No icon

Sr. மேரி ஆனந்த் DM

இந்த வாரப் புனிதர்கள்

ஜனவரி 21          புனித ஆக்னஸ்

புனித ஆக்னஸ் உரோம் நகரில் உயர்குலத்தில் 291 ஆம் ஆண்டு பிறந்தார். ஆக்னஸ் என்றால் புனிதம் என்பது பொருள். எனது கன்னிமை இறைவனுக்கே சொந்தம் என்றுகூறி, தூயவராக வாழ்ந்தார். புனித ஆக்னஸ் கிறிஸ்தவர் என்ற காரணத்தால் டயோக்ளேசியன் அரசன் கைது செய்து, சிறையில் அடைத்து துன்புறுத்தினான். கிறிஸ்துவை மறுதலித்து, உரோமை அரசன் வழிபடும் சிலையை வணங்கி, தூபம் காட்டக் கட்டாயப்படுத்தினான். புனித ஆக்னஸ்: “என் உயிரே போனாலும் நான் செய்யமாட்டேன். எனது உடலும், ஆன்மாவும் என்றுமுள்ள இறைவனுக்கே உரியதுஎன்றார். அரசன் தனது குலதெய்வத்தை வணங்க மறுத்த புனித ஆக்னஸின் தலையை வெட்டி கொலை செய்தான். அவ்வாறு கிறிஸ்துவின் பொருட்டு புனித ஆக்னஸ் 304 ஆம் ஆண்டு, ஜனவரி 21 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

ஜனவரி  22           புனித வின்சென்ட் பல்லோட்டி

புனித வின்சென்ட் பல்லோட்டி 1795 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் பிறந்தார். திருப்பலியில் பங்கேற்று அன்னை மரியாவிடம், “பிரியமுள்ள அம்மா! என்னை நல்ல குழந்தையாக மாற்றும்என்று செபித்தார். பல்லோட்டி 1818 ஆம் ஆண்டு, குருவாக அருட்பொழிவு பெற்றார். “நாம் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்”. எப்பொழுதும் தனது கரத்தில் சிலுவையும், செபமாலையும் வைத்திருந்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழியாக தீயவர்களை புனிதப்படுத்தினார். இறைமக்கள் இறையருள், கனிவும், கருணையும் பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டினார். நற்கருணைமீது அன்பு கொண்டார். திருப்பலி­யை பக்தியுடன் நிறைவேற்றினார். நற்கருணையை ஆன்மாவின் உணவாக உட்கொண்டு, உயிர்வாழ்ந்த தியாகத்தின் செம்மல் புனித வின்சென்ட் பல்லோட்டி 1850 ஆம் ஆண்டு, ஜனவரி 22 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

ஜனவரி 23          புனித இல்டபோன்சஸ்

புனித இல்டபோன்சஸ் ஸ்பெயின் நாட்டில் 607 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதல் இறைவனின் அருட்கரம் தன்னோடு இருப்பதை உணர்ந்தார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்து, அவரின் துணை நாடினார். புனித ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தார். 630 ஆம் ஆண்டு திருத்தொண்டராக அருள்பொழிவு பெற்றார். டொலேடோ நகரின் பேராயராக அருள்பொழிவு பெற்றார். எண்ணற்ற நூல்கள் எழுதினார். மரியாவின் கன்னித்தன்மை பற்றியும் நூல்கள் எழுதினார். எனவேதான் இவரை மரியாவின் கன்னிமையின் மறைவல்லுநர் என்று அழைக்கப்படுகிறார். மரியா வானதூதர்களுடன் காட்சி தந்து இதோ எனது பணியாளர், நம்பிக்கைக்குரியவர் என்றார். புனித இல்டபோன்சஸ் 667 ஆம் ஆண்டு இறந்து, புனிதரானார்.

ஜனவரி 24          புனித பிரான்சிஸ் சலேசியார்

புனித பிரான்சிஸ் சலேசியார் பிரான்ஸ் நாட்டில் 1567 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் நாள் பிறந்தார். அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சியை சொந்தமாக்கியவர். குதிரை சவாரி செய்வதில் புகழ் பெற்று சகமாணவர்கள் மத்தியில் ஒரு தலைவனாகவும், திறமை மிக்கவராகவும் திகழ்ந்தார். விவி­லியம் வாசித்து, திருப்பலியில் பங்கேற்று தூயவரானார். செபத்தை வாழ்வின் உயிர்மூச்சாக மாற்றினார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். “இறைவனே எனது மாபெரும் சொத்து. அவரது வார்த்தைகளை வாழ்வாக்கி வழங்குவேன்என்றுகூறி, 1593 ஆம் ஆண்டு குருவானார். “குருத்துவ மாண்பே உலகப் பதவிகளைவிட மேன்மையானதுஎன்று கூறினார். 23 ஆண்டுகள் தவ முயற்சிகள் செய்து பொறுமையைத் தனதாக்கிய சலேசியார் 1622, டிசம்பர் 28 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

ஜனவரி 25          புனித பவுல் மனமாற்றம்

புனித பவுல் தர்சு நகரில் 10 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சவுல். யூத குலத்தைச் சேர்ந்து உரோமை குடியுரிமை பெற்றார். கிரேக்கப் பண்பாட்டிலும், மெய்யியலும் கற்று ஞானியானார். புகழ் பெற்ற கமாலி­யேல் என்னும் யூத ராபியிடம் கல்வி பயின்றார். யூத குலத்தின் முறைகளையும், சட்டங்களையும் நன்கு கற்றிருந்தார். சிலுவையில் அறையப்பட்டஇயேசுவே மெசியாஎன்ற உண்மையை ஏற்காமல், கிறிஸ்தவ மக்களை துன்புறுத்திய சவுல், செல்லும் வழியில் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு, மனமாற்றம் அடைந்து,  ‘பவுல்ஆனார். நற்செய்தியின் பொருட்டு பாடுபட்டு, உழைத்தார். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். கொடுமையாய் அடிபட்டார். பலமுறை சாவின் வாயில் நின்றார். 3 முறை தடியால் அடிபட்டார். ஒருமுறை கல்லால் எறியப்பட்டார். புனித பவுல் வேற்றினத்தாரின் திருத்தூதர் என்றும், ஐந்தாம் நற்செய்தியாளர், முதல் இறையியலார், பதின்மூன்றாம் திருத்தூதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஜனவரி 26          புனித திமொத்தேயு

புனித திமொத்தேயு ஆஸ்திராவில் பிறந்து, நற்சான்றுடன் வாழ்ந்தார். திமொத்தேயு என்றால் கடவுளால் அணிசெய்யப்பட்டவர் என்பது பொருள். பவு­ல் போதனையால் மனம்மாறி, கிறிஸ்துவுக்கு உகந்தவராய் பணி செய்தார். தெசலோனிக்க மக்களிடத்தில் கலகம் ஏற்பட்டபோது, மக்களை இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். கிறிஸ்துவின் நற்செய்தியை சொல்லாலும், செயலாலும் எடுத்துரைத்து மக்களின் மனதில் கிறிஸ்துவின் போதனைகளை வளர்த்தார். கிறிஸ்துவை பின்பற்ற தயக்கம் கொண்டவர்களை திடப்படுத்தி வழிகாட்டினார். 65 ஆம் ஆண்டு, ஏபேசு திருச்சபையின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலை வழிபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தபோது, வே தவிரோதிகள் இவரைக் கல்லெறிந்து கொலை செய்தனர்.

Comment