். மந்தையின் வெற்றியே ஆயனின் வெற்றியாகும். உயிர்ப்பு காலத்தில் இடம்பெறும் இன்றைய நற்செய்தி ஆயன் தம் மந்தைக்குக் காட்டவேண்டிய முழுமையான முக்காலப் பாதுகாப்பைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் தாயின் கருவில் உயிரின் ஓசை துவங்கிய நாளிலிருந்து பாதுகாத்து வழிநடத்திய கடவுள், தற்போதும் கண்களுக்குத் தெரியாமல் நமக்குள் வாழ்ந்து வழிநடத்தும் கடவுள், வருங்காலத்திலும் வாக்குத் தவறமாட்டார். நாம் இறந்த பின்னரும் உயிர்த்த இயேசுவின் அருட்காவல் தொடரும் என்பதை இந்த நல்லாயன் ஞாயிறு நினைவூட்டுகின்றது. இவ்வுலகில் நாம் மண்ணோடு மடிந்துபோனாலும் விண்ணுலகில் அவரைப்போன்ற மாற்றுடல் நமக்குத் தருவார் என்று நம்பிக்கையை இயேசுவின் உயிர்ப்புத் தருகின்றது. பலர் அவரைத் தேவையற்ற கல்லாக வெறுத்து ஒதுக்கினாலும், சிலுவையில் இன்னும் பலமுறை அறைந்தாலும் அவர் தமது மக்களின் முக்காலப் பாதுகாப்பிலிருந்து விலகுவதில்லை. 
‘நல்ல’ ஆயன்
‘நல்ல’ என்று பொருள்கொள்ளப்படும் காலோஸ் என்ற கிரேக்கச்சொல் பிரமாணிக்கம், மதிப்பு, முழுமை போன்றவற்றைக் குறிக்கின்றது. ‘நல்ல’ தலைவன் எந்த சூழலிலும் (தாமே அழிவுரும் வேளையில் கூட) தம் மந்தையைக் கைவிடுவதில்லை. அவர் தம் மந்தையை வழிநடத்த வேண்டிய பாதையை நன்கு அறிந்துள்ளார். மந்தைக்கு முன்னால் சென்று மந்தையை எதிர்கொள்ளும் துன்பங்களை (ஓநாய் துரத்துதல்) முதலில் தான் தாங்கிக் கொள்கின்றார். ஆயன் தோல்வியைத் தாம் ஏற்றுக்கொண்டு வெற்றியை மந்தைக்குப் பரிசளிக்கின்றான். ஒவ்வொரு ஆட்டின் தேவையை நிறைவேற்றி அவற்றிக்குத் தகுந்த மதிப்பளித்து சேவையாற்றுவதைத் தம் கடமையாகக் கருதுகின்றார். காணாமல்போன ஆட்டைத் தேடிச்சென்று, அதை மீண்டும் மந்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றார். கடவுள் ஆயனாக அருகிருக்கும்போது நாம் எதற்கும் பயம்கொள்ள வேண்டியதில்லை (திபா 23:4). அவரது கரங்களில் நாம் எப்போதும் அடைக்கலம் புகலாம். அந்தப் பாறை என்றும் நம்மைக் கைவிடாது. இருளின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. வாழ்வின் வழிப்பாதைகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருப்பதில்லை. வாழ்வுப்பயணத்தை பயமும் நிச்சயமற்றதன்மைகளும் வாட்டி வதைக்கின்றன. அப்போது கடவுள் நம்மோடு (நம் அருகில்) பயணிக்கின்றார் என்று திருப்பாடல் கூறுகின்றது (திபா 23:4). அதாவது, அவர் மேலிருந்து அழுத்துவதில்லை. பின்னால் இருந்து தள்ளுவதில்லை. முன்னால் சென்று அவர் வேகத்தில் நாமும் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. ‘அருகிலிருந்து’ தோள்மேல் தோள் கொடுத்துச் செல்கின்றார். பெரும் துன்ப வேளையில் அவர்தான் தோள்கொடுக்கும் தோழன்.
