No icon

குடும்பம் இறையழைத்தலின் விளைநிலம்!

கடவுளின் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும் இடம் குடும்பம். குடும்பத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி உண்மையானது; ஆழமானதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். உறவுகளுக்கு அடையாளமாக இருப்பது குடும்பம்தான். எளிமையிலும், இறைநம்பிக்கையிலும் வாழ்ந்த திருக்குடும்பமே இதற்குச் சாட்சி. குடும்பத்தில் ஒருவர் தன் தந்தையோடும், தாயோடும், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடனும் உள்ள உறவே அனைத்திற்கும் அடிப்படையானதாகிறது. குடும்பத்தின் புனிதத்துவம் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் இறைநம்பிக்கையில் ஒன்றிணைக்கிறது; இறைப்பக்தியில் புடமிடுகிறது. இத்தகைய சிந்தனையில் தன் தந்தை, தாய், தன்னை மிகவும் அன்பு செய்த பாட்டி ரோசா ஆகியோர் தான் புனிதத்தில் வளர வழிகாட்டியாக நின்றார்கள் என நினைவு கூறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் பாட்டியின் உயில் கடிதத்தைத் தனது செபப் புத்தகத்தில் வைத்திருப்பதாகக் குறிப்பிடும் திருத்தந்தை, அடிக்கடி அதை வாசிப்பதும், அதுவே தனக்கு ஒரு செபமாக அமைந்திருக்கிறது என்றும் நினைவுகூர்கிறார் (திருத்தந்தையுடன் நேர்காணல்- தந்தை ஆண்டோனியோ சாபதாரோ சே.., ஆகஸ்டு 19, 2013).

இறையழைத்தலின் விளைநிலம் குடும்பம். இல்லறத்தின் கனியே துறவறம். குடும்பமே இறை ஊழியர்களை விளைவிக்கிறது. ‘குடும்பம்என்ற வார்த்தைக்குள் பொதிந்திருக்கும் பொருள் அடர்த்தியானது, ஆழமானது. ‘குடும்பம்என்றதுமே உள்ளமும், உணர்வும் புத்துயிர் பெறும். குடும்பமே அனைத்து உறவுகளுக்கும் ஆணிவேர். உறவுகளின் தொகுப்புதான் குடும்பம். உறவுகள் கூடி வாழுமிடம் குடும்பம். ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளைத் தாங்கி கிளைகள் பரப்பி நிற்பது குடும்பம்.

அன்பையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளங்குவது இக்குடும்பமே. மனித வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை குடும்பம். பிள்ளைகளுக்குக் குடும்பமே முதல் கல்விக்கூடம். குடும்பங்களிலிருந்துதான் ஆன்றோர்களும், சான்றோர்களும், அரசியல்வாதிகளும், ஆன்மிகவாதிகளும், கவிஞர்களும், கலைஞர்களும், புரட்சியாளர்களும், புதுமைவாதிகளும் புறப்பட்டு வருகின்றார்கள். அத்தகைய வரிசையில் அழைத்தலின் விளைநிலமாக விளங்குவதும் குடும்பமே!

அழைத்தல்என்ற வார்த்தைக்குப் பல பொருள்களும், பன்முகப்பார்வைகளும் உள்ளன. கூப்பிடுதல், வரவழைத்தல், கதறுதல் எனப் பல வார்த்தைகளால் குறிப்பிடப்படுகின்றது. ‘பெயர் சொல்லிக் கூப்பிடுதல்என்பது உறவையும், அன்பையும் அழுத்தமாய், ஆழமாய் வெளிப்படுத்து வதாகும். இத்தகைய அழைத்தல் கடவுளிடமிருந்து வரும்போதுஇறையழைத்தலாகசிறப்புப் பெறுகிறது. கடவுள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமக்கு நெருக்கமானவர்களைத் தமது பணிக்கென அழைக்கின்றார். ஆபிரகாம், மோசே, சாமுவேல், இறைவாக்கினர்கள் எனப் பலரைத் தமது தனிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பணிக்கென அழைத்துப் பயன்படுத்துகின்றார். தாயின் கருவிலேயே முன்குறித்து வைக்கப்பட்டுக் கடவுளின் குரலுக்குச் செவிசாய்த்தவர்கள் மட்டுமே இறையழைத்தல் என்னும் கடவுளின் உயர்ந்த ஆசிரைப் பெறுகின்றனர்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இறைவாக்கினர்களைப் பெயர் சொல்லி அழைக்கின்றார். பெயர் சொல்லி அழைத்தல் என்பது, தனிப்பட்ட ஆழமான அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. சாதாரண குடும்பங்களிலிருந்து சாதாரண மனிதர்களையே கடவுள் அழைக்கிறார். அழைக்கின்றபோது முதலில் மறுப்பைப் பதிவு செய்கிறார்கள். தங்களது தகுதியின்மையைத் தயங்காது வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கடவுள் அவர்களையே அழைத்துத் தகுதிப்படுத்தித் தரப்படுத்துகிறார்.

தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்என்று எசாயா இறைவாக்கினர் மறுத்தபோது, கடவுள்யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ என்று வினவும் என் தலைவரின் குரலைக் கேட்டேன். அதற்குஇதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்என்றேன்” (எசாயா 6:1-10) என்றார். இது போலவே எரேமியா, மோசே ஆகியோரும் சாதாரண பின்னணியிலிருந்து அழைக்கப்பட்டவர்களே!

இறையழைத்தலின் அடித்தளமாகவும், ஆணி வேராகவும் இருப்பது குடும்பங்கள்தான். குடும்பங்களில்தான் நல்ல மனிதர்களும், புனிதர்களும் உருவாக்கப்படுகிறார்கள். நல்ல வளமான மண்ணிலிருந்து நல்ல முளைகள் முகம் காட்டுவதைப் போல, நல்ல குடும்பங்களிலிருந்து நல்ல மனிதர்கள் முளைத்து முன்னுதாரணமாய் நிற்கிறார்கள். அன்னை தெரேசா, ஆயர் ரொமேரோ, அவிலா தெரசா, அல்போன்சா, அந்தோணியார், ஆகத்தம்மா, அகுஸ்தீனார், தேவசகாயம் போன்ற அனைத்துப் புனிதர்களின் வாழ்வும் நல்ல குடும்பங்களிலிருந்தே தோன்றியிருக்கின்றன.

ஆகவே, குடும்பங்களில் பிள்ளைகளைக் கடவுளின் குரலுக்குச் செவிகொடுப்பவர்களாக வளரச் செய்வோம். அவசரமான உலகில் வாழ்வதால் ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோமே தவிர, அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டுமென்று நினைப்பதில்லை. ‘அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்என்கிறார் இயேசு (மத் 9:37-38).

எனவே, நாம் இறையழைத்தலை நமது பிள்ளைகளிடம் ஊக்குவிப்போம். அறுவடையின் ஆண்டவரிடம் மன்றாடுவோம். குடும்பச் செபமும், நமது முன்மாதிரியான வாழ்வும் நம் குழந்தைகளை இறைப் பணிக்கு அர்ப்பணிக்கப் பேருதவியாக அமையட்டும்!

Comment