No icon

ஞாயிறு – 19.02.2023

ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு லேவி19:1-2, 17-18,1கொரி 3:16-23, மத் 5:36-48

நிறைவுள்ளவராக!

இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று மூன்று கட்டளைகளை - ‘கொலை செய்யாதே,’ ‘விபசாரம் செய்யாதே,’ ‘பொய்ச்சான்று சொல்லாதே’ - கையாண்ட இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:36-48), ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ (காண். விப 21:22-25, லேவி 24:17-22), ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு, பகைவருக்கு வெறுப்பு’ (காண். லேவி 19:18) என்னும் மோசேயின் விதிமுறைகளை எடுத்துக் கையாளுகின்ற இயேசு அவற்றின் உள்பொருளை நீட்டுகின்றார்.

இந்த நீட்சியின் நோக்கம் என்ன? நிறைவுள்ளவராதல்!

தூய்மைஅல்லதுநிறைவுஎன்னும் வார்த்தைகள் இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் வருகின்றன. கடவுளைப் பற்றி பேசும் நாம் மனித வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றோம். ‘தூய்மைஎன்ற வார்த்தை விவிலியத்தில் கடவுளைப் பற்றிப் பேச அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘தூய்மைஎன்றால் என்ன? முதலில்,’ தூய்மைஎன்பதுஒதுக்கிவைக்கப்படுதலை’ - அதாவது, எல்லாவற்றிலுமிருந்து பிரித்துவைக்கப்படுதலைக்’ - குறிக்கிறது. இரண்டு, தூய்மை என்பது கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் காட்டிய நன்மைத்தனத்தைக் குறிக்கிறது. கடவுளுக்கு சொந்தமான மக்களும் இதே தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் கருதினார்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2,17-18), ‘தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்என்னும் ஆண்டவரின் கட்டளையோடு தொடங்குகிறது. மனிதர்களோ, மனித சமூகமோ எப்படி தூய்மையாக இருக்க முடியும்? தூய்மையாக இருப்பதற்கான விதிமுறைகளை எபிரேய விவிலியத்தின் முதல் பகுதியான தோரா அல்லது ஐநூல்கள் கற்பிக்கின்றன. குறிப்பாக, ‘தூய்மைச் சட்டம்என்று சொல்லப்படுகின்ற லேவி 17-26 என்னும் விவிலியப் பகுதி இதற்கான நிறைய வழிமுறைகளை எடுத்தியம்புகிறது. அனைத்து நாடுகளிலிருந்து இஸ்ரயேலைத் தனக்கெனஒதுக்கிவைத்துகடவுள் தேர்ந்துகொண்டதால் தாங்களும்ஒதுக்கிவைக்கப்பட்டஅல்லதுதூய்மையானமக்கள் என்ற மனநிலையிலேயே வளர்ந்தனர் இஸ்ரயேல் மக்கள். மேலும், இத்தூய்மைநிலை தங்களுடைய சமூகத்திற்குள் நிகழும் உறவுப் பரிமாற்றத்திலும் துலங்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி குறிப்பிடுவதுபோல, எந்த வகையான பகையுணர்வையும், காழ்ப்புணர்வையும் ஒதுக்கி வைப்பதே தூய்மை என்ற புரிதலும் உருவானது. தாங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் உறவில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளைப்போல இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. இஸ்ரயேல் ஒருவர் மற்றவர்மேல் காட்டக்கூடிய அக்கறையைஅன்புஎன வரையறுக்கிறது வாசகம். தோராவில் இந்த அக்கறை அல்லது அன்பானது இஸ்ரயேல் மக்கள் குழுமத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்டது.

