No icon

தலித் கிறிஸ்தவர் இடஒதுக்கீடு

அரசு பதிலளிக்க 3 வாரம் அவகாசம்

தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செவ்வாய்கிழமை கூறியுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு மதம் மாறிய SC/ST சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற வழக்கின் மனு விசாரணை வந்தது. அந்த மனு மீதான வழக்கிற்கு 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அரசியலமைப்பு ஆணையின் கீழ், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமே அட்டவணைப்படுத்தப்பட்ட சமூகத்தினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் 24 மில்லியன் கிறிஸ்தவர்களும், 138 மில்லியன் இஸ்லாமியர்களும் இருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. இருப்பினும், இந்த மதங்களுக்கு மாறிய தலித்துக்கள் பற்றிய தரவு எதுவும் இல்லை. 2008 இல், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் ஆய்வில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு SC அந்தஸ்து பரிந்துரைக்கப்பட்டது. இந்த அறிக்கையும் ஏற்கப்படவில்லை

செவ்வாயன்று நடந்த விசாரணையில், அனைத்திந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2007 இல் வெளியான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி, மற்ற மதங்களில் உள்ள தலித்துகள் இந்து மதத்தில் உள்ள அதே ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றும், கிறிஸ்தவமும் இஸ்லாமும் சாதி அமைப்பையோ அல்லது தீண்டாமையையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு மாறிய பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள், இந்திய சமூகத்தின் ஒரு அங்கமாகத் தொடர்வதால், சாதி மற்றும் தீண்டாமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து ஆளாகின்றனர் என்றார்.

AICU இன் பொது நல வழக்கு 2004 இல் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது ஆனால் கடந்த 18 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான ஆவணங்களை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு முன் மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comment