No icon

ஞாயிறு – 02.04.2023

ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - எசா 50:4-7, பிலி 2:6-11, மத் 26:14-27,66

குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட இயேசுவின் பாடுகள் வரலாற்றுக்கும் மூன்று முரண்கள் உள்ளன அல்லது இயேசு மூன்று நிலைகளுக்குக் கடந்து போவதை நாம் காண்கிறோம். இவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

(அ) உடனிருப்பிலிருந்து உதறித் தள்ளுதலுக்கு

மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிற கழுதைக்குட்டி நிகழ்வில், ‘ஒரு கழுதையும் அதனோடு ஒரு குட்டியும்’ என இரண்டு விலங்குகள் அழைத்து வரப்படுகின்றன. மற்ற நற்செய்தியாளர்கள் கழுதைக்குட்டி மட்டுமே வருவதாகப் பதிவு செய்கிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர், ‘கடவுள் நம்மோடு’ என்னும் உடனிருத்தலின் செய்தியைத் தருகிறவர். கழுதையும் அதனோடு ஒரு குட்டியும் என்பதை, இயேசுவின் பாடுகளில் அவரோடு உடனிருந்த தந்தையை நாம் நினைவு கூர்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடவுள் இயேசுவோடும் உடன் நடக்கிறார். இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது, அவருடைய சீடர்களும், மக்களும் உடன் நடக்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்கள் இயேசுவை உதறித் தள்ளுகிறார்கள்.

(ஆ) புகழ்ச்சியிலிருந்து தீர்ப்பிடுதலுக்கு

ஓர் அரசர் அல்லது பெரியவர் ஊருக்குள் நுழையும்போது, அவருக்கு முன்னே துணிகளை விரிப்பதும், அவரை எதிர்கொள்ள கொடிகள் பிடிப்பதும் வழக்கம். இன்றும் சில ஊர்களில் தேர்ப்பவனி செல்லும் இடங்களிலும், நற்கருணைப் பவனியிலும் பவனிக்கு முன்னே துணிகள் விரிக்கப்படுவது வழக்கம். அதாவது, தங்களுடைய மீட்பரும் அரசருமாகிய ஒருவரைத் தாங்கள் கண்டுகொண்டதாக உணர்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவரை அரசராகப் புகழ்ந்து பாடியவர்கள் அவருக்குச் சிலுவைத் தீர்ப்பு அளிக்கிறார்கள். ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா!’ என்னும் சொற்கள் விரைவில் ‘இவனைச் சிலுவையில் அறையும்’ என மாறுகின்றன.

(இ) மாட்சியிலிருந்து அவமானத்துக்கு

குருத்தோலை, கழுதைமேல் பவனி, வழியில் துணிகள் என மாட்சி பெற்ற இயேசு, அவருடைய சிலுவைப் பயணத்தில் மிகுந்த அவமானம் அடைகிறார். குருத்தோலையின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை அவருடைய தோளைப் பற்றிக்கொள்கிறது. கழுதைமேல் பவனி வந்தவர் தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகிறார். பவனியின்போது மற்றவர்கள் தங்கள் மேலாடைகளை விரித்தனர். சிலுவைப் பயணத்தில் இயேசுவின் மேலாடை பறித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்காணும் மூன்று முரண்களை அல்லது மூன்று நகர்வுகளை இயேசு எப்படி எதிர்கொண்டார்?

(அ) இரு நிகழ்வுகளையும் இயேசு அவை இருப்பதுபோல அப்படியே ஏற்றுக்கொள்கிறார். எந்தவித எதிர்பார்ப்போ, மறுப்போ அவரிடம் இல்லை.

(ஆ) இரு நிகழ்வுகளுமே தம் கட்டுக்குள் இருப்பவை அல்ல எனத் தெரிந்தாலும், தன் கட்டுக்கோப்பை இழக்காதவராக இருக்கிறார் இயேசு.

(இ) இவ்விரு பயணங்களையும் தாண்டிய மூன்றாவது பயணம் - இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு - இயேசுவுக்கு எப்போதும் நினைவில் இருந்ததால் இவை இரண்டுமே அவற்றுக்கான பயணங்கள் என எடுத்துக்கொண்டார்.

நம் வாழ்வின் முரண்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?

Comment