No icon

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா (12-05-2024)

திப 1:1-11; எபேசியர் 4:1-13; மாற்கு 16:15-20

திருப்பலி முன்னுரை:

இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவர் இயேசு தமது இறப்பிற்குப் பிறகு சிதறிப்போன சீடர்களை, தாம் உயிர்த்தவுடன்  மீண்டும் ஒன்றுசேர்க்கிறார். தாம் விண்ணேற்றம் அடையும் நேரம்வரை, அவர்களுக்குத் தோன்றி, ஆசி வழங்கி அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்துகிறார். லூக்கா நற்செய்தியின்படி ஆண்டவர் இயேசு எருசலேமிலிருந்து விண்ணேற்றம் அடையவில்லை; மாறாக, பெத்தானியாவில் இருந்து விண்ணேற்றமடைகிறார். இந்தப் பெத்தானியாவில்தான் இறந்துபோன தம் நண்பன் இலாசரை உயிர்ப்பித்தார். இப்போது இந்தப் பெத்தானியாவிலிருந்தே விண்ணேற்றம் அடைகிறார். சிலுவை சுமந்து, பாடுகள் பட்டு, இறப்பதற்காகப் பெத்தானியாவிலிருந்து எருசலேமை நோக்கிச் சென்ற இறைவன், தமது உயிர்ப்பிற்குப் பின்பு விண்ணேற்றமடைய, எருசலேமிலிருந்து பெத்தானியாவை நோக்கி வருகிறார். அதாவது சிதறிப்போன சீடர்களுக்குத் துன்பமின்றி இன்பம் இல்லை; தாழ்வு இன்றி உயர்வு இல்லை; இறப்பு இன்றி உயிர்ப்பு இல்லை என்பதை உணர்த்துகிறார். ‘விண்ணகமே நமது தாய்நாடு’ என்று நாம் திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது தாய்நாடாம் விண்ணகத்திற்குச் சென்றிருப்பதைப் போல நாமும் நமது தந்தையைக் காண விண்ணரசில் பங்கு பெற்றிட வேண்டுமென்று இப்பெருவிழாத் திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு தாம் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக, தமது சீடர்களுக்கு ஆசிர் வழங்கி, தம்மிடமிருந்து கற்றுக்கொண்டதை உலகின் கடையெல்லைவரை கொண்டு சேர்த்திட வேண்டுமென்று அவர்களுக்குக் கட்ட ளையிடும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்றவாறு முழு மனத்தாழ்மையுடனும், கனிவுடனும், பொறுமையுடனும் ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திருமகனின் விண்ணேற்றப் பெருவிழாவினைக் கொண்டாடும் இந்நாளில் உம் திரு அவையானது, அவர் தந்திட்ட கட்டளையை உலகின் கடையெல்லைவரை செயல்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்துலகின் தலைவரே! நீர் ஒருவரே உலகின் உண்மையான தலைவர்! நீர் இன்றி எதுவும் இயங்காது என்பதை எம் நாட்டுத் தலைவர்கள் உணர்ந்து, நாட்டு மக்களை நல்வழியில் நடத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

நலம் பல அருள்பவரே! எங்களது பங்கிலும், குடும்பங்களிலும் நாங்கள் பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் பிறருக்கு ஆசிரையும், ஆறுதலையும் அளிப்பதாக அமைந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைக் காப்பவரே! உம் திருமகனின் விண்ணேற்றப் பெருவிழாவினைக் கொண்டாடும் இந்நேரத்தில் எங்களது ஏக்கங்கள், எண்ணங்கள் அனைத்தும் நீர் வாழும் வான்வீட்டை நோக்கியே அமைந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment