No icon

திருத்தந்தைக்கும், முன்னாள் திருத்தந்தைக்கும் தடுப்பூசி

திருத்தந்தைக்கும், முன்னாள் திருத்தந்தைக்கும் தடுப்பூசி
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் தடுப்பு மருந்து ஊசியை, சனவரி 13 ஆம் தேதி புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார் என்று, வத்திக்கான் செய்தித்துறையின் தலைவர், திருவாளர் மத்தேயோ ப்ரூனி அவர்கள் தெரிவித்தார்.

தடுப்பூசி மருந்தை, தான் பெற்றுக்கொள்ளப் போவதாகவும், இதைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வழங்கிய ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதை நினைவுபடுத்திய ப்ரூனி அவர்கள், இப்புதனன்று, தடுப்பூசி மருந்துகள் வத்திக்கானை அடைந்ததையடுத்து, திருத்தந்தை, இந்த தடுப்பூசியை முதலில் பெற்றுக்கொண்டார் என்று கூறினார்.

அத்துடன், சனவரி 14 ஆம் தேதி, வியாழன் காலை, இந்த தடுப்பூசி மருந்து, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்பதை, முன்னாள் திருத்தந்தையின் தனிப்பட்ட செயலரான பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன்  அவர்களும், ப்ரூனி அவர்களும் உறுதி செய்தனர்.

மேலும், தன் சகோதரரான ஜார்ஜ் ரட்சிங்கர் அவர்களின் மறைவுக்குப்பின், இவ்வாண்டு கிறிஸ்மஸ் திருநாளை, முதன்முறையாக, தனியே கொண்டாடிய முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்நாள்கள் கடினமானவையாக இருந்தன என்று, பேராயர் கன்ஸ்வைன்  அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறினார்.

முன்னாள் திருத்தந்தை, உடலளவில் மிகவும் தளர்ந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அவருடன் தான் வத்திக்கான் தோட்டத்தில் நடந்து செல்வதாகக் கூறிய பேராயர் கன்ஸ்வைன்   அவர்கள், முன்னாள் திருத்தந்தை அவர்கள் ஓய்வெடுக்கும் நேரங்கள் கூடியுள்ளன என்றும், ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுப்பதும், கட்டளை செபங்களைச் சொல்வதும் தடைபடுவதில்லை என்றும் கூறினார்.

Comment