No icon

12, நவம்பர் 2023-விழிகள் திறந்தால், ஞானம் பிறக்கும்!   

ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு(முதல் ஆண்டு) சாஞா 6:12-16, 1தெச 4:13-18, மத் 25:1-13

ஆண்டின் பொதுக்காலம் நிறைவு பெற்று, திருவருகைக் காலம் பிறக்க இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. திருவழிபாட்டு ஆண்டும் நிறைவுறும் வேளையில், பொதுக்காலத்தின் கடைசி மூன்று வாரத்தின் ஞாயிறு வாசகங்களும் மானிட மகனின் வருகையைச் சுட்டிக்காட்டி, விழிப்பாயிருந்து, பொறுப்புணர்வுடன் செயல்பட நம்மை அழைக்கின்றன. ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு வாசகங்கள் ஆண்டவரின் வருகைக்காக முன்மதியோடு விழிப்பாய், ஆயத்தமாய் இருக்க வேண்டுமென்று அழைப்பு கொடுக்கின்றன. எதிர்பாராத நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

இத்தாலி நாட்டின் வட பகுதியில் அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச் சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்து வந்த அந்த மாளிகையையும், தோட்டத்தையும் வயதில் முதிர்ந்த ஒருவர் பராமரித்து வந்தார். ஒரு நாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், “இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாள்கள் ஆகின்றன?” என்று கேட்டார். அதற்கு மேற்பார்வையாளர், “12 ஆண்டுகள் ஆகின்றன” என்று பதில் சொன்னார். “ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, முதலாளி எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?” என்று கேட்டதற்கு, அவர், “இல்லை” என்று பதில் கூறினார். “நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கேலியாகச் சொன்ன அந்தச் சுற்றுலாப் பயணியைப் பார்த்து, “நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்” என்று பதில் சொன்னார்.

யூத மக்களின் நடைமுறைத் திருமண வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட உவமை ‘பத்துத் தோழியர் உவமை’. தோழியர் என்பது கிரேக்க மூலத்தில் ‘கன்னியர்’ என்று உள்ளது. இது மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெற்றுள்ள உவமையாகும். மத்தேயுவின் பார்வையில் இவ்வுவமை இறுதிக் காலத்தோடும், இயேசுவின் இரண்டாம் வருகையோடும் தொடர்புடையதாக அமைகிறது.

யூதர்களின் சமூக வாழ்வில் திருமணம் ஒரு முக்கியப் பங்கை வகித்தது. ஓர் ஊரில் ஒரு திருமணம் நிகழ்கிறதென்றால், அது அந்த ஊருக்குப் பெரும் திருவிழா! யூத மக்களிடையே திருமண விழா ஏழு நாள்களாக நடைபெற்றதாகத் தெரிகிறது. திருமண விழாக்களில் ஆடலும், பாடலும், விருந்துண்ணலும், திராட்சை மது அருந்தலும் இடம்பெறும். அத்திருமணத்தில் ஊரில் உள்ளோர் அனைவரும் பங்குபெறுவர்.

யூதத் திருமணத்தில் இரு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, மணமகளைத் திருமண ஒப்பந்தம் செய்துகொள்வது. இரண்டாவது, திருமணம் நடைபெறுவது. முதலில் திருமண ஒப்பந்தம் மண மகளின் இல்லத்தில் நடைபெறும். இரண்டாவது, திருமணம் மணமகன், மணமகள் வீட்டிற்குச் சென்று, மணமகளை மணமுடித்துத் தன் வீட்டிற்கோ அல்லது தனது தந்தையின் வீட்டிற்கோ அழைத்து வருவதில் நிகழ்கிறது. அவ்வாறு அழைத்து வரும்போது, மணமகனை வரவேற்று அவரோடு மணமகள் வீட்டில் நுழைய மாலை வேளையில் மணமகளின் தோழியர் காத்திருப்பர்.

