No icon

கண்டனையோ... கேட்டனையோ...

ஆத்திரங்கள் வருகுது மக்களே!

இயேசுவின் கல்வாரி நிகழ்வுகளில், தாய் மரியா கூட இருக்கிறார்; வளர்ப்புத்  தந்தை யோசேப்பு இல்லை. அவர் முன்னரே இறந்திருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். வளர்ப்புத் தந்தை யோசேப்பு உடன் இல்லாத குறையை, இன்னொரு யோசேப்பு  நீக்குகிறார்.

அரிமத்தியா யோசேப்பு!   

மிக அடக்கமாக (அதிகபட்சமாக 5 வரிகள்) குறிப்பிடப்பட்டாலும், அரிமத்தியா யோசேப்புவின் ‘அடக்கப்’ பணி நான்கு நற்செய்தியாளர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது (மத்தேயு 27:57-60; மாற்கு 15:42-46; லூக்கா 23:50-53; யோவான் 19:38-42). அரிதான இந்தத் திருவிவிலிய இலக்கிய இடம், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் வரலாற்றுத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

அரிமத்தியா என்ற ஊர் பற்றி நிலையான தகவல் எதுவும் இல்லை. திருவிவிலியத்தில் வேறெங்கும் இந்த ஊர் குறிப்பிடப்படவில்லை. அரிமத்தியா யோசேப்பு ஒரு பூடகமான திருவிவிலியப் பாத்திரம். அவருடன் சேர்ந்து, இயேசுவை அடக்கம் செய்ய உதவும் நிக்கதேமுக்காவது ஒரு முன் அறிமுகம் உள்ளது. யோவான் 3-ஆம் பிரிவில் இயேசுவை இரகசியமாக,  ஓர் இரவு நேரத்தில் சந்தித்து, மிக நீண்ட நேரம் உரையாடி, ‘வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?’ போன்ற மிக ‘அறிவார்ந்த’ கேள்விகளை அவர் கேட்டிருக்கிறார்.  அரிமத்தியா யோசேப்புக்கு இது எதுவும் இல்லை. பழைய தமிழ் படங்களின் போலிஸ்காரர்கள் போல, கடைசிக் காட்சியில் தோன்றி, அதிலேயே வணங்கி விடைபெறும் யோசேப்பு குறித்து நான்கு நற்செய்தியாளர்களும் தரும் தகவல்களைத் தொகுத்தால், பின்வரும் ஒரு சுருக்கமான ‘பயோ-சித்திரம்’ கிடைக்கிறது.

● அவர் ஒரு செல்வந்தர்.

● யூதேயாவிலுள்ள அரிமத்தியா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

● நல்லவர், நேர்மையாளர் (இயேசுவின் வளர்ப்புத் தந்தை போல).

● யூதச் சமயத்தின் உச்ச அமைப்பான தலைமைச் சங்கத்தின் மதிப்பு வாய்ந்த உறுப்பினராகவும், அதே நேரத்தில் இயேசுவின் இரகசிய சீடராகவும் இருந்திருக்கிறார் (நிக்கதேமு போல).

● இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் (லூக்காவில் வரும் இன்னொரு மர்ம நபர் சிமியோன் போல - லூக் 2: 25).

● இயேசுவைக் கொலை செய்யும் தலைமைச் சங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் (லூக்கா 23: 51).

● இயேசு இறந்த பின் பிலாத்திடம் கேட்டு, சடலத்தைப் பெற்று, அதை ஒரு மெல்லிய துணியால் சுற்றி,  ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்.

● மற்ற மூன்று நற்செய்திகளிலும் இயேசுவின் அடக்கச் சடங்கை யோசேப்பு தனியாக நிறைவேற்ற, யோவானில் மட்டும் நிக்கதேமு உதவி செய்கிறார்.

● யோசேப்பு இயேசுவின் உடலை வைத்த கல்லறை பற்றி, ‘யாரும் அடக்கம் செய்யப்படாத புதுக் கல்லறை’ என்று லூக்காவும், யோவானும் கூற, ‘அது யோசேப்பு தனக்காகத் தயார் செய்திருந்த கல்லறை’ என்று மத்தேயு சொல்கிறார்.

