
24, செப்டம்பர் 2023 ஆண்டின் பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு
எசா 55:6-9, பிலி 1:20உ-24, 27; மத் 20: 1-16
“உலகில் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே” என்பார்கள். நம் அனைவரின் இதயங்களும் இந்த எண்ணக் குவியல்களால்தான் நிரம்பி வழிகின்றன. நாம் எதை அதிகமாக நினைக்கின்றோமோ, அதுவாகவே மாறுகின்றோம். நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே நமது வாழ்க்கை அமைகின்றது. “நம் எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன” என்கிறார் புத்தர். “எண்ணங்களே உலகை ஆள்கின்றன” என்கிறார் எமர்சன். கண்ணதாசன் சொன்னது போல் “பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!” ஆகவேதான் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்கிறோம்.
‘ஒருவன் தீய எண்ணங்களுடன் பேசினாலும், தீய செயல்களைச் செய்தாலும் அவற்றால் உருவாகும் தீய விளைவுகள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின்தொடரும் வண்டியைப் போல் அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே வரும்’ என்கிறது புத்த வேதமான தம்ம பதம். நம் இதயங்களில் அழகிய எண்ணங்கள் அரும்பினால் நம் முகத்தில் இறைவனின் சாயல் வெளிப்படும். இறைவனின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு நமது எண்ணங்களை மாற்றி, விண்ணகத் தந்தையைப்போல நல்லவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது இன்றைய வழிபாடு.
கடவுளின் எண்ணங்கள் மிக உயர்ந்தவை! அவரது வழிமுறைகள் மிகச் சிறந்தவை! ஆண்டவரின் செயல்கள் அனைத்தும் நீதியுடையவை! கடவுளின் வழி, மனிதனால் சிந்திக்கவே முடியாத அளவு பன்மடங்கு உயர்ந்தது. விண்ணகத்திலிருந்து மண்ணகம் வெகுதொலைவில் இருப்பது போல, கடவுளின் வழிமுறைகள் மற்றும் எண்ணங்களிலிருந்து மனித எண்ணங்களும், வழிமுறைகளும் வேறுபட்டவையாக, வெகுதொலைவில் இருக்கின்றன என்கிறார் இறைவாக்கினர் எசாயா. எவ்வாறு நமது எண்ணங்கள் இறைவனின் எண்ணங்களிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன என்பதை இன்றைய நற்செய்திப் பகுதியில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர் உவமை வழியாகக் கற்றுக்கொள்வோம்.
தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளிகளைத் தேடிச்செல்லும் ஒரு முதலாளியின் கதைதான் இது. திராட்சைத் தோட்ட உரிமையாளர், தன் தோட்டத்தில் பணியாற்ற திராட்சைத் தோட்டப் பணியாளர்களை விடியற்காலை அதாவது காலை ஆறு மணி முதலே வேலைக்கு அமர்த்துகிறார். இவர்கள் கதிரவன் எழும் நேரத்திலிருந்து, அடையும் நேரம்வரை வேலை செய்ய வேண்டும் என்பது அன்றைய காலத்தின் பொதுவான வேலை நேரம். அதாவது, காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை செய்வது என்பது ஒரு நாளுக்குரிய வேலை. இந்த ஒரு நாளுக்கான பொதுவான கூலி ஒரு தெனாரியம். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட தினக்கூலி. அன்றைய நாளுக்குரிய ஒரு குடும்பத்துக்குரிய உணவாகும். இந்தக் கூலியை வழங்குவதாகத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.
மழைக்காலத்துக்கு முன்பே அனைத்தையும் அறுவடை செய்ய வேண்டியதினால் வேலையாள்கள் பலர் தேவைப்படுவர். எனவேதான் விரைவாக அறுவடை செய்யத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் காலை ஒன்பது மணிக்கும், பன்னிரண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும், மாலை ஐந்து மணிக்கும் வெளியே சென்று பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, நேர்மையான கூலியைத் தருவதாகக் கூறுகிறார். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் கதிரவன் மறையும் முன் கூலி கொடுக்கப்பட வேண்டும். “அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு; ஏனெனில், அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது” (இச 24:15).
கூலி கொடுக்கும்போது ஒரு புரட்சிகரமான செயல்திட்டத்தைக் கையாள்கிறார் திராட்சைத் தோட்ட உரிமையாளர். பொதுவாக, யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? விடியற்காலையில் வேலைக்கு வந்தவர்களுக்குத்தானே! ஆனால், திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி, முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடுக்கச் சொல்கிறார்.
ஐந்து மணிக்கு வந்து, ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்த பணியாளருக்கு ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கொடுக்கப்படுகிறது. இதைப் பார்த்த மற்றவர்கள் தங்களுக்கு மிகுதியான கூலி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசியபடியே, ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என அந்நிலக்கிழாருக்கு எதிராக முணு முணுக்கின்றனர் முதலில் வந்தவர்கள். ‘பகல் முழுவதும் வேலைப் பளுவையும், கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு கடைசியில் வந்தவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டும், புலம்பலும் நியாயமானதுபோல இருந்தாலும், அதில் எந்த நியாயமும் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், நிலக்கிழார் எவரையும் ஏமாற்றவில்லை; அவர் எவருக்கும் அநீதி இழைக்கவில்லை. பேசியபடியே நியாயமான கூலியை வழங்குகிறார்.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் பகல் முழுவதும் வேலை செய்தவருக்கும், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவருக்கும் சமமான கூலியைக் கொடுத்தது நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, இரக்கத்துடன் செயல்பட்டதன் வெளிப்பாடு. உண்மையில், ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ (வ.7) என்று சொன்னவர்களின் உள்ளத்து உணர்வுகளையும், வலிகளையும் புரிந்துகொண்ட திராட்சைத் தோட்ட உரிமையாளர், ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அவர்களிடம், “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்” (வ.7) என்கிறார். “மனிதர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்காமல் இருக்கும் சமுதாயமும், கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயமும் நீதியான சமுதாயம் அல்ல” எனும் திருத்தந்தை பிரான்சிசின் வரிகள் தான் இங்கே நினைவுக்கு வருகின்றன.
மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த உவமை, திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றச் செல்லும் வேலையாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் கூலியையும் மையப்படுத்தி அமைந்திருந்தாலும், இவ்வுவமையின் ஆரம்பத்தில், “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிட லாம்” (வ. 1) என்று இயேசு கூறுவதால், விண்ணரசின் பண்புகளை விளக்கும் மற்றுமோர் உவமையாக இதைச் சிந்திப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச் சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய காலக் கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம். இந்நூல் எழுதப்பட்ட அக்காலத்தில் திரு அவைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் எழுந்தது. காரணம், கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய யூதக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் பின்னர் வந்த பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் திரு அவையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரையும் மற்ற யூதர்கள் துன்புறுத்தினர்; தாங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற தலைக்கனத்தோடு மற்றவர்களைத் தாழ்வாகக் கருதி வெறுத்தனர்; இரண்டாம்தர மக்களாக அவர்களை நடத்தினர். கடவுள் கொடுத்த திருச்சட்டங்களைப் பல காலம் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த தங்களுக்கே தலைமைத்துவம் கிடைக்க வேண்டும் எனக் கருதினர். இந்தப் பின்புலத்தில் இன்றைய உவமையின் இறுதி வசனம் “கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” (வ.16) என்பது இயேசுவின் பணியின் சிறப்புத் தன்மையைக் காட்டுகின்றது.
எப்போதும் தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும் யூத மக்களையும், கடைசியில்தான் இறையாட்சி சமூகத்தில் இணைந்துள்ள பிற இனத்தார், பாவிகள், விலைமாதர்கள், வரிதண்டுவோர் ஆகியோரையும் ஒன்றாகக் கருதி எல்லாருக்கும் இறையாட்சி சமூகத்தில் சமமான இடம் கொடுத்து மகிழ்கிறார் கடவுள். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர்தானே இறைவன்! அவர் அனைவரையும் சமமாக நடத்த விரும்புகிறார்! அனைவரும் நலமாயிருக்க, நிறைவோடு வாழ வாய்ப்பு தந்து, சமமான ஊதியம் வழங்குகிறார். நீதியோடு, நடுநிலையோடுதான் அவரால் செயல்பட முடியும்!
இறைவன் வழங்கும் கொடை மனிதரின் செயல்களால் வருவதன்று; அது கடவுள்தாமே வழங்கும் கொடை! அவர் விரும்பியபடி விரும்பியோருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குகிறார். கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தாம். நமது எண்ணங்களின்படி அவரை பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுவதால், அமைதியின்றி தவிப்பதும் நாம்தாம். “தோழரே நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” (மத் 20:15) என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், நம்முடைய பதில் என்னவாக இருக்கும்? நீதியோடு மட்டுமல்லாமல், இரக்கத்தோடும் நடப்பவர் இறைவன் என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது. நாம் கற்க வேண்டிய வாழ்வுக்கான பாடங்கள் என்னென்ன?
1. அடுத்தவருக்கு என்ன கிடைக்கிறது என்பதில் நம் கவனம் திரும்பும்போது, ஒப்புமைகள் தோன்றுகின்றன. நமது உழைப்பு, நமது திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் கொண்டு மனநிறைவு அடையும் நாம், அடுத்தவர் பெறுவது எவ்வளவு என்ற ஒப்புமைக் கணக்குப் பார்க்கும்போது, மனநிறைவை இழந்து, குறைகூற ஆரம்பிக்கிறோம்; உவமையில் வரும் முணுமுணுத்த பணியாளர்களைப் போல!
2. கூலி என்பது திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ப வழங்கப்படுவது என்பது பொதுவான பார்வை. ஆனால், இயேசுவின் பார்வையில் வேலைக்கான கூலி என்பது ஒரு மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தேவையைக் கருத்தில் கொள்ளாது, திறமையை மட்டும் கணக்கில் எடுக்கும் கூலி, கடவுளின் பார்வையிலான கூலி அன்று; அது இயேசுவின் பார்வைக்கும் முரணானது. இப்போது திராட்சைத் தோட்ட உரிமையாளர் வழங்கிய கூலி சரி என்றுதானே தோன்றுகிறது!
3. மனிதனின் பார்வை வேறு; இறைவனின் பார்வை வேறு. சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள் சமூகத்தில் முதன்மையானவர் ஆகிறார்கள். ஏழை, எளியவர்கள் கடைநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், இறைவனின் பார்வையில் சட்டங்களிலும், சமயங்களிலும் ஊறிப் போய், எப்போதும் முதன்மையானவர்கள் எனக் கருதப்படுவோர் ஓரங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மையப் புள்ளிக்கு அழைத்து வரப்படுகிறார்கள். மையங்கள் ஓரமாவதும், ஓரங்கள் மையமாவதும் இறைவனின் விளையாட்டு!
“ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே” (திபா 145:17).
Comment