No icon

05, மே 2024 (இரண்டாம் ஆண்டு)

பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு (திப 10:25-26, 34-35, 44-48; 1யோவா 4:7-10; யோவா 15:9-17)

அன்பில் நிலைத்திருக்க! அன்பை வாழ்வாக்க!!

ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs, 1955-2011) என்பவர் 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள் ‘ஆப்பிள்’ கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதன்மைச் செயலராக (CEO) 1997 முதல் 2011 வரை விளங்கினார். புற்று நோயால் மிகவும் துன்புற்று மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்த நாள்களில் இவர் கூறிய இறுதி வரிகள் இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கின்றன.

“நான் 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினேன். பத்து ஆண்டுகள் உழைப்பிற்குப் பின் இரண்டு பில்லியன் டாலர்களுடன் 4,000 பேர்களை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். புகழின் உச்சியில் நான் இருந்தபோது, எனக்குக் கணையத்தில் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது நலமாக்க இயலாத நோய் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பணமும், வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில்தான் அறிந்து கொண்டேன். இதோ இந்த மரண நேரத்தில், என் முழு வாழ்வையும் திரும்பிப் பார்க்கும்போது, வாழ்வில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம், பணம், புகழ் எல்லாமே செல்லாக் காசாக, அர்த்தமற்றதாக, மரணத்தின்முன் தோற்றுப்போய் நிற்பதை உணர்ந்தேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நாம் நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு அன்பை வாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் மகிழ்வாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார அன்பு கூருங்கள்.”

வாழ்வில் எந்தக் குறையுமின்றி, எல்லாவற்றையும் அனுபவித்தவர்கள்கூட இறுதியில் கூறும் வார்த்தைகள் ‘அன்பு கூருங்கள்’ என்பதுதான். நம் சமுதாயத்தில் இன்று அன்புக்குக் கடும் பஞ்சம்! இனத்தின் பெயரால், மதத்தில் பெயரால், மொழியில் பெயரால், கட்சியின் பெயரால் எத்தனை சண்டைகள்? எத்தனை கொலைகள்? அன்பு எங்கே? மனிதம் எங்கே? என்று கேட்கத் தோன்றுகிறது.

அன்புதான் இந்த உலகை இயக்கும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடம் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்பு ஒன்றே. துன்பமும், கலக்கமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில், அன்புதான் ஒரே ஆறுதல். அன்பு ஒன்றே தொடக்கம் முதல் இறுதிவரை திருவிவிலியம் கூறும் செய்தி! அன்பே வாழ்வு! அன்பே பெருங் கொடை! அன்பிலா வாழ்வில் வெறுப்பு, பகைமை, பழிவாங்கல், சுயநலம் போன்றவை தழைக்கும். வெறுப்பின் கனியே கொலை. காயினிலும் அதுவே நிகழ்ந்தது. அன்பற்ற நிலையே வரலாற்றின் முதல் கொலைக்குக் காரணம். அன்பற்ற உலகில் ‘அன்பில் நிலைத்திருக்க... அன்பை வாழ்வாக்க...’ நம்மை அழைக்கின்றது பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு.

யோவான் எழுதிய முதல் திருமுகம் அன்பு பற்றிய உன்னதமான கருத்துகளை நமக்குத் தருகிறது. அன்பு பற்றி மிகுதியாகப் பேசுவதாலே இதை ‘அன்புக் கடிதம்’ எனலாம். அன்புக்கும், கடவுளுக்கும் இடையே உள்ள உன்னதமான உறவு குறித்துப் பேசுகிறார் திருமுக ஆசிரியர் யோவான். கடவுளின் அன்பு உயர்ந்தது, எல்லையற்றது, நிபந்தனையற்றது. தம் சொந்த மகனையே நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பும் அளவுக்கு அவர் நம்மீது அன்புகூர்ந்தார் (1யோவா 4:10). அன்பின் ஊற்றே கடவுள்தாம். அன்பு செலுத்துவோர் கடவுளுக்கு நெருக்கமானோர். அன்பு செலுத்துவதன் வழியாகக் கடவுளின் சாயலில் வளர்கிறோம். ஏனெனில், ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ (4:8). இந்த மூன்று சொற்கள்தான் நம் மறையில் இதயத் துடிப்பாக இருக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் மிக அழகாகக் கூறுகிறார்: “அன்பின்றி வாழ்வும், நம்பிக்கையும் வறண்டுபோகும். வாழ்வுக்கு எது முக்கியமானதோ அதனையே இயேசு போதித்தார், வாழ்ந்தார், அதுதான் அன்பு” (ஞாயிறு மூவேளைச் செப உரை, 29.10.2017).

இயேசுவின் அன்பு பற்றிய போதனை புரட்சிகரமானது! ‘என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல, நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்’ என்றும், ‘நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்’ (1யோவா 4:11; யோவா 13:34,35; 15:12) என்ற புதிய கட்டளையின் வழியே, கிறிஸ்தவ அன்பின் நோக்கம் என்ன என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

நாம் ஒருவர்மீது அன்பு கொண்டால், அவர் பதிலுக்கு நம்மீது அன்புகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் இயற்கை. ஆனால், இயேசு, தம் சீடர்களுக்குச் சொல்லித் தந்த அன்பு, பிரதிபலனை எதிர்பார்த்துக் காட்டப்படும் அன்பு அல்ல; இந்த அன்பு, ‘உனக்கு நான், எனக்கு நீ’ என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து, அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று மேலும் மேலும் பரந்து, பாய்ந்து செல்ல வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். ‘தன்னை மையப்படுத்தாமல், அடுத்தவரை மையப்படுத்தி எழும் உன்னத உணர்வே உண்மையான அன்பு. அந்த அன்பைப் பறைசாற்றும் இதயங்களே ஆண்டவன் தங்கும் ஆலயங்கள்’ - இதுதான் இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

இயேசுவின் இந்த அன்பு வெறும் உணர்வுகளிலும், சொற்களிலும் அடங்கும் ஒன்று அல்ல; இது பொருள்களை மட்டும் கொடுப்பதில் அடங்கும் ஒன்றும் அல்ல; இது இறை உண்மைகளையும், அருளையும் பகிர்ந்து கொடுப்பதில்கூட நிறைவு பெறாது; மாறாக, ஒருவர் தம் உயிரை அளிக்க முன்வரும்போதுதான் அன்பு அதன் நிறைவு நிலையை அடைகிறது; முழுமை பெறுகிறது. இந்த முழுமையான அன்புக்கு ஒப்பற்ற மாதிரி இயேசுவைத் தவிர வேறு எவருமிலர்!

இயேசு தம் மக்களை ‘நண்பர்கள்’ என்று அழைத்து, நண்பர்களுக்குரிய நிலையில் உயர்த்துகிறார். பணியாளர்கள் கூலியை எதிர்பார்க்கிறார்கள். நண்பர்களோ உறவை எதிர்பார்க்கிறார்கள். எனவே, இயேசு பணியாளர்களை நண்பர்களாக மாற்றுகிறார். ஊதிய நிலையிலிருந்து உறவு நிலைக்கு உயர்த்துகிறார். இதுதான் இயேசு நமக்கு அளிக்கும் தனிச் சிறப்பு; பெரும் பேறு! ஆனால், இன்றைய உலகம் நண்பர்களைப் பணியாளர்களாக்கி, உறவைவிட ஊதியத்தையே முதன்மைப்படுத்துகிறது! நம்மை நண்பர்களாகத் தேர்ந்துகொண்ட இயேசு, நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், எந்த அளவில் அவர் நம்மை அன்பு செய்கிறாரோ, அதே அளவில் நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான்.