ஆக, கடவுளின் நிறைவு என்பது அவருடைய தூய்மை எனக் குறிக்கப்பட்டு, இத்தகைய தூய நிலைக்கு அழைக்கப்படுகின்ற இஸ்ரயேல் மக்கள் பிறரன்பின் வழியாக நிறைவுள்ளவராகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 3:16-23) கொரிந்து நகரத் திரு அவைக்கு எழுதுகின்ற திருமடலில், அவர்களைக் கோவிலுக்கு ஒப்பிடுகிறார் பவுல். ‘கோவில்என்று பவுல் குறிப்பிடுவது எருசலேம் ஆலயத்தின் கருவறை என்று சொல்லப்படுகின்றதிருத்தூயகத்தை.’ இங்கேதான் கடவுள் குடியிருந்ததாகச் சொல்லப்பட்டது. இதே உருவகத்தைக் கையாளுகின்ற பவுல் கொரிந்து குழுமத்தை கடவுளின் குடியிருப்பு என்று அழைக்கின்றார். பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் மலிந்து கிடந்த கொரிந்து சமூகத்திற்கு எதிராகவே இந்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றார் பவுல். குழுமத்தில் ஏற்படுகின்ற பிரிவினைகள் கடவுளின் கோவில் என்ற நிலையிலிருந்து குழுமத்தைத் தாழ்த்திவிடும் என்று எச்சரிக்கை விடுப்பதோடு, அவர்கள் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு கடவுளிடம் ஒப்புரவாக்கப்பட்டார்கள் என்பதையும் நினைவூட்டுகின்றார்.

ஆக, பிரிவினைகளை அகற்றி ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணுதல் வழியாக, ஒருவர் நிறைவுள்ளவராக முடியும். மேலும், நிறைவுள்ளவராக வேண்டும் என்ற அழைப்பு இயல்பாகவே நம்மிடம் இருக்கின்றது. ஏனெனில், கடவுளே நம்மில் குடிகொண்டிருக்கிறார் - தனி நபரிலும் நம்முடைய குழுமத்திலும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:38-48) இரண்டு வெவ்வேறான விடயங்களைப் பற்றிப் பேசுகிறது.

முதலில், வன்முறை மற்றும் இகழ்ச்சி பற்றி. இயேசுவின் சமகாலத்தில்கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்என்ற நிலையில்தான் வன்முறை மற்றும் இகழ்ச்சி தொடர்பான பிரச்சனைகள் சட்டரீதியாக எதிர்கொள்ளப்பட்டன. குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை இது உறுதி செய்வதால் சமூகத்தில் வன்முறை வளராமல் தடுத்தது இது. இவ்வகை நீதியை இயேசு ஒதுக்கித்தள்ளவில்லை. மாறாக, மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக, தன்னுடைய சீடர்கள் இன்னும் ஒரு படி முன்னேறிச் சென்று வன்முறை மற்றும் இகழ்ச்சியை அழித்துவிடுமாறு கற்பிக்கின்றார் இயேசு. இயேசு பயன்படுத்தும் மூன்று எடுத்துக்காட்டுகளும் - வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னம், அங்கியை எடுத்துக்கொள்கிறவருக்கு மேலாடை, ஒரு கல் தொலை வற்புறுத்தப்பட்டால் இரு கல் தொலை - ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றன: பழிக்குப் பழி வாங்காமல் இருப்பதன் வழியாக வன்முறையின் வேகத்தைக் குறைப்பது. இயேசுவைப் பொறுத்தவரையில் சமூக மாற்றம் என்பது பழிவாங்குதலில் அல்ல; மாறாக, பழிவாங்குவதற்குப் பதிலாக நன்மை செய்வதில்தான் அடங்கியுள்ளது. தண்டனைக்கு ஏற்றாற்போல வழங்கப்படும் நீதி இன்னும் அதிக வன்முறையையே வளர்க்கும். அமைதியையும் இகழ்ச்சியையும் மாற்றும் ஒரே வழி தாராள உள்ளம் - இன்னும் ஒரு படி நடப்பது.

