No icon

26, நவம்பர் 2023

கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (எசே 34:11-12,15-17; 1கொரி 15:20-26,28; மத் 25:31-46)

அன்பின் அரசரே வருக! அன்பின் ஆட்சி மலர்க!

இப்போது உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும், குண்டு முழக்கங்களும், போர்களும்தாம். அமைதியோடு வாழ விரும்பும் ஆயிரமாயிரம் மக்கள் வாழ்வை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். பதவிக்காகவும், பணத்திற்காகவும், ஆடம்பரமான வாழ்வை ஆக்கிரமித்துக்கொள்வதற்காகவும் இங்கே தினம் தினம் போட்டியும், பொறாமையும் தலைவிரித்தாடுகின்றன. எப்படிப் பதவிக்கு வரலாம்? யாரை ஏமாற்றலாம்? யாரை அழிக்கலாம்? என்று மனிதர் போடும் தவறான கணக்குகளால் அன்பும், அமைதியும், உண்மையும், நேர்மையும் உலகில் காணாமல் போயிற்று.

இரு உலகப் போர்களைச் சந்தித்த இவ்வுலகம், தற்போது மூன்றாவது உலகப் போரை, உலகின் பற்பல பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாகச் சந்தித்து வருகின்றதுஎன்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்து என் நினைவுக்கு வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் இரஷ்யா - உக்ரைன் போரிலும், இஸ்ரயேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ்குழுவிற்கும் இடையே நடைபெறும் போரிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரயேல் இராணுவத் தாக்குதல்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 3,760 பேர்கள்; பெண்கள் 2,326 பேர்கள்; 32,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உணவு, தண்ணீர், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்படுவோரின் புலம்பல் இன்னும் நாட்டை ஆள்வோரின் காதுகளில் எட்டவில்லையே! கோபுரத்தில் வாழ்பவர்கள், குடிசையில் வாழ்பவர்களின் சிறு குரலைக் கேட்கவா போகிறார்கள்? இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்கிறிஸ்துவை ஓர் அரசராகஇந்த ஞாயிறு நாம் கொண்டாடுகின்றோம்

அரசர் என்றதும் நம் மனத்திரையில் குறுகலாய், கும்பலாய், குப்பையாய் வந்து சேரும் கற்பனை உருவங்கள்: பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் கொழுத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்! ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம...’ என்ற அர்த்தமற்றப் பல அடைமொழிகளைச் சுமந்து திரியும் உருவம்! இந்த உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் பொருத்தமில்லை! பிறகு எப்படி இயேசுவை ஓர் அரசர் என்று ஏற்றுக் கொள்வது?

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்லர். இப்படிப்பட்ட ஓர் அரசத் தோரணையை இயேசு விரும்பவும் மாட்டார். ஆனால், இயேசுவும் ஓர் அரசர்தாம். அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று; மாறாக, அவரது அரசு நீதியின் அரசு; உண்மையின் அரசு; அன்பின் அரசு!

நானும், அலெக்சாண்டரும் ஆயுத பலத்தால் அடக்கி ஆள முயன்றோம்; எங்கள் அரசு நிலைக்கவில்லை. ஆனால், இயேசு கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கின்றார். அவரது அரசு என்றும் நிலைத்திருக்கும்எனும் மாமன்னன் நெப்போலியனின் கூற்று இங்கே நினைவுகூரத்தக்கது.

கத்தோலிக்கத் திரு அவையில் இவ்விழா உருவாக முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது என்ற உண்மை, இவ்விழாவைக் குறித்தும், உண்மையான தலைவர்களிடையே நிலவ வேண்டிய பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