திருமணங்களைப் பொறுத்தவரையில் மணமகன்-மணமகள் வசதிப்படியே அனைத்தும் நடக்கும். மணமகளைத் தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல மணமகன் தனக்கு வசதியான நேரத்தில்தான் வருவார். எனவே, மணமக்களின் வருகைக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

‘காத்திருத்தல்’ என்பது ஓர் அழகிய, இன்பமான, சுகம் நிறைந்த ஓர் அனுபவம். மனித வாழ்வு என்பது தனது கனவுகள் நிறைவேறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு காத்திருக்கும் பல அனுபவங்கள் நிறைந்தது என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல;  ஏனெனில், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. திருவிவிலியப் பார்வையில் காத்திருத்தல் என்பது ‘நம்பிக்கையோடிருத்தல்’ என்பதாகும். ‘நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் எனும் உறுதியோடு’ (எபி 11:1) காத்திருத்தல் ஆகும். ஆண்டவருக்காக நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள் நற்பேறுபெற்றவர்களாக மாறுகின்றனர்.

காத்திருப்பதிலும் ‘முன்மதி’ இருக்க வேண்டும். முன்மதி என்பது முன்தயாரிப்பு எனப் புரிந்துகொள்கிறோம். ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமெனில், அதை அடைவதற்குத் தகுந்த முன் தயாரிப்புத் தேவை. ‘மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்’ (மத் 25:1) என்று உவமையை ஆரம்பிக்கும் இயேசு, அந்தப் பத்துத் தோழியரில் ஐந்து பேர்கள் அறிவிலிகள், மற்ற ஐந்து பேர்கள் முன்மதி உடையவர்கள் என்ற முக்கிய வேறுபாட்டையும் உணர்த்துகிறார்.

“மணமகன் வரும் நேரம் யாருக்கும் தெரியாது” (மத் 24:33, 42, 44). மணமகனின் வருகைக்காகப் பத்துத் தோழியரும் காத்திருக்கின்றனர். அவர்களுள் ஐந்து பேர் தகுந்த முன்தயாரிப்போடு காத்திருக்கின்றனர். அறிவிலிகள் ஐந்து பேர்கள் தகுந்த தயாரிப்பின்றி மணமகனுக்காகக் காத்திருக்கின்றனர். எனவே, இவர்களின் காத்திருப்பு ‘விழலுக்கு இறைத்த நீர்போல்’ பயனற்ற செயல் ஆகிவிடுகிறது.

மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், அறிவிலிகள் ஐவரும் விளக்குகளை எடுத்துச் சென்றார்களே தவிர, விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய்யை எடுத்துச் செல்ல மறந்துவிட்டனர். மணமகன் வருவதற்குக் காலம் தாழ்த்தப்பட்ட அந்த நேரத்திலாவது, இந்த ஐந்து பெண்களும் தங்களிடம் எண்ணெய் இல்லை என்பதை அறிந்து, அதை வாங்கச் சென்றிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. மாறாக, தூக்கக் கலக்கத்தால் உறங்கி விடுகின்றனர். எனவே, அவர்களால் திருமண மண்டபத்துக்குள் நுழைய இயலவில்லை. ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்; குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ எனும் பாடல் வரிகளுக்கேற்ப, இந்தத் தோழியர் ஐவரும் இயேசுவைக் (ஞானத்தை) கோட்டை விட்டுவிட்டனர்.

முன்மதியுடைய ஐந்து தோழிகளும் தொலை நோக்குப் பார்வைகொண்டவர்களாக, அடுத்து நடக்கவிருப்பதைத் தேர்ந்து தெளியும் எண்ணம் கொண்டவர்களாக, திட்டமிட்டுச் செயல்படுத்தும் கூரிய அறிவு உடையவர்களாக, விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணைய்யை எடுத்துக் கொண்டு சென்றனர்; ஞானத்தோடு செயல்பட்டனர். அவசியமற்றவைகளில் அதிகக் கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்துவிட்டால், வாழ்வில் மிக முக்கியமானவைகளை இழக்க நேரிடும் என்பதற்கு முன்மதியில்லா ஐந்து தோழியரும் சிறந்த உதாரணம்.