உயிர்கொடுப்பவர்
நல்லாயனின் முதல் குணம் மந்தைக்காக உயிர்கொடுப்பதாகும். சாதாரணமாக, ஆயர்கள் ஆட்டின் சதைக்காகவும் கம்பளிக்காகவும் உழைப்பர். பலன்பெறுவதே ஆயனின் நோக்கமாக இருக்கும். ஆனால், தம் மந்தையிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள விரும்பாது, தம்மையே மந்தைக்குக் கொடுப்பதால் இயேசு நல்லாயனாக அழைக்கப்படுகின்றார். தியாகம் நிறைந்த முழுமையான தற்கையளிப்பே நல்லாயன் யார் (10:11-13) என்பதைத் தீர்மானிக்கின்றது. கொடுப்பது - விருப்பத்தோடு உயிரையும் விட்டுவிடுவதைக் குறிக்கின்றது (10:17-18, 13:37-38, 15:13, 1 யோவா 3:16). பெரிய ஆயர் (எபி 13:20-21), தலைமை ஆயர் (1 பேது 5:4) போன்ற வாக்கியங்களும் தியாகத்தன்மையையே அடிக்கோடிடுகின்றன. பொதுவாக, மந்தைக்காகவும் மந்தைகளோடும் வாழும் ஆயர்கள், விபத்தில் மாட்டிக்கொள்ளும்போது தான் உயிர்விட நேரிடுகின்றது. ஆனால், இயேசுவின் வாழ்வு நோக்கமே மந்தைக்காக உயிர்விடுவதுதான் (6:51, 11:50-52). மனிதர்கள் எல்லா சூழல்களிலும் தம் சொந்த உயிரைப் பார்த்துக்கொள்ள விரும்புவர். மந்தையின் நல்வாழ்வுக்காக அதையும் கொடுக்க இயேசு முன்வருகின்றார். கெட்ட ஆயர்களிடமிருந்தும் ஆடுகளிடமிருந்தும் வன்முறையால் பறிக்கும் குணம் இருக்கின்றதே தவிர கொடுக்கும் குணம் கொஞ்சமும் இல்லை (10:12-13).இயேசு தம் மந்தைக்காக உயிர்கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாகும் (10:18).  இயேசு முழுமன சுதந்திரத்துடன் கடவுளின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். பிறருக்காக உயிரைக்கொடுக்கும் இயேசுவைக் கடவுள் உடனே உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்துகின்றார். 
அனைவரையும் அறிந்த ஆயன்
இது நல்லாயனின் இரண்டாம் குணமாகும். இயேசு தம் மந்தையைப் பற்றி முற்றிலும் அறிந்துள்ளார். ஆடுகளும் அவருக்குச் செவிசாய்க்கின்றன (10:14-15). இது ஒருவரையொருவர் நன்கறிந்த நிலையாகும். இதை அடிக்கோடிட மகன் (இயேசு) தம் தந்தையை (கடவுளை) அறிந்திருப்பதுபோல், இயேசு தம் மந்தையையும் அறிந்திருக்கின்றார் என்ற ஒப்பீடு அழுத்தம் பெறுகின்றது. இயேசு மந்தையோடு கொண்டிருக்கும் உறவு அவர் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை ஒத்தது. அதாவது உறவுப் பரிமாற்றத்தில் பின்னிப்பிணைந்தது. எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாத உள்ளார்ந்த ஒன்றிணைப்பு இதுவாகும் (உரோ 8:31-37). ஏனெனில் அறிதல் என்று பொருள்கொள்ளப்படும் ‘கினோஸ்கோ’ என்ற கிரேக்கச் சொல் நம்பிக்கையிலும், உள்ளாண்மையிலும் உருவாக்கப்படும் உறவைக் குறிக்கின்றது. இது பார்த்தல், கவனித்துக்கொள்ளுதல், அனுபவித்தல் போன்றவற்றுடன் தொடர்புடையது. 
மக்கள் தம் மந்தை என்பது கடவுளின் ஒவ்வொரு நாள் அனுபவமாகும். மந்தையின் பலவீனங்களைப் பெரிதாக்காது, பலம் வாய்ந்த மந்தையைக் கடவுள் உருவாக்குகின்றார். ஒவ்வொரு மனிதனின் திறமைகளும் உணர்வுகளும் போராட்டங்களும் தேவைகளும் வேறுபடுகின்றன. ஒவ்வொன்றையும் நன்கறிந்து அவற்றை முறையாக நிறைவுசெய்பவனே உண்மைத் தலைவன். இதன் அடிப்படையிலே இயேசு பாவத்தைத் தீர்ப்பிட்டுவிட்டு பாவிகளை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். தம்மை மறுதலித்த பேதுருவை மன்னித்து தலைமை ஆயன் பொறுப்பைத் தருகின்றார். கடவுள் ஒவ்வொரு மனிதரையும் (படைப்பையும்) அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். திறமைகளின் பொருட்டு யாருக்கும் சிறப்பு அன்பு காட்டுவதில்லை. பலவீனங்களின் அடிப்படையில் அவர் யாரையும் வெறுப்பதில்லை. 
