No icon

“விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்”

விவிலிய அடிப்படையிலான மறைக்கல்வி

முன்னுரை

வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர். இவருடைய காலத்தில்தான் நாடகத்துறை செழித்து வளர்ந்தது, உச்சியைத் தொட்டது! தனது அளப்பரிய எழுத்தாற்றலால் வாய்விட்டுச் சிரிக்கும் நகைச்சுவை நாடகங்கள், கதறி அழும் சோக நாடகங்கள், பிரமிப்பை ஏற்படுத்தும் வரலாற்று நாடகங்கள், மனசாட்சியைத் தட்டியெழுப்பும் சமூக நாடகங்கள் என்று அன்றைய காலக் கட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் வசியம் செய்தவர்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்.

ஒவ்வொரு முறை நாடகம் நடக்கும்போதும், துவக்க செபமும், நாடகம் முடிந்தவுடன் விவிலிய வாசகமும் படிக்கப்பட்டு, அதன் பிறகே மக்கள் கூட்டம் கலைந்து செல்லும். நாடக முடிவில் விவிலிய வாசகத்தை நாடகத்தின் கதாநாயகனே படிக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் இருந்தார். அவரின் நடிப்புத்திறமையைவிட, அவர் விவிலிய வாசகத்தை அழகாக, நிதானமாக, உணர்வுப்பூர்வமாக வாசிக்கும் திறமையை, அனைவரும் பாராட்டும் வண்ணம் எழுந்து நின்று, நீண்ட நேரம் கை தட்டுவதும், அவரைப் புகழ்வதும் வாடிக்கையாகவே நடந்து வந்தது.

இந்த புகழும், பாராட்டும் அவரை கர்வம் கொள்ளச் செய்தது. ஒருநாள் அந்த நடிகர், நாடகம் முடிந்த பின் திருப்பாடல் 23 தனக்கே உரிய பாணியில் படித்து, மக்களைப் பரவசப்படுத்த, மக்கள் கூட்டத்தின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. தற்பெருமையின் உச்சத்துக்கே போன நடிகர், மக்கள் கூட்டத்தினருக்கு ஒரு சவாலை முன் வைத்தார். “திருப்பாடல் 23 என்னைவிட அழகாக வாசிக்க முடியுமா? அப்படி யாராவது இருந்தால் அந்த நபரை மேடைக்கு அழைக்கிறேன்என்றார். அரங்கம் இந்த சவாலை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அரங்கம் அமைதியானது. சிறிது நேரம் கழித்து, “உங்கள் சவாலை நான் ஏற்கிறேன்என்று, ஒரு இளைஞன் எழுந்து மேடையை நோக்கி நடக்கத் தொடங்கினான். திகைத்துப்போன அரங்கம், “யார் இந்த இளைஞன்? எவ்வளவு துணிச்சல் இவனுக்கு! அவர் எங்கே! இவன் எங்கே! அவருக்கு முன்னால் இவனால் என்ன செய்ய முடியும்! அவரிடம் தோற்று அவமானப்பட போகிறான்!” என்று அவன் காதுபடவே அவனை ஏளனம் செய்தனர்.

பணிவாக மேடைக்கு வந்த வாலிபன், மிகுந்த மரியாதையோடு திருவிவிலியத்தைப் பிரித்து, திருப்பாடல் 23 பக்தியோடும், பரவசத்தோடும் வாசிக்கத் தொடங்கினான். “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லைஎன்று அவன் மெதுவாக வாசிக்க, மக்கள் கூட்டம் அமைதியானது. அவன் வாசித்து முடித்தபின் எங்கும் அமைதி, நிசப்தம்! மயான அமைதி! யாரும் எழுந்து நிற்கவும் இல்லை, கைதட்டவும் இல்லை! வெளியே போகவும் இல்லை!

திருப்பாடல் வாசிக்கப்பட்டவுடன் வழக்கமாக எழுந்து நின்று கைதட்டும் மக்கள் கூட்டம், அன்று முதன்முறையாக அழுதது, எங்கும் விசும்பல் ஒலி, அழுகையின் சத்தம்! தனக்கு முன்னாள் அழுதுகொண்டிருக்கும் மக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகன், வாலிபனிடம்நான் படித்தால் கைதட்டும் மக்கள் நீ படித்தவுடன் அழுகிறார்கள். எப்படி? உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என்று அதிர்ச்சியோடு கேட்டார். பரிவோடு நடிகரைப் பார்த்த இளைஞன்: “ஒரே ஒரு வித்தியாசம்தான் ஐயா. உங்களுக்கு விவிலியம் தெரியும். எனக்கு இயேசு கிறிஸ்துவைத் தெரியும்என்றான்.