முதல் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், திரு அவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் அவர்கள் அந்தப் போரைபயனற்றப் படுகொலை’ (useless massacre) என்றும், ‘கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை’ (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்முதலாம் உலகப் போர் முடிந்திருந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. முதல் உலகப் போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1922-ஆம் ஆண்டு திரு அவையின் தலைமைப் பணியை ஏற்றார் திருத்தந்தை 11-ஆம் பயஸ். அரசர்கள் மற்றும் அரசுத் தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப் போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை உணர்ந்த அவர், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925 -ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் வெளியிட்டPuas Primasஎன்ற சுற்று மடல் வழியாகக் கிறிஸ்துவை அனைத்துலக அரசரெனக் கொண்டாட திரு அவையைப் பணித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் கண்டு மக்கள், குறிப்பாக அரசுத் தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு தலைவர்கள் பாடங்களைப் பயில்வார்களா? என்பது தெரியவில்லை. நாம் பாடங்களைப் பயில முன்வருவோம்!

எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆயர்களைப் பற்றியும், ஆயர்கள் மேய்க்க வேண்டிய ஆடுகளைப் பற்றியும் பேசுகின்றது. ஆயர்கள் இஸ்ரயேலின் அரசியல் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் சுயநலமிக்கவர்களாக மாறினர். அவர்கள் தங்கள் மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களே மேய்ந்தனர். வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை வழிநடத்தாமல், அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர். இதனால்இஸ்ரயேலர்களின் ஆயர்களாகிய தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக் காரணம்என்று பழி சுமத்துகிறார் இறைவாக்கினர் எசேக்கியேல். எனவே, ஆண்டவரே ஆயராக இருந்து, தம் ஆடுகளைக் கவனிப்பார் எனவும் இறைவாக்குரைக்கின்றார்.

தமது நிழலில் வாழும் தமது குடிமக்களின் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து, அவர்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையான, அறம் தவறாது அல்லவை நீக்கி ஆட்சி புரிபவரே சிறந்த அரசர் / ஆயர் என்பதையேஇறை மாட்சிஎனும் அதிகாரத்தில் முப்பால் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு’ (குறள் 384).

இப்பின்புலத்தில் ஓர் ஆயர் எப்படி இருப்பார் என்பதற்கு இன்றைய திருப்பாடல் மிகச் சிறந்த சான்று. ‘திருப்பாக்களின் முத்துஎன அழைக்கப்படும் திருப்பாடல் 23, ஆயருக்கும்- ஆடுகளுக்கும் இடையே உள்ள ஆளுமை உறவை நெருக்கப்படுத்திக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டு ஆயர்கள் செய்யாததைக் கிறிஸ்து செய்கிறார். தம் ஆடுகளுக்காகத் தம் உயிரையே கொடுக்கிறார் (யோவா 10:11-15). ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்துஉதவும் ஆண்டவர் நம் ஆயர். அவர் நம்மை வழி நடத்துபவர்; நமக்கு உணவளிப்பவர்; நம்மை மகிழ்விப்பவர்; நமக்காகத் தம் உயிரையே கொடுப்பவர். அவர்தாம் நல்ல ஆயர் இயேசு! அவர்தாம் கிறிஸ்து அரசர்! அவர்தாம் நீதி வழங்கும் மன்னர்! அவரது நீதி தம் மக்கள்பால் கொண்டுள்ள அன்பாலும், அவர்கள் வாழ்வில் காட்டுகின்ற அக்கறையாலும் வழங்கப்படுவது. இக்கருத்தையே இன்றைய நற்செய்தியில் சிந்திக்க முடிகிறது

மத்தேயு வழங்கும் இறுதி உவமை இன்று நாம் வாசிக்கக் கேட்டஇறுதித் தீர்ப்பு உவமை’. நம் வாழ்க்கையில் நம் செயல்பாடுகளுக்கு ஏற்பக் கடவுள் வழங்கவிருக்கும் பரிசையும், தண்டனையையும் மிகத் தெளிவாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் வழங்கும் உவமை இது. இயேசு போதித்த இறையாட்சி நெறியை மக்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால்தான் அவர்களுக்கு மீட்பு உண்டு என்ற திட்டவட்டமான கருத்து இங்கே முன்வைக்கப்படுகின்றது. இந்த இறையாட்சி நெறியின் மையக் கொள்கை மனிதநேயம்! இறைவனை ஏற்பது, அவரை வழிபடுவது, அவருடைய நெறிகளைச் செயல்படுத்துவது என்பது மனித நேயத்திலும், தேவையிலுமுள்ள மக்கள்மீது நாம் காட்டும் பரிவிலும்தான் அடங்கியுள்ளது என்பதை இறுதி முறையாக இயேசு இங்கே தெளிவுபடுத்துகின்றார்.

