No icon

குடந்தை ஞானி

மனிதக் கடத்தலுக்கு அதிகம் பலியாவது பெண்களே!: Talitha Kum

கோவிட்-19 பெருந்தொற்றின்போது மனித கடத்தல் அதிகரித்துள்ள போதிலும், தலித்தாகும்(Talitha Kum) அமைப்பு  செயல்படும் ஏறத்தாழ 100 நாடுகளில் இந்தத் துயரத்தை எதிர்த்துப் போராட அதன் நடவடிக்கைகளை உயர்த்தியுள்ளது என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 

ஜூன் 28 ஆம் தேதி, செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள தலித்தாகும் அமைப்பின்  2021 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ள நிலையில், அதில் கடந்த ஆண்டின் செயல்பாடுகளைச் சுருக்கமாக விளக்கியுள்ளதுடன், வரவிருக்கும் ஆண்டுகளுக்கான தனது செயல் திட்டங்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள அனைத்துத் தரவுகளின் அடிப்படையில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில், குறிப்பிடும்படியாக, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி கபிரில்லா அவர்கள், பசியால் துயருறுவோரின் அண்மைய அதிகரிப்பு, மனிதர்களிடையே பெருத்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில், தலித்தாகும் அமைப்பானது, புலம்பெயர்ந்த மக்களிடையே நிலவும் அநீதிகளின் அதிகப்படியான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ள அருள்சகோதரி கபிரில்லா அவர்கள், பாலியல், உழைப்புச் சுரண்டல், கட்டாயத் திருமணம், இரந்துண்ணுதல் ஆகிய அனைத்திலும் எப்போதும் அதிகப் பாதிப்பைச் சந்திப்பவர்கள் பெண்கள்தாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் மனிதக் கடத்தலுக்கு பலியாகும் மொத்த நபர்களில், 72 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், புள்ளிவிவரங்களின்படி, மனிதக் கடத்தல் என்பது ஆண்டிற்கு ரூபாய் 15,000 கோடியை ஈட்டுகிறது என்றும் இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது. தலித்தாகும் என்பது, அனைத்துலக துறவற சபைத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட (UISG), உரோமையை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பாகும்.                

Comment