இரண்டாவதாக, கிறிஸ்தவ அன்பின் வரையறையை அகலமாக்குகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் பிறரன்பு என்பது இஸ்ரயேலர் சமூகத்தினருக்கு மட்டும் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. மேலும், பகைவர்கள் - அந்நிய நாட்டினர், புறவினத்தார், சமாரியர்கள் போன்றோர் - வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற புரிதலும் இருந்தது. ஆனால், இது ஐநூலில் இல்லை. இயேசு இவ்வகை வரையறைகளை உடைக்கின்றார். கடவுள் ஒருவரையே முன்மாதிரியாகக் கொண்டு, தன்னுடைய சீடர்கள் அன்பை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. அடுத்தவர்கள் தங்களிடம் உறவு பாராட்டும் நெருக்கத்தைப் பொருட்படுத்தாமல், அடுத்தவரின் இயல்பு அல்லது மனநிலையை விமர்சிக்காமல் அனைவரையும் முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறார் இயேசு. ஒருவர் மற்றவருக்கு நன்மை செய்து அதற்கேற்ற கைம்மாறை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற சமூகத்திற்கு ஒரு மாற்றுச் சமூகத்தை முன்மொழிகிறார் இயேசு. நிறைவுள்ளவராக இருப்பதற்கான மாதிரி கடவுளே. மேலும், அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு செயல். அது ஒரு தெரிவு அல்லது முடிவு.

ஆக, நிறைவுள்ளவராக ஒருவர் மாறுவதற்கு இரண்டு வழிகள்: ஒன்று, கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடப்பது. இரண்டு, வரையறைகளையும் விருப்பு வெறுப்புகளையும், பதிலிறுப்புகளையும் கடந்து அன்பு பாராட்டுவது.

இன்றைய மூன்று வாசகங்களும் நிறைவுள்ளவராக மாற நம்மை அழைப்பதோடு, நிறைவுள்ளவராதல் மனிதர்களால் எட்டி அடைய முடியும் தூரத்தில்தான் இருக்கிறது என்ற ஆறுதலையும் தருகிறது. முதல் வாசகத்தில், நிறைவுள்ளவராதல் என்பது கடவுளைப் போல தூய்மையாக இருந்து, ஒருவர் மற்றவர்மேல் அன்பு காட்டுவது. இரண்டாம் வாசகத்தில் நிறைவுள்ளவராக இருத்தல் என்பது பிரிவினைகளைக் களைந்து வாழ்வது. நற்செய்தி வாசகத்தில் நிறைவுள்ளவராதல் என்பது பகைமையைத் தாண்டுவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய அன்பிலும் சாத்தியமாகிறது.

நிறைவுள்ளவராதல்சாத்தியமா? ஏன் நாம் நிறைவுள்ளவராக வேண்டும்? கடவுளைப் போல நிறைவுள்ளவராக முடியுமா? குறைகளோடு நாம் இருந்தால்தான் என்ன? - இப்படி நிறைய கேள்விகள் நம்மில் எழலாம்.

நிறைவுள்ளவராக வேண்டும் என்றால் இன்று நம்மிடமிருக்கும் குறைவு மனப்பான்மை விடுக்க வேண்டும்.

அது என்ன குறைவு மனப்பான்மை?

தன் வீட்டிற்கு வெளியே இருந்த பொற்கிழியில் 99 தங்க நாணயங்கள் இருக்க, ‘இன்னும் 1 நாணயம் இருந்தால் 100 நாணயங்கள் ஆகியிருக்குமேஎன்ற முல்லாவைப் போல புலம்புவதுதான்குறைவு மனப்பான்மை.’ குறைவு மனம் அடுத்தவரிடம் மட்டுமல்ல; தன்னிடமே குறையை மட்டும்தான் பார்க்கும்.

நான் என்னிலேயே நிறைவானவன், நிறைவானவள்என்ற மனநிலையை முதலில் உருவாக்க வேண்டும். என்னை நிறைவுள்ளவராக்குவது நான் அணியும் ஆடையோ, எனக்கருகில் நிற்பவரோ அல்ல; நான் என்னிலேயே நிறைவானவன். ஆனால், இந்த மனநிலை என்னிடம் மறந்துபோகக் காரணம் என்ன?

