No icon

குடந்தை ஞானி

தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் - பேராயர் மச்சாடோ

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், அடையாளங்கள் மற்றும் புனிதர்களின் சுரூபங்கள் இவற்றிற்கு முறையான பாதுகாப்பளிக்கும்படி, பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் அம்மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022 பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கோகுண்டே என்ற கிராமத்தில் இருந்த 20 அடி உயர இயேசுவின் திருவுருவத்தையும், சிலுவைப்பாதை வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 14 நிலைகளையும் உள்ளூர் அரசாங்கத் துறையினர் தகுந்த முன்னறிவிப்பின்றி, இடித்துத் தரைமட்டமாக்கினர். ‘இவ்விடம் அரசுக்கு சொந்தமானது; இதை ஆக்கிரமித்து, கிறிஸ்தவர்கள் இங்கு வழிபாட்டுத்தலங்கள் அமைத்திருக்கிறார்கள்; எனவே, இவற்றை இடித்து நிலத்தை கையகப்படுத்துகிறோம்என்று அரசு தரப்பினர் கூறுகின்றனர். கர்நாடகத் திரு அவையின் அருள்பணியாளர்கள், ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக, இந்த இடமானது புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்திற்கு சொந்தமாக இருக்கின்றது. அதே நேரத்தில், இந்த இட விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கும் போதே, எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசாங்கத்தினர் இந்தப் புனித தலங்களை இடித்துத் தள்ளியது மிகவும் கண்டிக்கத்தக்கது, வேதனைக்குரியது என்று கருத்து தெரிவித்தனர். பிப்ரவரி 19 ஆம் தேதி, இந்த நிகழ்வை எதிர்த்து உயர்மறைமாவட்டம், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து, பேராயர் அவர்கள், “இந்நிகழ்வு கிறிஸ்தவர்களின் மத உணர்வை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருடைய மனதையும் பாதித்திருக்கிறது. இந்தத் திருவுருவச் சுரூபங்களை அழிக்கும்போது, மக்களின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை கண்டபொழுது மிகவும் வேதனையாய் இருந்தது. கர்நாடக மாநிலத்தில் நடக்கும் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளை பார்க்கிறபொழுது, எதிர்காலத்தில் இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கும், அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்என்று கூறினார்.

Comment