No icon

சிதைக்கப்படும் அரசமைப்புச் சட்ட விழுமியங்கள்:

இறையாட்சி காட்டும் சாத்தியக் கூறுகள்!

இந்தியா ஓர் இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு நாடாகும். இந்தச் சட்டங்கள் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் மதிப்பையும், மாண்பையும் காத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்கின்றன. ஆனால், இன்றைய பா... ஒன்றிய அரசின் பெரும்பாலான செயல்பாடுகள் அரசமைப்புக்கு முரணானதாக இருக்கின்றன. இச்செயல்பாடுகள் தொடர்ந்தால், நம் நாடு மக்களாட்சியை இழந்து, மீண்டும் அடிமை நிலையை அடையும் பேராபத்து வந்துவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்ச் 09, 2024 அன்று கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள சித்தாபூரில் நடந்த கூட்டத்தில் பா... நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. அனந்த் குமார் ஹெக்டே, பா... அரசு மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்துச் சமூகத்திற்கு ஏதுவாகத் திருத்தங்களைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். இவர் முன்னதாக 2017-இல் அரசியல் சாசனத்தை மாற்றுவதற்குப் பெரும்பான்மையில் பா... அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அனந்த் குமாரின் இந்த வார்த்தைகள் பா...வின் உண்மை முகத்தைத் தோலுரிப்பதாக இருக்கின்றது. அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமையும், பாதுகாப்பும் அளிக்கக்கூடிய இந்தியச் சாசனத்தை அழித்துவிட்டு, சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவா கொள்கையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதே பா... அரசின் கொள்கையாகின்றது.

2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா... அரசின் பத்து ஆண்டு கால ஆட்சியில், நம் நாட்டில் எப்பொழுதும் இல்லாத அளவிற்குச் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. மதத்தை முன்வைத்து வன்முறைச் செயல்பாடுகள் மற்றும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் பா...வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் இணைந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், ஊடகச் சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம்-ஒழுங்கு, சமூக நல்லிணக்க வளர்ச்சி, சனநாயக வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய நிலைகளில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம் பலமடங்கு சரிந்துவிட்டன.

பன்முகத்தன்மை கொண்ட சமயச் சார்பற்ற சனநாயக இந்தியாவில் உள்ள ஓர் அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், இராமர் கோயில் கட்டுவது, குடியுரிமைச் சட்டத் திருத்தம், ‘முத்தலாக்முறைக்குத் தடை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட கருத்தியல் சார்ந்த விவகாரங்களில், தான் விரும்பிய முடிவுகளைச் செயல்படுத்தி இருக்கிறது என்பது முற்றிலுமாக அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகளே. இச்செயல்பாடுகளைக் கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நபர்கள்மீது பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) அவர்கள் கைது செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழும் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்உபா’ (UAPA) கீழும் அவர்கள் கைது செய்யப்பட்டதும், தண்டிக்கப்பட்டதும், முடக்கப்பட்டதும் சனநாயகப் படுகொலைகளே.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியன இந்திய அரசியல் அமைப்பின் முதன்மை நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.  

நீதி என்பது சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்.

சுதந்திரம் (... பிரிவு 19-22) என்பது, தான் எண்ணிய கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும் உரிமை. தான் நம்பும் ஒன்றின்மீது நம்பிக்கை வைக்கும் உரிமை. தான் விரும்பிய முறையில் வழிபாடு செய்யும் உரிமை.

சமத்துவ உரிமை (... பிரிவு 14-18) என்பது, மக்கள் அனைவரும் சாதி, சமயம், இனம், பாலினம், பிறப்பிடம், பொருளாதாரம், மொழி என எவ்விதப் பாகுபாடுகளுக்கும் உள்ளாகாமல், அனைவரும் சமமான குடிமக்கள் என்ற தகுதி நிலையைப் பெறுவதுடன், அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்து, அவர்தம் வாழ்வு உயர்வுறச் செய்தல்.

சகோதரத்துவம் என்பது, இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் தனிமனித மதிப்பைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நம் நாட்டின் ஒற்றுமையையும், பன்மைத் தன்மையையும் போற்றி, ஒருமைப்பாட்டை வளர்க்கச் சகோதரத்துவத்துடன் வாழ உறுதி அளித்தல்.’

இவ்வாறு அரசமைப்பு சாசனம்தான் நமக்கு அனைத்து அடிப்படை உரிமைகளைப் பெற வழிவகை செய்கிறது. நம் நாடு மக்களாட்சியாய் இருப்பதால்தான் நாம் உரிமைகளைப் பற்றிப் பேச முடிகிறது. பன்முகத்தன்மை கொண்ட சமூக வாழ்வு, மனித மாண்பு இங்குதான் போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நம் அரசமைப்புச் சாசனத்தை நாம் அழிக்கவிடலாமா?

சமயச் சட்டங்களைத் தவறாகவும், தங்கள் சொந்த நலனுக்காகவும் திரித்து, மக்களை அடிமைப்படுத்தி வந்த யூத சமயத் தலைவர்கள் மத்தியில், இயேசுதிருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத் 5:17) என்று கூறிச் சட்டத்திற்கு உண்மையான விளக்கம் கொடுத்து, அவற்றைச் சட்ட வல்லுநர்களிடமிருந்தும், மறைநூல் அறிஞர்களிடமிருந்தும் காத்து மனித மாண்பை மீட்டெடுத்தார். நீதியும், தோழமையும், சமத்துவமும் நிறைந்த புதியதோர் அன்புச் சமுதாயத்தை வளர்த்து, தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இறையாட்சியை (உரோ 14:17) இம்மண்ணில் நிலைநாட்டினார்.

இந்திய மக்களை அடக்குகிற கொள்கைகள், கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அமைப்புகள் ஆகிய அனைத்தையும் இன்று நாமும் இயேசுவின் பாணியில் எதிர்த்துக் குரல் கொடுத்து, நீதியை, சமத்துவத்தை, சனநாயகத்தை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் விழுமியங்களை மக்களிடையே பரவலாக்கம் செய்து, அவர்களின் உரிமைகளைப் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சாசனம் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களுக்கு எழுத்து வடிவில் சான்று பகர்கின்றன. இவ்விழுமியங்களின் அடிப்படையான செயல்பாடுகள் மனிதரை மனிதராக மதிக்கக்கூடிய, மனிதத்தைப் போற்றக்கூடிய மனித உறவுகளை உறுதிப் படுத்துவதேஆகவே, நடைபெற இருக்கின்ற 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நம் நாட்டின் அரசமைப்புச் சாசனத்தின் விழுமியங்களை உள்வாங்கி நாட்டின் சனநாயகத்தை நிலைநிறுத்தும் கொள்கையுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்க நாம் தவறாது வாக்களிப்போம்! மனிதத்தையும், மனித மாண்பினையும் மீட்டெடுப்போம்!

Comment