பசியாக, தாகமாக, அந்நியராக, ஆடையின்றி, நோயோடு சிறையில் இருக்கும்மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத் 25:40) என்று இறைவன் நம்மிடம் சொல்கிறார்.

மிகவும் புகழ்பெற்ற லியோ டால்ஸ்டாய் எழுதியMartin the Cobbler’ - ‘காலணிகள் செய்யும் மார்ட்டின்என்ற கதையில் இறைவன் மார்ட்டினைச் சந்திக்க வருவதாகச் சொல்வார். அவர் வருவார் என்று நாள் முழுவதும் காத்திருக்கிறார் மார்ட்டின். அவர் காத்திருந்தபோது, தேவையில் இருந்த மூவருக்கு உதவிகள் செய்கிறார். மாலைவரை இறைவன் வராததால் மனமுடைந்த மார்ட்டின், ‘கடவுளே, நீர் ஏன் வரவில்லை?’ என்று கேள்வி எழுப்புகிறார். கடவுளோ, தாம் அந்த மூவர் வழியாக அவரை அன்று மூன்று முறை சந்தித்ததாகச் சொல்கிறார். இன்றைய நற்செய்தி சொல்லும் பாடமும் இதுதான்.

துன்புறும் மனித சமுதாயம், நம்மில் ஒரு பகுதி என்பதை உணர்த்துகிறது இந்த நாள். தேவைகள் என்ற நெருப்பில் தினம், தினம் தீக்கிரையாகும் மனிதருக்கு உதவிகள் செய்வதற்கு அழைப்பு விடுக்கிறது இந்தப் பெருவிழா. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது திரு அவையில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் சொற்றொடரானஏழைகள் சார்பில் முடிவெடுப்பது’ (‘Option for the poor’) என்பது இந்த நாள் விடுக்கும் சிறப்பு அழைப்பு! இறுதித் தீர்வை நேரத்தில், ‘பசியாய், தாகமாய், ஆடையின்றி, உடல் நலம் குன்றி, அடுத்தவரை அதிகம் நம்பியிருக்கும் நோயுற்றோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வறியோர்... இவர்களுக்கு நீ என்ன செய்தாய்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது இந்த விழா. தேவைகள் அதிகம் உள்ள இந்த அயலவர் பட்டியல், வெறும் பட்டியலா? அல்லது நம் உள்ளத்தை ஊடுருவிப் பாயும் அம்புகளா? எனச் சிந்திக்கத் தூண்டுகிறது பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு.

மெக்சிகோவில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தAztecஎன்ற பழங்குடியினர் எழுதி வைத்த ஒரு கவிதை, ஏழைகள் வடிவில் இறைவன் வருவதை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தம்மையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காண முடியும் என்பதை இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம்:

வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும் போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விசயங்களில் இருப்பார்; பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்க வேண்டும்.’

இறுதியாக, கடந்த வாரம் நாம் சிறப்பித்த வறியோரின் உலக நாளில்வறியோர் வடிவில் இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்என்ற திருத்தந்தையின் வறியோர் உலக நாள் செய்தி, இன்று முதல் நம் வாழ்வில் செயல் வடிவம் பெறட்டும்! தேவைகள் உள்ள மக்களில் இந்த அரசரின் உருவைக் கண்டு, உதவிக்கரம் நீட்டுவோம். கிறிஸ்து அரசரின் வலது பக்கம் நிற்கும் வாய்ப்பையும், அவர் வழங்கும் ஆசீரையும் பெற்றுக்கொள்வோம்.

Comment