No icon

பொது மறைக்கல்வி

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் கிறிஸ்தவ வாழ்வின் ஆக்சிஜன் - திருத்தந்தை

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் கிறிஸ்தவ வாழ்வின் ஆக்சிஜன் என்றும், திருஅவை ஆன்மீக ஆரோக்கியத்தின் உள்ளடக்கம் என்றும் சனவரி 11, புதன்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு அப்போஸ்தலிக்க பேரார்வம் என்னும் புதிய தலைப்பில் பொது மறைக்கல்வி உரையாற்றியபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். மத்தேயு நற்செய்தியின் 9ஆவது அதிகாரத்தில் உள்ள மத்தேயுவை அழைத்தல் என்ற பகுதி வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் துவக்கினார்.

மத்தேயு 9: 9-13

இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு, அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

புதன் பொதுமறைக்கல்வி உரை சுருக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே,  இன்று நாம் அப்போஸ்தலிக்கப் (Apostolic zeal) பேரார்வம் பற்றிய புதிய மறைக்கல்வித் தொடரைத் தொடங்குகிறோம். கிறிஸ்துவின் திருஅவை, மறைப்பணி உறுதியுடன், உலகின் எல்லா இடங்களில் உள்ள,  ஒவ்வொரு மக்களுக்கும் அவரின் ஒளியைப் பரப்புவதற்காக, தூயஆவியானவரால் அனுப்பப்பட்டத் திருத்தூதர்கள் மீது நிறுவப்பட்டது.  அப்போஸ்தலிக்கப் பேரார்வம் என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் ஆக்ஸிஜன் மற்றும் திருஅவையின் ஆன்மீக ஆரோக்கியத்தின் அடையாளமும் உள்ளடக்கமும் குறியீடுமாகும். மறைநூல்களில் எழுதப்பட்டுள்ளவாறு திருஅவையின் வாழ்க்கை பாரம்பரியத்தை திருத்தூதர் மத்தேயுவின் அழைப்பில் நாம் தெளிவாகக் காணலாம். சமுதாயத்தினரால் இழிவானத் தொழிலாகக் கருதப்பட்ட வரிவசூலிக்கும் பணியைச் செய்து வந்தவரான மத்தேயுவை, இயேசு "கண்டார்" என்று நற்செய்தி கூறுகிறது. அவர் கருணைக் கண்களால் மத்தேயுவைப் பார்த்து, அவரைத் தம் சீடராகும்படி அழைத்தார். மத்தேயு பின்னர் "எழுந்து அவரைப் பின்தொடர்ந்தார்" ஒரு மாறுபட்ட மனிதராக, தனது தவறான செயல்களை விட்டுவிட்டு, இயேசுவின் சீடராக, மற்றவர்களுக்குப் பணி செய்யும் வாழ்வை மேற்கொள்கின்றார். மத்தேயு செய்த முதல் காரியம், பல வரி வசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் இயேசுவை ஓர் இரவு உணவிற்கு அழைத்து வந்தது. தாம் வாழ்ந்த இடத்திற்குத் திரும்பி, இயேசுவைத் தன்னைப் போல் உள்ள மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். இது அப்போஸ்தலிக்கப் பேரார்வத்தில் நமது முதன்மை பாடமாக உள்ளது.  மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், இயேசுவின் அன்பான பார்வையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மகிழ்ச்சியான விருப்பத்தாலும், அவருடைய சீடர்களாக அவரைப் பின்பற்றுவதற்கான அழைப்பாலும், இயேசுவை, மதமாற்றத்தால் அல்ல, அவர் மீதான ஈர்ப்பால் பிறமக்களுக்கு நற்செய்தியை இப்பேரார்வம் அறிவிக்கின்றது.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்

Comment