நம்மில் பலருக்கு விவிலியம் தெரியும். இயேசுவைத் தெரியுமா? அறிவுப்பூர்வமாக விவிலியத்தை நாம் அறிந்திருக்கலாம். ஆனால், அதில் புதைத்திருக்கும் இயேசு கிறிஸ்துவை அனுபவத்திருக்கிறோமா? இன்றைய இளைய தலைமுறைக்கு விவிலியமும் தெரியாது. அதில் உயிராக வாழும் இயேசு கிறிஸ்துவையும் தெரியாது. இன்றைய இயந்திரத்தனமானச் சூழலில் வாழும் ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள், உயிரளிக்கும் இறைவார்த்தையின் மகத்துவம் புரியாமல் வாழ்வது வேதனையின் உச்சக்கட்டம். நம்முடைய கிறிஸ்தவ மாணவர்களைத் தரமான, வளமான, நலமான, சமூகமாக உருவாக்கவும், இறையறிவு, இறையுணர்வு, இறையச்சம், இறையன்பு இவற்றில் வளர, வாழ, விவிலிய அறிவும் அது கற்பிக்கும் கிறிஸ்து அனுபவத்தை அவர்களின் இதயங்களில் ஆழப்படுத்துவதும் விவிலிய மறைக்கல்வியின் முதன்மை நோக்கமாகும்.

1. நமது பிள்ளைகள் ஈக்களா? தேனீக்களா?

அன்பு ஆசிரியப் பெருமக்களே, இன்றைய நமது குழந்தைகளை ஒரு பூச்சியோடு ஒப்பிடச் சொன்னால் எந்தப் பூச்சியோடு அவர்களை ஒப்பிடுவீர்கள்? மாறிவரும் ஆன்மீக உளவியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஊடக மாற்றத்திற்கேற்ப, அவர்களை ஈக்களோடு தான் ஒப்பிடத் தோன்றுகிறது. ஏனென்றால், சில நேரங்களில் ஈக்கள் பூக்கடையிலும் இருக்கும், சில நேரங்களில் அவைகள் சாக்கடையிலும் இருக்கும். உயிருள்ளப் பொருட்கள் மீதும் அமரும், இறந்து போனவர்கள் மேலும் அமரும். இந்த ஒப்பீடு சரியா? எனக்கென்னவோ சரியென்றுதான் தோன்றுகிறது. நம்முடைய பிள்ளைகள் இன்றையச் சூழலில், ஈக்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால், நாம் வாழும் சூழல் அது போன்றது. ஒரு மறைக்கல்வி ஆசிரியரின் முதல் பணி ஈக்களாக அலையும் நமது பிள்ளைகளைத் தேனீக்களாக மாற்றுவதே!

தேனீக்கள் தேனை தவிர, வேறு எதையும் தேடாது. தேனில்லாத மலர்களிடம் செல்லாது. நிச்சயமாகச் சாக்கடைக்கு செல்லவே செல்லாது. ஏன் நமது பிள்ளைகள் தேனீக்களாக மாற வேண்டும்? ஏனென்றால், திருவிவிலியம் என்பது ஒரு தேன்கூடு. அந்தத் தேன்கூட்டில் இருக்கும் மிகவும் சுவையான தேனைப் பருகவும், அதை வேண்டிய அளவுக்கு எடுத்துக்கொள்ளவும், அதைச் சேகரித்து வைக்கவும், தேவைப்படும்போது அதை திரும்பவும் பருகவும், அதைப் பிறருக்குக் கொடுக்கவும் கூடிய சுவையும், அறிவும், ஆற்றலும், ஆர்வமும் தேனீக்களுக்கு மட்டுமே உள்ளது.

நம்முடைய பிள்ளைகள் தேனீக்களாக வாழவும், வளரவும் விரும்பும் ஆசிரியர்களும், பெற்றோர்களும், திருவிவிலியம் என்னும் தேன்கூட்டை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியம். இது காலத்தின் கட்டாயமும்கூட. எனவே தான், புதிய மறைக்கல்விப் பாடத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக விவிலிய மறைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிறுவயதிலேயே சரியான அளவில் சுவையோடு கொடுக்கப்படும் திருவிவிலிய நிகழ்வுகள், அவர்கள் மனதில் பசு மரத்தில் ஆணி அடித்தாற்போல் பதியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சுருங்கக்கூறின், ஒட்டுமொத்தப் புதிய மறைக்கல்விப் பாடத்திட்டம் விவிலிய மறைக்கல்வியை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.

2. விவிலிய மறைக்கல்வியின் நோக்கம்

திருவிவிலிய நிகழ்வுகள், மாந்தர்கள், சிந்தனைகள், படிப்பினைகள் வழியாக இளம் வயது மாணவர்களின் இறைநம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், ஆழப்படுத்துவதும், ஊட்டமளிப்பதுமே விவிலிய மறைக்கல்வியாகும். சுருங்கக்கூறின், மீட்பு வரலாற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கவலையோடும், ஆர்வத்தோடும் திருவிவிலியம் வழியாகக் கற்பிப்பதே விவிலிய மறைக்கல்வியின் நோக்கமாகும்.

3. விவிலிய மறைக்கல்வியின் பயன்கள்

விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்என்கிறார் புனித ஜெரோம். “விவிலியத்தை வாசிக்கும்போது, நாம் கடவுள் பேசும் குரலைக் கேட்கிறோம்என்கிறார் புனித அகுஸ்தினார். கிறிஸ்தவ அருள்வாழ்வின் உயிராய் விளங்கும் திருவிவிலியத்திற்கு நாம் உயர் மரியாதை செலுத்துதல் வேண்டும். “விவிலியத்தைத் திறந்து படித்தல் வேண்டும்என்று பரிந்துரைக்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம். ஆகவே, கிறிஸ்தவ வாழ்வின் உயிராய் விளங்கும் திருவிவிலியத்தை நமது பிள்ளைகளுக்கு வழங்கும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

1. கடவுளின் திட்டத்தை அறிந்துகொள்ள உதவுகின்றது.

2. கடவுளின் கருணையையும், இரக்கத்தையும் புரிந்து கொள்ள உதவுகின்றது.

3. விவிலியத்தின் அனைத்து புத்தகங்களையும் கற்றுக்கொள்ள உதவுகின்றது.

4. கடவுள் எவ்வளவு பேரன்பு மிக்கவர் என்பதையும், நம்பிக்கைக்குரியவர் என்பதையும் அறிந்து கொள்ள உதவுகின்றது.

5. கனி கொடுக்கவும், நிலையான கனிகொடுக்கவும் உதவுகின்றது.

6. இயேசுவை அறியவும், அனுபவிக்கவும் அன்பு செய்யவும், அவரை அறிக்கையிடவும் உதவுகின்றது.

7. இயேசுவின் உண்மையான சீடனாகவும், சீடத்தியாகவும் வாழ உதவுகின்றது.

8. இயேசுவைப் போலவே வாழ உதவுகின்றது.

9. வாழ்வின் இன்னல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிக்கின்றது.

10. வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வையும், வழித்தெரியாமல் தவிப்போருக்கு வழியையும் காட்டுகின்றது.

11. அவநம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

12. துன்பத்தில் வாடுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது.

13. நம் பாவங்களைக் களைய ஆற்றல் தருகின்றது.

14. நேர்மையின், உண்மையின், நன்மையின் அவசியத்தை எடுத்துரைக்கின்றது.

15. கடவுளின் பிள்ளையாய் வாழ்வதன் அவசியத்தை உணர்த்துகின்றது.

16. தன்னைப் படைத்த அன்புக் கடவுளைப் பற்றி அறிய உதவுகின்றது.

17. எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போகின்றோம் என்பதை அறிய உதவுகின்றது.

18. நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் விடைகளைக் கொடுக்கின்றது.

19. நாம் செபத்தில் வளர உதவுகின்றது.

20. உண்மையான   விடுதலையை அளிக்கின்றது.

4. புதிய மறைக்கல்விப் பாடத்திட்டத்தில் விவிலிய மறைக்கல்வி

மேற்கூறிய பயன்களின் அடிப்படையில்தான், புதிய மறைக்கல்விப் பாடத்திட்டத்தில், விவிலிய மறைக்கல்விப் பகுதி மிகுந்த அக்கறையோடும், கவனத்தோடும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு அமர்வின் தலைப்பு விவிலியத்திலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. அமர்வின் மையச்சிந்தனை விவிலிய தலைப்பிலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இளம் வயது மாணவர்கள் ஆர்வத்தோடு விரும்பி கற்கும் வண்ணம் இப்பகுதி கீழ்க்கண்ட நான்கு பிரிவுகளைத் தாங்கியுள்ளது.

1. பழைய ஏற்பாடு

2. பழைய ஏற்பாட்டில் நான் கற்றது

3. புதிய ஏற்பாடு

4. புதிய ஏற்பாட்டில் நான் கற்றது

1. பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள்

பழைய ஏற்பாட்டு பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் அழகிய வண்ணப்படங்களில், கதை வடிவில் வண்ண நிறங்களில் கண்ணைக் கவரும் விதத்தில், பகுதி பகுதியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கு விவிலியத் தாகமும், பற்றும் ஏற்பட விளக்கவுரையாகக் கொடுக்காமல், தொண்ணூற்றைந்து சதவீதம் விவிலியத்திலிருந்தே எடுத்து வழங்கியிருப்பது கூடுதல் சிறப்பு. அப்பகுதியில் உள்ள நிகழ்வை உடனடியாக விவிலியத்திலிருந்து படிக்கத் தெளிவான விவிலியக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பது இப்பகுதியின் இன்னொரு சிறப்பு.

2. பழைய ஏற்பாட்டில் நான் கற்றது

பழைய ஏற்பாட்டு பகுதியில் உள்ள நிகழ்வுகளின் சுருக்கத்தை எளிமையாக வழங்கியிருப்பது ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைச் சுருக்கம் என்று சொல்வதைவிட, பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளிலிருந்து ஆசிரியர், பெற்றோர் மாணவர்கள் என்ன கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் பகுதியாக இருக்கின்றது.

3. புதிய ஏற்பாட்டு நிகழ்வுகள்

மறைக்கல்விப் பகுதியில் இன்னொரு சிறப்பான பிரிவு புதிய ஏற்பாட்டு நிகழ்வுகள். பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை, புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளோடு இணைத்துக் காட்டும் முயற்சி இது. பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டு இயேசுகிறிஸ்துவையே சுட்டிக் காட்டுகின்றன என்பதைக் கதை வடிவில், வண்ணப்படங்கள் வழியாக இயேசு கிறிஸ்துவை இணைத்துக்காட்டும் பெரிய முயற்சியே இது. ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், இயேசு கிறிஸ்துவை மிகக் கவனமாக, எளிமையாக பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தும் அற்புத முயற்சி பாராட்டுக்குரியதே.

4. புதிய ஏற்பாட்டில் நான் கற்றது

புதிய ஏற்பாட்டு பகுதியில் உள்ள நிகழ்வுகளின் சுருக்கத்தை எளிமையாக வழங்கியிருப்பது ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைச் சுருக்கம் என்று சொல்வதைவிட, இப்புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளிலிருந்து ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என்ன கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் பகுதியாக இருக்கின்றது.

கற்பிக்கும் விதம்

இப்பகுதியை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முன் ஆசிரியர், பெற்றோர் முதலில் ஒவ்வொரு அமர்வில் உள்ள விவிலியப் பகுதியையும், நிதானமாகப் படித்தல் வேண்டும். முழுமையான தெளிவிற்கும், அறிவிற்கும், விவிலியக் குறிப்புகளைப் பயன்படுத்தி, சம்மந்தப்பட்ட விவிலியப் பகுதியைப் படித்தால் மட்டுமே இப்பகுதியின் நிகழ்வுகள் புரியும்.

ஒவ்வொரு அமர்வில் காணப்படும் விவிலிய மறைக்கல்விப் பகுதியில் உள்ள பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள், புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப் பட்டிருக்கின்றன. இப்பகுதிகளைப் படிக்கும் ஆசிரியர், பெற்றோர் திருவிவிலியத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், இயேசு கிறிஸ்துவே முதலும் முடிவும் என்கின்ற நம்பிக்கையில் ஆழப்படவும் வாய்ப்பு பெறுவர்.

முடிவுரை

ஆசிரியர், பெற்றோர், மாணவர் இதயங்களில் விவிலியத்  தாகத்தையும், அதன் தாக்கத்தையும் உருவாக்குவதே இப்பகுதியின் நோக்கமாகும். இறைவார்த்தை என்னும் மாபெரும் கடலில் மூழ்கி, வாழ்வளிக்கும் இறைமுத்துக்களைத் தேடி எடுப்பது எப்படி என்பதைச் சிறிய வயதிலேயே நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் அற்புத முயற்சியே விவிலிய மறைக்கல்விப் பகுதி. திருவிவிலியம் வழியாகக் கடவுளோடு ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் கொள்ளும் நெருங்கிய உறவு, நம்மை ஒளியாக, உப்பாக, புளிக்காரமாக வாழவும், பிறருக்கு எடுத்துக்காட்டான சாட்சியாக விளங்கவும் உதவிப்புரியும் என்பது திண்ணம். ஆகவே, ஆசிரியர், பெற்றோர் இப்பகுதியை அறிந்து, புரிந்து வாழ்ந்து மாணவர்களுக்குக் கற்பித்தல் அவசியம்.

உண்மையான உயிருள்ள இயேசுவை அறிய, இறைவார்த்தையை தினந்தோறும் உணவைப்போல் உண்ண வேண்டும். கருணையுள்ள இயேசுவை அனுபவிக்க, இறைவார்த்தையை மூச்சாக சுவாசிக்க வேண்டும். மீட்பளிக்கும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிவிக்க, அவர் வார்த்தைப்படி வாழ்தல் வேண்டும். இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்து, தியானித்து, செயலாக்கம் செய்யும்போது, இந்த உலகம் எழுந்து நின்று கைதட்டாது, மாறாகக் கண்ணீர் சிந்தி, மனமாற்றம் பெற்று, இயேசுவின் குழந்தைகளாகத் தரமான வாழ்வு வாழும்

Comment