மூன்று காரணங்கள்:

. என் மீது அன்புகூர மறுப்பது

பிறரன்பைப் பற்றிப் பேசுகின்ற முதல் வாசகம் அதன் அடிப்படையான தகுதியாக தன்மேல் ஒருவர் காட்ட வேண்டிய அன்பைக் குறிப்பிடுகிறது. தன்னை அன்பு செய்யாத ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியாது. எனக்கு எது பிடிக்கும்? என்று நான் தெரியாமல் இருந்துகொண்டு, மற்றவருக்குப் பிடிப்பது எது? என்பதை ஆராய்ச்சி செய்ய முடியாது. பல நேரங்களில் தன் அன்பு என்பதை நாம் தன்னலம் என்று தவறாகக் கருதுகிறோம். தன் அன்பு என்பதில்தான் நம்முடைய தன் மதிப்பும், தன்னம்பிக்கையும் அடங்கியுள்ளது.

. பிரிவினைகளை வளர்ப்பது

அடுத்தவரையும் என்னையும் எது இணைக்கிறது என்று பார்ப்பதற்குப் பதிலாக, அடுத்தவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டு இருக்கிறேன் அல்லது உயர்ந்து நிற்கிறேன் என்று பார்த்தது பவுல் காலத்துக் கொரிந்து குழுமம். இந்த மனநிலையில் நான் என்னை மற்றவரோடு ஒப்பீடு செய்வதால் என்னால் அடுத்தவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், ஒப்பீடு விரைவில் பொறாமையாகவும் குறுகிய எண்ணமாகவும் மாறிவிடும்.

. மற்றவர்களைப் போல இருக்க நினைப்பது

என்னுடைய அன்பை நிர்ணயிக்கும் கடமையை நான் சில நேரங்களில் மற்றவர்களிடம் விட்டுவிடுகிறேன். அவருடைய செயல்கள் என்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்த நான் விட்டுவிடுவதால், அவர் எனக்குத் தலைவராகவும் நான் அடிமையாகவும் மாறிவிடுகிறேன். மாறாக, அவர் எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று வரையறை செய்தால் நிறைவு மனநிலை அடைந்துவிடலாம்.

இறுதியாக,

மேற்காணும் மூன்று காரணிகளை நான் அகற்றிவிட நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே: ‘கொஞ்சம் எக்ஸ்ட்ராஎன வாழ்வது. எக்ஸ்ட்ரா கண், காது, புரிதல், நடத்தல் என என் வாழ்வை நானே நீட்டிப்பது. நிறைவு என்பது நிலையான நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அல்ல; அது மாறிக்கொண்டே இருப்பது. நிறைவு என்று ஒன்றை நான் அடைந்துவிட்டால் அது இன்னும் வளர ஆரம்பிக்கும். இன்னும் நான் தேட ஆரம்பிப்பேன். அந்தத் தேடுதலில் நானும் உருவாகிக்கொண்டே இருப்பேன். ஏனெனில், உருவாகிக்கொண்டே இருப்பதுதான் நிறைவு. என்னை நானே எனக்குப் போட்டியாக வைத்து நான் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மகிழ்ச்சிக்கான சாவி என்னிடமே இருக்கின்றது. மனிதர்கள் எல்லாவற்றையும்விட மேலானவர்கள். இம்மனிதர்களைக் கைக்கொள்ள நாம் எந்த எதிர்மறை எண்ணத்தையும் விட்டுவிடலாம். ஏனெனில், இவர்கள் கடவுளின் சாயல், கடவுளின் கோவில்.

பதிலுரைப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல (காண். திபா 103), இவர்களில் குடிகொள்ளும் கடவுள், ‘இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்’. அப்படியே நாமும் இருப்போம் நிறைவுள்ளவராக!

Comment