No icon

சுலோவாக்கியா நாடு

சுலோவாக்கியா நாடு

சுலோவாக்கியா நாடு

சுலோவாக்கியா நாடு, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிராத்திஸ்லாவா ஆகும். ஹங்கேரியின் கட்டுப்பாட்டின்கீழ் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக சுலோவாக் மக்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கம் மற்றும் தாய் மொழியை மறந்துவிடவில்லை.  இது ஐரோப்பாவின் அரசியல் வரைபடத்தில் 1993-ல் தோன்றிய மிக இளம் அரசு. ஹங்கேரிய ஆட்சியின் நீண்ட காலம், 1918-ல் முடிந்தது. இன்றைய சுலோவாக்கியா, செக் மற்றும் சுலோவாக்கியர்கள் வாழ்ந்த மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுலோவாக்கியர்களின் முன்னோர்கள், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸிடமிருந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், 10 ஆம் நூற்றாண்டில், இந்த நிலங்களில் ஹங்கேரியப் படையெடுப்புத் தொடங்கியது, இது இந்த மாநிலத்தை அழித்தது. அதன்பிறகு, சுலோவாக் நிலங்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1848-ம் ஆண்டின் புரட்சிக்குப் பிறகு, ஹங்கேரியர்கள், சுலோவாக் மொழியையும் தேசிய கலாச்சாரத்தையும் ஒடுக்கத் தொடங்கினர். 1918-ன் இறுதியில், செக்கோஸ்லோவாக்கியாவின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது. 1938-ல், நாடு பிளவுபட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி போலந்திற்குச் சென்றது, இன்னொரு பகுதி ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டது. மீதமுள்ளவை ஜெர்மன் துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. நாஸி படையெடுப்பாளர்களிடமிருந்து விடுதலையான பின்னர், கம்யூனிஸ்டுகள் நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 1989-ம் ஆண்டில், கம்யூனிச அமைப்பு மாறியது, ஒரு புதிய கூட்டாட்சி குடியரசின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது, சுலோவாக் மற்றும் செக் மக்கள் பிரதிநிதிகள், சமமான முறையில் நுழைந்தனர். 1992-ல், செக் மற்றும் சுலோவாக் சமூகங்களின் பிரதிநிதிகள் செக்கோஸ்லோவாக்கியாவைப் பிரிக்க ஒப்புக்கொண்டனர். ஐரோப்பாவின் அரசியல் வரைபடத்தில் சுலோவாக்கியா புதிய நாடாக தோன்றியது

53 இலட்சத்து 97 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட சுலோவாக்கியாவில் 65.8 விழுக்காட்டு கத்தோலிக்கர்கள் உள்ளனர். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால், 62 விழுக்காட்டினர் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர், ஏனைய 3.8 விழுக்காட்டினர், கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டு முறையினர். அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் கத்தோலிக்கராக இருப்பது, ஐரோப்பிய கண்டத்தின் விசுவாசத்தை பறைச்சாற்றுவதாக உள்ளது. 1100 ஆண்டுகளுக்கு மேலாக, சுலோவாக்கியாவில் தனிச்சிறப்பிடத்தைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருஅவை. 880 ஆம் ஆண்டுகளிலேயே மறைப்பணிகள் இந்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. பேராயர் புனித மெத்தடியஸின் காலத்தில், இங்கு கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. 40 ஆண்டுகால கம்யூனிச ஆட்சியில் கிறிஸ்தவம் பெரும் துன்பங்களைச் சந்தித்தது. தற்போது மீண்டும் இறைநம்பிக்கையில் புத்தெழுச்சிப் பெற்றுள்ளது. சுலோவாக்கியாவின் பாதுகாவலராக, ஏழு துயரங்களின் அன்னை மரியா விளங்குகிறார்.

Comment