கீழ்ப்படிதல் உள்ள மந்தை
மகன் தந்தையின் விருப்பத்தைப் பின்பற்றி அதன்படி நடப்பதுபோல், மந்தையும் ஆயனைப் பின்பற்ற வேண்டும். உண்மையான ஆண்டவரின் மந்தை அவரின் குரலைக் கேட்டு அவருக்குக் கீழ்ப்படிகின்றது. அவரது அறிவுரைகளையும் அறவுரைகளையும் அன்றாட வாழ்வின் வழக்காகிவிடுகின்றன. எப்போதும் வேலிகளைத் தாண்டும் எந்த வெள்ளாடும் கடவுளின் மந்தையைச் சேர்ந்ததல்ல. கொஞ்சம் புளிப்பு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பேற்றுவதுபோல் (1 கொரி 5:6), மந்தையில் வாழும் ஒருவரின் குற்றம் நிறைந்த வாழ்க்கை மற்றவர்களுக்குத் தவறான முன் உதாரணமாகின்றது. கட்டாறு மழைகாலத்தில் கரைபுரண்டு ஓடுவது இயற்கையாகும். அதற்குக் கரைகட்டி கடலுக்கு அனுப்புவது மனிதர்களின் கடமையாகும். இதுபோல் தாம் நினைத்ததை எல்லாம் செய்யும் உரிமை தமக்குண்டு என்று பேசிஅலையும் மந்தையைத் தீர்க்கமாகத் திருத்தும் கடமை ஆயனுக்குண்டு. கனிகொடுக்கும் வகையில் தறிக்கப்படாத திராட்சை கொடி காட்டுச் செடியாக மாறிவிடும். யாருக்கும் எல்லையில்லாத சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. சமுதாயத்தில் மற்றவர்களோடு வாழும்வேளைகளில் ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கும் வகையில், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். தற்போது கடவுளின் குழந்தைகளாக இருக்கும் நம்மை கடவுள் எல்லையற்ற விதத்தில் அன்பு செய்துள்ளார் என்று இரண்டாம் வாசகம் கூறுகின்றது. கடவுளின் குழந்தைகள் அந்த தகுதிக்கு ஏற்ற முறையில் வாழ்வது சிறப்பு. அன்பை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்குத் தோல்வியே இல்லை. 
ஓர் ஆயன் ஒரு மந்தை (10:16)
எல்லாரும் என் மக்கள் என்ற பொதுமை அறத்தை இயேசு குறிப்பிடுவதுபோல் உள்ளது (10:3-4). இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் பிற இன மக்களும் அவரின் மந்தையைச் சேர்ந்தவர்களே (யோவா 17:20, எபே 2:11-22, 3:6). இயேசு ஆபிரகாமின் சந்ததிகள் என்ற குறுகிய வட்டத்தையும் தாண்டி அனைவரையும் அன்பால் அரவணைக்கின்றார். ஒரு குலத்தையோ இனத்தையோ வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவது இயேசுவை அவரது உயர்தன்மையிலிருந்து குறைத்துவிடும். பாவிகள் ஒதுக்கப்பட்டோர் என்று எவரும் இயேசுவின் பார்வையில் இல்லை. ஏனெனில் இயேசு என்ற புண்ணிய பூமிக்குள் நுழைவோரின் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு அவர்கள் பரிசுத்தவான்களாகிவிடுவர்.பாவி என்று கருதப்பட்ட சக்கேயுவுக்கு இதுதான் நிகழ்கின்றது. விபசாரத்தில் பிடிபட்ட பெண் இயேசுவின் தீர்ப்பைக் கேட்டபின் கட்டாயமாகப் பாவச்செயல் எதிலும் ஈடுபட்டிருக்க மாட்டார். இயேசு தமது வாழ்நாளில் மற்ற மத மற்றும் இன உணர்வுகளைப் புண்படுத்தவில்லை. பிற இனப்பெண்ணின் நம்பிக்கையை மெச்சினார் (மத் 8:10). சமாரியர்களை நன்றியறிந்திருக்கும் குணத்திற்கு முன்மாதிரியாகக் காட்டினார் (லூக் 17:18). நாற்பதிற்கும் அதிகமான முறை பிற இன மக்களின் நிலங்களில் வழியாக பயணித்தார் (அவர்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்) என்று நற்செய்தி கூறுகின்றது. பிற இன மக்களில் இருக்கின்ற நல்லாண்மைகளை இயேசு பாராட்டினார். அதே சமயத்தில் தம் தாய் மதமான யூத மதத்தில் முளைத்துக்கிடந்த களைகளை முனைப்புடன் அகற்றினார். இந்த நல்லாயனின் அரவணைப்பில் ஒதுக்கப்பட்ட மக்களினம், பயனற்றவர்கள் என்று அழைக்கப்படும் மானிடர்கள் எவரும் இலர். 