இயேசுவின் அன்புக் கட்டளைகளை ஏற்றுக் கொண்ட தொடக்கத் திரு அவை அந்த அன்பை வெறுமனே சொல்லிலும், பேச்சிலும் அல்ல; மாறாக, தங்கள் செயல்களில் வெளிக்காட்டினர். யூதப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் வேரூன்றிய தொடக்கத் திரு அவையின் முகமாகப் பார்க்கப்பட்ட பேதுருவின் வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம் (திப 10:9-16), கொர்னேலியுவையும், அவரைச் சார்ந்த பிற இனத்தவரையும் வேறுபாடு கருதாது ஏற்கச் செய்தது. யூதரல்லாத, நேர்மையாளரும், மக்களை மதிப்பவரும், இறைப்பற்றுள்ளவரும் கடவுளுக்கு அஞ்சுபவருமான கொர்னேலியுவின் மனமாற்றம் (திப 10:1-8), பிற இன உலகின் மனமாற்றத்தின் தொடக்கமாக அமைந்தது. கொர்னேலியு தன்னுடைய உரோமை ஆதிக்கத்திலிருந்து வெளியே வருகிறார்; பேதுரு தன்னுடைய யூத பழமைவாதத்திலிருந்து வெளியே வருகிறார். இவர்களின் சந்திப்பு கிறிஸ்தவ வரலாற்றில் ஓர் அத்தியாயம்! மீட்பின் வழியை உணரக் கொர்னேலியுவுக்குப் பேதுரு தேவைப்பட்டார். பிற இனத்தாரும் எல்லைகளைக் கடந்து, கடவுளின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பதை உணர பேதுருவுக்குக் கொர்னேலியு தேவைப்பட்டார். ‘கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை’ (திப 10:34) என்பதை உணர நாமும் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம்.

இவ்வுலகில் நமது பிறப்பு முதல் இறப்புவரை எல்லாமே பிறரால் நமக்குக் கொடுக்கப்படுகின்றன. பிறரைச் சார்ந்தே நாம் வாழ வேண்டியிருக்கின்றது. நாம் ஆற்றிய நற்காரியங்களே நம் இறுதி ஊர்வலத்தில் பெருமையடையும். இறக்கும்போது நாம் எடுத்துச் செல்வதும் எதுவுமில்லை. அப்படியிருக்கையில், நாம் ஏன் நம் வாழ்வை, எளிமையாக்கி, அன்பால் நிரப்பக்கூடாது?

காலையிலிருந்து மாலை வரை நாம் மனிதர்கள் பலரைச் சந்திக்கிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உள்ளன்போடு சிரித்துப் பேசுகிறோம்? வேறு வழியில்லை, சிரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சிரிக்கிறோமா? அல்லது உண்மையான அன்போடு பேசிச் சிரிக்கிறோமா? பொய்யாகச் சிரித்து, போலியாகப் புகழ வேண்டிய கட்டாயத்தில்தான் பலர் இருக்கின்றனர். உதடுகளின்றி, உள்ளத்தால் சிரிப்பது எப்போது?

Martin Kornfeld கூறுகிறார்: “நாம் எல்லாரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது அன்புச் செயல் ஒன்றைச் செய்தால், நாம் இந்த உலகைச் சரியான திசையில் நடத்திச் செல்கிறோம் என்று அர்த்தம்”. “உங்கள் அன்பை இரகசியமாக வைத்துக்கொண்டிராமல், அதை அன்புச் செயல்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்” என்கிறார் இரவீந்திரநாத் தாகூர். “ஓர் ஆன்மாவைப் பயனுள்ளதாக்குவது அந்த ஆன்மாவில் குடிகொண்டுள்ள அன்பு மட்டுமே” என்பார் தூய கத்தரீன்.

அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன; அன்பான செயல்கள் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. அன்பாக இருப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் வழியாக, நமக்கு எப்போதும் மகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. உள்ளன்போடு செய்யும் எந்த ஒரு செயலும் மனமகிழ்வைத் தருகிறது.

இன்று சிலருக்கு அன்புக் காட்டத் தெரிவதில்லை. சிலருக்கு அது காட்டப்படுவதே தெரிவதில்லை. பலருக்கு அன்பு காட்டப்படுவது புரிவதே இல்லை. அன்பிருந்தால் இந்த உலகில் யாருமே அநாதையில்லை! இயேசுவின் அன்பு கறையில்லாதது; கரிசனையுடையது; கனிவுமிக்கது. முடிவுறா அவரது பேரன்பில் நிலைத்திருப்போம்; அந்த அன்பை வாழ்ந்து காட்டுவோம்!

Comment