எனவே, நாம் இந்த ஐந்து அறிவிலிகளைப் போல இருந்துவிடாமல், ஞானமிக்கவர்களாக இருக்க வேண்டும் என இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஞானத்தைப் பற்றிப் பேசும்போது, ‘ஞானம் ஒளிமிக்கது; மங்காதது’ என்று இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் நூலாசிரியர் கூறுகிறார். மேலும், ‘வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்’ எனவும் அறிவுரை வழங்குகிறார்.

இங்கு ‘ஞானம்’ யார் என்பதைப் புரிந்து கொள்வோம். பழைய ஏற்பாட்டு நூலில் ‘ஞானம்’ ஓர் ஆளாக உருவகிக்கப்படுகிறது. ஞானம் ஓர் இறை வாக்கினரைப் போன்று ‘உரத்தக் குரலில்’ வீதிகளிலிருந்து பேசுகிறது (நீமொ 1:20; எரே 5:1). ‘ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு; எனவே, மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது’ (சாஞா 7:25).

திருத்தூதர் பவுல் ‘கிறிஸ்துவே ஞானமாக இருக்கின்றார்’ எனக் கூறுகின்றார். ‘கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கின்றார்’ (1கொரி 1:24). மேலும், ‘கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்’ (1கொரி 1:30); ஞானமாகிய இயேசுவே ‘மணமகனுக்கு’ உருவகிக்கப்படுகிறார் (மத் 9:15). தொடக்கத் திரு அவையின் பாரம்பரியமும் இயேசுவை மணமகனாக உருவாக்குகின்றன (2கொரி 11:2; எபே 5:21-33). எனவே, இன்றைய நற்செய்தியின் ஒளியில் மணமகனாகிய இயேசு (ஞானம்) வெற்றிகரமாக மீண்டும் வரும் நாளும், நாழிகையும் நாம் அறியாத நிலையிலேயே, தயார் நிலையில் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டும் என்பதையே இன்று நாம் பாடமாகக் கற்றுக்கொள்கின்றோம்.

* நாம் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு நமக்கு விழிப்பு நிலை அவசியம். ‘விழிப்பு நிலை’ என்பது செய்கின்ற செயல்களில் முழுமையான கவனத்தையும், மனத்தையும் செலுத்தி, அவற்றை நன்றாகச் செய்வது ஆகும். விழிகள் திறப்போம், வழிகள் பிறக்கும்!

* நாம் ஆண்டவரைச் சந்திக்க விழிப்போடு காத்திருக்கின்றோமோ? அல்லது தூக்கக் கலக்கத்தில் இருக்கின்றோமா? நம் கையில் வைத்திருக்கும் விளக்குகளில் எண்ணெய் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்வோம். நம் விளக்குகளில் நிரம்பியிருக்கும் எண்ணெய் ‘ஆசியின் அடையாளம்’ (எரே 31:12; யோவே 2:19). அது தூய ஆவியை நினைவூட்டும் சொல். இத்தூய ஆவியின் துணையோடு நற்செயல் புரிவோரே முன்மதி உடையவர்கள் (நீமொ 13:16). எனவே, நற்செயல்களால் இவ்வுலகை ஒளிர்விப்போம். நற்செயல் புரிபவர்களே ‘எண்ணெய் நிரம்பிய சுடர்விடும் விளக்குகள்’!

* கிறிஸ்துவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, எதிர்நோக்கு என்பவையே நம்மிடமிருக்கும் எரியும் விளக்குகள். விவிலியத்தில் ‘அறிவிலிகள்’ எனும் சொல் ‘நம்பிக்கையற்றவர்கள்’ என்றும் பொருள் கொள்கிறது (திபா 14:1). எனவே, அறிவிலிகளாக நாம் இல்லாமல், ‘இறைநம்பிக்கை’ எனும் ஞான ஒளி தொடர்ந்து நம் விளக்குகளில் கொழுந்துவிட்டு எரிந்தால்தான் நாம் இயேசுவைச் சந்திக்கக்கூடிய தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். ‘விளக்கு இல்லாத வீடு, கூரையில்லா வீட்டிற்குச் சமம்’ என்பது பழமொழி! விளக்கும், கூரையும் இல்லாத வீட்டினால் என்ன பயன்?

Comment