தலைவனுக்கான தேடல்
இன்று சில நாடுகளில் தரம்கெட்ட தலைவர்கள் பெருத்துப்போய்விட்டனர். மந்தைக்குப் போதுமான உணவுகொடுத்து அதில் பெருமைகொள்ளும் ஆயர்கள் கொஞ்சம் குறைவு. தாம் எப்படியாவது தலைவனாகி, நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காக எல்லா நல்மதிப்பீடுகளையெல்லாம் அடகு வைக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. எனவே, உண்மை, திறமை, பொறுப்புணர்வு, தொலைநோக்கு, உணர்வுகளைப் புரிந்துகொள்தல், தியாக மனப்பாங்கு நிறைந்த நல்ல தலைவர்களைச் சமூகம் தேடிக்கொண்டுள்ளது. சிலர் பெயரளவு மட்டுமே தலைவர்களாக இருக்கின்றனர். கெட்ட ஆயர்கள் ஓநாய் வருவதைப் பார்த்து ஓடிவிடுவர். கூலிக்கு வேலைசெய்யும் கூட்டம் அதுவாகும் (எரே 10:21-22, 12:10, செக் 11:4-17). கலர் படங்களில் நம்மை அடகு வைத்துவிட்டு திரையில் தெரிவது எல்லாம் உண்மை என்று நம்பும் நமது சமுதாயம் மாற்றம் பெறுவது அவசியமாகும். இன்று நடிகர் நடிகைகள் தலைவர்களாகத் துடிக்கின்றனர். நல்லவர்கள் போல் நடித்து தலைமைப் பொறுப்பை அடைந்தவர்களின் வாழ்வு முழுவதும் நடிப்புத் தொழிலாகவே மாறிவிட்டது. பல ஆற்றல் படைத்த (தலைவர்களாகும் தகுதிப்படைத்த) இளைஞர்கள் இந்த வேடாதாரிகள் பின் அலைவது கவலைக்குரிய செயலாகும். 
மக்களுக்காக வாழும் தலைவன்
கோல்பே போன்ற எத்தனையோ நம்பிக்கையாளர்கள் பிறர் நல்வாழ்வுக்காக மறைசாட்சிகளாக உயிர்விட்டுள்ளனர். மற்றவர்களுக்காக வாழ்வதில், உயிர்கொடுப்பதில் புனிதர்கள் பெருமை கொண்டனர். பொருள்ஈட்டுவதும், சில பணம்படைத்த நாடுகளில் வாழும் மக்களின் வசதியான வாழ்வு மட்டுமே முழுமுதல் நோக்கமாகிவிடக்கூடாது. நிறைவான பலன்களை விரைவாகப் (குறுக்கு வழியில்) பெற்றுவிட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியிருக்கும் சமுதாயத்தில் மக்களின் உடல்நலம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.அதுவும் அடுத்தவரின் உயிரைக் குடித்து சம்பாதிக்கும் பணம் சாவான பாவமாகும். மாடுகள் நிறைய பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடுகளுக்கு ஊசிபோடும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. தம் மக்கள் வசதியாக வாழ்வதற்கான பொருள்கள் தயாரித்துக் கொடுப்பதற்கே மூன்றாம் உலக நாடுகள் படைக்கப்பட்டுள்ளன என்ற தவறான எண்ணம் அகற்றப்பட வேண்டும். உலகில் வாழும் மக்கள் அனைவரையும் தம் சொந்த மக்களாக ஏற்று, அவர்கள் அனைவருக்கும் உணவு, உடை, மருத்துவம், கல்வி அனைத்தையும் இலவசமாக உறுதிசெய்யும் பொதுவான உலகத் தலைவன் உருவாகும் நாளில் உலகம் முழுவதும் நந்தவனமாகும். 

Comment