No icon

எல் சால்வதோர்:

6 இயேசு சபை துறவியரின் மறைசாட்சியம்

எல் சல்வதோர் நாட்டிலுள்ள மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 1989 ஆம் ஆண்டு, 6 அருள்பணியாளர்களும், அவர்கள் இல்லப் பணியாளரும், அவரது மகளும் கொல்லப்பட்டதன் 32 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கர்தினால் மைக்கெல் செர்னி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் கீழ் இயங்கும், குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கெல் செர்னி அவர்கள், 32 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி, எல் சால்வதோர் தலைநகரிலுள்ள மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் 6 இயேசு சபை அருள்பணியாளர்களும், இரு பொதுநிலையினரும் கொல்லப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், இவர்களின் தியாகம், ஏழைகளின் குரலுக்கு செவிமடுக்கவும், தன்னையே மாற்றிக்கொள்ளவும் வேண்டிய தேவையை திருஅவைக்கு நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

மறைசாட்சிய மரணம் இடம்பெற்ற பகுதியில் நடப்பட்ட மூன்று மரக்கன்றுகள், இன்று தளிர்விட்டு, பூத்துக்குலுங்கி, பெரும் மரங்களாக வளர்ந்திருப்பது, உயிர்ப்பின் அடையாளமாக உள்ளது எனவும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள இயேசு சபை கர்தினால் மைக்கெல் செர்னி அவர்கள், இன்றைய உலகில் கவலைதரும் விடயங்கள் இடம்பெறுகின்றபோதிலும், திருஅவைக்குள் நம்பிக்கை தரும் அடையாளங்கள் பல உள்ளன எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

புனிதரான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்து, 1977 ஆம் ஆண்டு மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்ட  இயேசுசபை அருள்பணி ருட்டிலோ கிராண்டி அவர்கள், மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடிச் சென்றுள்ளதுடன், அங்குள்ள இயேசு சபையினரைஇஸ்ராயேலின் போதகர்கள்என அழைத்ததையும் கர்தினால் மைக்கெல் செர்னி தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுசபை மறைச்சாட்சிகளின் மொத்த புள்ளி விவரங்களையும் தன் செய்தியில் குறிப்பிடும் கர்தினால் மைக்கெல் செர்னி அவர்கள், திருஅவையின் 53 இயேசு சபை புனிதர்களுள் 34 பேர் மறைசாட்சிகள் என்பதையும், 152 அருளாளர்களுள் 145 பேர் மறைசாட்சிகள் எனவும், 10 பேர் வணக்கத்துக்குரியவர்கள் மற்றும் 162 பேர் இறையடியார்கள் என்பதில் 116 பேர் மறைசாட்சிய மரணம் அடைந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மறைசாட்சிய மரணங்களை நாம் நினைவுகூரும் வேளையில், எல் சால்வதோர் நாட்டில் பெருந்தொற்று பாதிப்பாலும், பல்வேறு நெருக்கடிகளாலும், நிலைமைகள் மிகவும் சீர்கேடடைந்துள்ளதையும் குறித்து சிந்திப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் மைக்கெல் செர்னி. சுற்றுச்சூழல் அழிவு, அரசியல் நிறுவனங்களின் பலவீன நிலைகள் போன்றவற்றையும் இன்றைய ஏழ்மை நிலைகளுக்கு காரணமாக கர்தினால் மைக்கெல் செர்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment