No icon

கர்தினால் போ

உலக அளவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

கோவிட்-19 தொற்றுக்கிருமி அச்சுறுத்தல் காலத்தில், உலக அளவில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது, உடனடித் தேவையாக உள்ளது என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22, இவ்வியாழன் மாலையில் கர்தினால் போ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 கொள்ளை நோய் பரவலின் விளைவுகள், ஒரு நாட்டின் பொதுநலம், சமுதாய மற்றும் பொருளாதார வாழ்வில் பேரிடர்களாக உள்ளன என்றும், ஆயுத மோதல்கள் அதிகரித்துவரும் மியான்மாரில் இந்நிலையை உண்மையிலேயே காண முடிகின்றது என்றும் கூறியுள்ளார்.

மியான்மார் முழுவதும் நெருக்கடியால் துன்புறும்வேளை, ராக்கினே (Rakhine) மாநிலத்தில், மியான்மார் இராணுவத்திற்கும், சின் (Chin) இன புரட்சிக்குழுவுக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்துவரும் ஆயுத மோதல்கள், நாட்டிற்கு பேரிழப்புக்களைக் கொணரும் என்று, தான் நம்புவதாக, கர்தினால் போ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை, தற்போதைய கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு, போர்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று, .நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்களும், உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மாரில் அடிப்படை நலவாழ்வு வசதிகள் குறைவுபடுவதால், அந்நாட்டின் நலவாழ்வில் பேரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று, பல பன்னாட்டு நிறுவனங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள கர்தினால், ஒன்றிணைந்த, அமைதியான மற்றும், வளமையான நாடாகவும், பன்னாட்டு அமைப்பில் உறுப்பினராகவும் மியான்மாரைக் கட்டியெழுப்புவதற்குத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இதுவே தக்க தருணம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் அச்சுறுத்தல் காரணமாக, காமரூன், பிலிப்பீன்ஸ், ஏமன், சிரியா போன்ற நாடுகளில் ஆயுதம் ஏந்தி போராடும் சில குழுக்கள், வன்முறையைக் குறைத்துக்கொள்ள ஏற்கனவே இசைவு தெரிவித்துள்ளதையும், கர்தினால் போ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மியான்மாரின் நலவாழ்வில் பேரிடர்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இராணுவமும், ஆயுதம் ஏந்திய புரட்சிக்குழுவும், திறந்த மனதுடன் உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ள அந்நாட்டு கர்தினால், இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவரும், நாட்டை அழிக்கின்றனர் என்று எச்சரித்துள்ளார்.

 

Comment