இவைகள்தாம் அரிமத்தியா யோசேப்புவைப் பற்றி திருவிவிலியம் தரும் தகவல்கள்.  திருவிவிலியத்தின் ஆதரவில்லாத, நிறைய செய்திகள் இவரைப் பற்றி உலவுகின்றன. அதில் ஒன்று, அரிமத்தியா யோசேப்பு இயேசுவுக்கு உறவினர் என்பது. மரியாவுக்கு மாமா முறை. இயேசுவுக்குப் பெரிய மாமா. சிலுவையில் கொல்லப்பட்ட ஒரு நபரின் உடலை, அவர் குடும்பத்தைச் சார்ந்த மூத்த ஆண் ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அப்போதிருந்த ஒரு விதி. வளர்ப்புத் தந்தை யோசேப்பு ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில்,  அரிமத்தியா யோசேப்பு, பிலாத்துவிடம் கேட்டு இயேசுவின் உடலைப் பெற்றதால், இந்தக் கருத்து உருவாகியிருக்கலாம். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு அரிமத்தியா யோசேப்பு இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. கடைசி இராவுணவில் இயேசு பயன்படுத்திய இரசக் கிண்ணம், அரிமத்தியா யோசேப்புவின் ‘கஸ்டடியில்’ இருந்ததாக நம்பப்படுகிறது.

இதை மையமாக வைத்து அமெரிக்க-கனடிய எழுத்தாளர் தாமஸ் கோஸ் டெய்ன் (Thomas B Costain) 1952-இல் எழுதி வெளியிட்ட ‘Silver Chalice’என்ற ஒரு நாவல் இருக்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் கதைகள் பிரிவில் தொடர்ந்து 64 வாரங்களுக்கு முதல் இடத்தில் வீற்றிருந்த இந்தப் பிரபலப் புத்தகம், இரண்டு வருடங்களுக்குப் பின் திரைவடிவமும் பெற்றது. ‘Silver Chalice’ஒரு வரலாற்றுப் புனைவு. பேசில் என்கிற ஒரு மீட்கப்பட்ட அந்தியோக்கு நகர் அடிமையின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. லூக்கா, பவுல், மாயவித்தைக்காரன் சீமோன், பேதுரு, உரோமை மன்னன் நீரோ   போன்ற நிஜ மனிதர்கள் பாத்திரங்களாக வருகிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்று நிகழ்வுகள் ஊடுபாவாகச் சொல்லப்படுகின்றன. பேசில் ஒரு திறமையான சிற்பி. 19 வயது நிரம்பிய இளைஞன். அவனை விலைகொடுத்து மீட்கும் லூக்கா, அரிமத்தியா யோசேப்பிடம் கூட்டிச் செல்கிறார். அவர் கடைசி இராவுணவு இரசக் கிண்ணத்திற்கு ஒரு பேழை செய்யும் பணியைப் பேசிலுக்குக் கொடுக்கிறார்.

பெட்டியில் இயேசுவின் முகமும், பன்னிரண்டு திருத்தூதர்களின் முகங்களும் இடம்பெற வேண்டுமென்பது யோசேப்பின் விருப்பம். திருத்தூதர்கள் பல இடங்களில் சிதறி இருந்தார்கள். பேசில் ஒருமுறை கூட அவர்களைப் பார்த்ததில்லை. பின் எப்படி அவர்களின் முகங்களைப் பேழையில் வடிப்பது? திருத்தூதர்களை நேரில் பார்த்து, முகங்களைப் பதிவு செய்ய பேசில் பயணம் கிளம்புகிறான். அவனுடைய வெவ்வேறு பயணங்களும், அதில் அவன் சந்திக்கும் சவால்களும், துன்புறுத்தல்களும், அகப் போராட்டமும், ஆன்மிக மீட்சியும் தாமஸ் கோஸ் டெய்னின் விறுவிறுப்பான ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளது ‘Silver Chalice’ படைப்பில். இப்போது Amazon Kindleஇல் வெறும் ரூ. 58-க்குக் கிடைக்கிறது. விரும்புபவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

புனைவுகளை ஒதுக்கிவிட்டு, திருவிவிலியம் சொல்லும் தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டால் கூட, அரிமத்தியா யோசேப்பு மிக முக்கிய ஆளுமையே. தலைமைச் சங்கத்தின் திட்டத்திற்கு இணங்காத அவரின் நேர்மையும், பிலாத்திடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்ட துணிவும், தனக்கான கல்லறையில் இயேசுவின் உடலை அடக்கம் செய்ய முன்வந்த தாராளமும் நம்மிடம் இருக்கிறதா? என்று நம்மை நாமே இப்போது கேட்டுக்கொள்ளலாம்.

மொழி சம்பந்தபட்ட நிகழ்வுகள் இரண்டு:

ஒன்று: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், புனித வார நிகழ்வுகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்தபோது, ‘நாங்கள் கொடுக்க முடியாது சார்’ என்று உள்ளூர் காவல் அதிகாரிகள் கைவிரித்துவிட, தேர்தல் அலுவலரைச் சந்தித்து அனுமதி வாங்க, தாலுகா அலுவலகத்திற்கு இரண்டு மூன்று முறை அலைந்ததில், வளாகத்தில் உள்ள டீக்கடைகள் மட்டும் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கவனித்தேன்.

கேமிரா பொருத்தப்பட்ட நான்கைந்து வண்டிகள். வண்டியின் முன்பக்கத்தில் ஒரு பக்கக் கண்ணாடியின் மேல் ‘தேர்தல் அவசரம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மறுபக்கம் ஆங்கிலத்தில் ‘Election Immediatley’ என்ற ஸ்டிக்கர். என்ன என்று புரிகிறதா? அதாவது, ‘தேர்தல் அவசரம்’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்களாம்! மெக்காலே கல்லறையில் ஒரு முறை புரண்டிருப்பார். ஆங்கிலம் எக்கேடாவது கெட்டு ஒழியட்டும். நல்ல தலைவர்கள் கிடைத்தால் சரி!  

இரண்டு: நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள், நவீன தமிழ் உரைநடையில் செலுத்தியுள்ள தாக்கம் பற்றி யாராவது முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம். ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ போன்ற டயலாக்குகளை இப்போதெல்லாம் கோர்ட்டில் நீதிபதிகளே பயன்படுத்துகிறார்கள்.

வடிவேலுவின் நகைச்சுவை உரையாடல்களில் அவ்வப்போது வெளிப்படும் ஒரு தனிப்பண்பு, வழக்கமாக ஒருமையில் பயன்படுத்தும் சொற்களைப் பன்மையில் சொல்வது. பிரபல உதாரணம்: ‘சோறுகளைப் போட்டு, குழம்புகளை ஊத்தி...’ பிற்காலத்தில் விஜய்காந்த் தன் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வைரல் ஆக்கிய, ‘ஆத்திரங்கள் வருகுது மக்களே’ மீம்ஸ்காரர்களின் ஒரு செல்ல வாக்கியம்! இதை இப்போது மக்கள் தங்கள் உரையாடல்களில் சாதாரணமாகப் பயன்படுத்துவதைக் கவனிக்கிறேன்.

அண்மையில் ஓர் அம்மா என்னிடம் வந்து தன் டீன்-ஏஜ் பையன் பற்றி புகார் சொன்னார்: “எப்பப் பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கிட்டே இருக்கான் ஃபாதர். கோயிலுக்கு வாடான்னா, ம்ஹூம்... ‘பக்திகள்’ என்கிறது கொஞ்சம் கூட இல்லை. கையிலே ‘அம்மா’னு பச்ச குத்தி வச்சிருக்கான். என் மேல ‘பாசங்கள்’ இருக்கு. ஆனா, அதே நேரத்துல காரணம் இல்லாம ‘கோபங்கள்’ படுறான். அப்பா ஊர்ல இருக்கார். அவர்ட்ட சொன்னா தேவையில்லாம ‘வருத்தங்கள்’ படுவார்னு நான் ஒண்ணும் சொல்றதில்ல ஃபாதர்.”

நான் பதிலுக்கு “உங்கள் பையன் ‘திருத்தங்கள்’ அடைந்து, வீட்டில் ‘அமைதிகள்’ திரும்ப, நான் வேண்டிக்கொள்கிறேன். இப்பொது நான் சற்று ‘அவசரங்களாக’ இருக்கிறேன். ‘சாவகாசங்களாக’ அவனை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள் அம்மா” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.                       

(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment