No icon

ஞாயிறு – 12.03.2023

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 17:3-7, உரோ 5:1-2,5-8, யோவா 4:5-42

குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!

ஒரு வாளியில் நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நான்கு லிட்டர் தண்ணீருக்குள் நீங்கள் அன்றாடம் காஃபிக்கு சுகர் கலக்கும் சிறிய கரண்டியை எடுத்து, அக்கரண்டியால் ஒரு கரண்டி தண்ணீரை எடுங்கள். இப்போது இந்தக் கரண்டியில் உள்ள தண்ணீரை உங்கள் ஆள்காட்டி விரலால் தொட்டு ஒரு சொட்டு தண்ணீரை எடுங்கள்.

நம்முடைய பூமியில் உள்ள எல்லா தண்ணீர் வளங்களும் நான்கு லிட்டர் தண்ணீர் போன்றவை. இவற்றில் ஒரு கரண்டி தவிர மற்றெல்லா தண்ணீரும் பயன்படுத்த முடியாதவாறு கடல்நீராக இருக்கின்றது. அந்த ஒரு கரண்டித் தண்ணீரில் ஒரு சொட்டு தவிர, மற்ற தண்ணீர் முழுவதும் பனிப்பாறைகளாக பூமியின் இரு துருவங்களிலும், மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. ஆள்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைத் துளி தண்ணீர்தான் நீங்களும், நானும் பயன்படுத்துவதற்கு இந்த பூமிப் பந்து வழங்கும் தண்ணீர்.

இந்த ஒற்றைத் துளித் தண்ணீரை பச்சை நீர், நீல நீர், சாம்பல் நீர் என மூன்றாகப் பிரிக்கலாம். பச்சை நீர் என்பது, நாம் சுவாசிக்கும் காற்றில், விழும் பனித்திவலைகளில், நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீர். நீல நீர் என்பது ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருக்கும் தண்ணீர். சாம்பல் நீர் என்பது, நம்முடைய வீட்டின், தொழிற்சாலையின் கழிவாக வெளியேறும் தண்ணீர். இந்த பூமிப்பந்து உருவானபோது, தண்ணீர் எந்த அளவு இருந்ததோ, அதே அளவு தண்ணீர்தான் இன்றும் பூமியில் இருக்கிறது. தண்ணீர் சுழன்றுகொண்டே இருக்கின்றது.

நம்முடைய தமிழர் பண்பாடு நீர்ப் பண்பாடு. மேற்கத்திய அல்லது ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. தட்பவெப்ப அடிப்படையில் நாம் அதிகமாக வெயில் அடிக்கும் பகுதியில் இருக்கிறோம். வெயிலில் வாடுபவர்களுக்கு தண்ணீர்தான் அவசியம். ஆகையால்தான், நம்முடைய சைவ வழிபாட்டில் தெய்வங்களுக்கு நீராட்டுகிறோம். பூப்பெய்த பெண்ணுக்கு நீராட்டுகிறோம். அடிக்கடி நம்முடைய இல்லங்களைத் தண்ணீர்விட்டுக் கழுவுகிறோம். மேலும், நீர்ப்பண்பாட்டில் நீர் தெய்வமாகக் கருதப்பட்டது. ஆகையால்தான், 1900 ஆம் ஆண்டுகளில், காலரா போன்ற தண்ணீர் நோய்கள் வந்தபோது, மக்கள் தண்ணீரைச் சுடவைக்க அஞ்சினர். தெய்வத்தை நெருப்பால் சுடுவதைவிட, காலராவால் மடிவது மேல் என்று சொல்லி, உயிர்விட்ட மக்களைப் பற்றிகாவல் கோட்டம்என்ற நூலில் பதிவுசெய்கிறார் திரு. சு. வெங்கடேசன். ஆனால், ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. ஆகையால்தான், தெய்வங்களுக்கு அவர்கள் நெருப்பு காட்டுகின்றனர், ஆரத்தி எடுக்கின்றனர், ஹோமம் குண்டம் வளர்க்கிறார்கள். அவர்கள் குளிர்நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தண்ணீர் எதிரி. இன்று, இவர்கள் தண்ணீரை மட்டுமல்ல; தண்ணீர்ப் பண்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கின்றனர்.

மூன்றாம் உலகப் போர் என ஒன்று நடந்தால், அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என்று அரசியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் அரசியல்தான் இன்று எங்கும் நடக்கிறது.

மேலும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் தண்ணீர் மறைநீராக இருக்கிறது. ஒரு முட்டையில் 20 லிட்டர் மறைநீரும், ஒரு கிலோ அரிசியில் 5000 லிட்டர் மறைநீரும், நாம் அணியும் ஒரு ஜீன்ஸ் பேண்ட்டில் ஏறக்குறைய 10000 லிட்டர் மறைநீரும் இருக்கிறது. அதாவது, இவை என் கைக்கு வர இவ்வளவு தண்ணீர் செலவழிக்கப்பட வேண்டும். இன்று மேற்கத்திய நாடுகள், கீழைத்தேய நாடுகளின் தண்ணீர் ஆதாரத்தை தங்களுடைய மூலதனமாகக் கொண்டு வாழ முற்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 4:5-42), சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்த இயேசு, பயணத்தால் களைப்புற்றிருந்து கிணற்று ஓரமாய்  அமர, அங்கு வந்த சமாரிய இளவல் ஒருத்தியிடம், “குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்என்று கேட்டார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 17:3-7), தாகத்தால் பாலைநிலத்தில் அலைக்கழிக்கப்படுகின்ற இஸ்ரயேல் மக்கள், மோசேயிடமும் அவர் வழியாக ஆண்டவரிடமும், ‘எங்களைத் தண்ணீர் இல்லாமல் சாகடிக்கவா எங்களை அழைத்து வந்தீர்?’ என முணுமுணுக்கின்றனர்.

நம் வாழ்வின் மையமாக இருக்கும் தண்ணீர் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையமாகவும் இருக்கிறது.

இரண்டு வாரங்களாக யூட்யூபில் அழகான விளம்பரம் ஒன்று வருகிறது. ‘எங்க ஊருக்கு நடுவுல ஒருநாள் ஒருத்தர் ஷவர் வைத்த பாத்ரூம் கட்டினார்என்று தொடங்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அந்த விளம்பர இறுதியில், ‘நகரத்தில் ஒரு நபர் ஒரு நேரம் குளிக்கப் பயன்படுத்தும் ஷவர் தண்ணீரில் ஒரு கிராமம் முழுவதும் ஒருநாள் தண்ணீர் பருகும்என்ற வாசகம் தண்ணீரின் அருமையை, அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் இரண்டு கதைகளைப் பார்க்கிறோம்.

முதல் கதையில், இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து, சீனாய் மலை நோக்கிச் செல்லும் பாலைநிலத்தில் நிற்கின்றனர். அங்கு தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்தான் அவர்களுடைய கடவுள் செங்கடலை இரண்டாகப் பிளந்து, கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்து, பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். ஆனால், தாகம் வந்தால் தன்னைப் படைத்தவரையே கேள்விக்குள்ளாக்குகிறது மானுடம். அதுதான் இங்கேயும் நடக்கிறது. ‘நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?’ எனக் கேட்கின்றனர். இவர்களின் கேள்வி மேலோட்டமாக தண்ணீருக்கான தேடலாக இருந்தாலும், இவர்களின் ஆழ்மனதில், ‘நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?’ என்ற கேள்வியே நிரம்பி நிற்கிறது. ‘ஆண்டவர் நம்மோடு இருந்தால் நமக்குத் தாகம் எடுக்காதே. அப்படி தாகம் எடுத்தாலும், அவர் நமக்குத் தண்ணீர் தருவாரேஎன்ற எண்ணத்தில்தான் ஆண்டவரின் இருப்பைச் சந்தேகிக்கின்றனர் மக்கள்.

இரண்டாவது கதையில், இயேசு சமாரிய இளவல் ஒருவரிடம், ‘குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்எனக் கேட்கின்றார். முதலில் இவள் ஒரு பெண். இயேசுவின் சமகாலத்தில் இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட பாலினம் பெண் இனம். இவள் ஒரு சமாரியப் பெண். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும், கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732 இல், அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள், அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத இரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும், சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல, சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர். இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால், இயேசு அதையும் மீறி, சமாரியப் பெண்ணிடம்தண்ணீர்கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. இவள்ஒரு மாதிரியான பெண்.’ பெண்கள் காலை அல்லது மாலையில்தான் நீர் எடுக்க கிணற்றுக்கு வருவர். இந்தப் பெண் நண்பகலில் வருகின்றார். ‘யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாதுஎன்பதற்காகவா? அல்லது ஊர் வாயில் விழக்கூடாது என்பதற்காகவா? அல்லது மற்ற பெண்களும் அவரை ஒதுக்கிவிட்டார்களா? இந்தப் பெண்ணின் அறநெறி பற்றி நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. ‘இவர் ஐந்து கணவரைக் கொண்டிருந்தார்என்பதிலிருந்து இவர் அறநெறி பிறழ்வில் இருந்தவர் என நாம் முடிவுசெய்யக்கூடாது. ஏனெனில், ‘லெவிரேட் திருமணம்என்னும்கொழுந்தன் திருமண முறையில்இவர் திருமணம் செய்திருக்கலாம். இருந்தாலும், இவரின் நண்பகல் வருகை நமக்கு நெருடலாக இருக்கிறது.

ஆக, பிறப்பாலும், பின்புலத்தாலும், பிறழ்வாலும் காலியான குடமாக தண்ணீர் எடுக்க வருகின்றார் இவர். இயேசுவுக்கு இந்தப் பெண்ணின் பிறப்பும், பின்புலமும், பிறழ்வும் கண்களுக்குத் தெரியவில்லை. அவரின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த காலிக்குடம் மட்டும்தான். ‘குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்!’ என்கிறார் இயேசு. ஏற்கெனவே கிணற்றருகில் இருப்பவர் இயேசு. ஆனால், இந்தப் பெண்ணோ இப்போதுதான் வருகின்றார். முறைப்படி பெண்தான் இயேசுவிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும் அல்லது இந்தப் பெண் தண்ணீர் இறைப்பதை இயேசு பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, ‘கொஞ்சம் வாட்டர் ப்ளீஸ்என்று கேட்டிருக்கலாம்.

தண்ணீர்என்ற வார்த்தையை மையமாக வைத்து உரையாடல் தொடங்கி தொடர்கிறது.

நீர் எப்படி தண்ணீர் கேட்கலாம்?’

தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை

நான் தரும் தண்ணீர்

தாகம் எடுக்காது

அந்த தண்ணீரை எனக்குத் தாரும்

என தண்ணீரே உரையாடலின் முக்கிய வார்த்தையாக இருக்கிறது.

வெகு சில நிமிடங்களே தாகம் தீர்க்கும் மிகச் சாதாரண தண்ணீரை எடுக்கச் சென்ற இளவலிடம், இயேசு இறையியல் பேச ஆரம்பிக்கின்றார். இதுதான் கடவுளின் பண்பு. நாம் ஒரு தேவை என அவரிடம் சென்றால், அந்த தேவையைக் கடந்து, அடுத்தடுத்த நிலைக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கின்றார். ‘உனக்கு ஐந்து கணவர்கள் உண்டுஎன இயேசு சொல்வதைஉனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டுஎனவும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில், இயேசுவின் காலத்துச் சமாரியர்கள் ஐந்து கடவுளர்களை வழிபட்டனர் (காண். 2 அரசர்கள் 17:24). அத்தோடு விடவில்லை இயேசு. ‘இந்த மலையிலும் அல்ல; அந்த மலையிலும் அல்ல; கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்பிற்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்எனச் சொல்கிறார் இயேசு. ‘நீர் இறைவாக்கினர் என நான் கண்டுகொண்டேன்என அறிக்கையிட்ட சமாரியப்பெண்ணிடம், ‘நானே அவர் - நானே கிறிஸ்துஎன தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு.

நிக்கதேம் என்ற யூத ஆணுக்கு இரவில் கிடைக்காத இந்த வெளிப்பாடு, பெயரில்லாத இந்த சமாரியப் பெண்ணுக்கு நண்பகலில் கிடைக்கிறது. இதுவும் கடவுளின் செயல்பாடே.

இறைவனின் அருள்நிலையைத் தாங்கமுடியாத அந்த கண்ணீர் குடம் தான் கொண்டுவந்த தண்ணீர் குடத்தை அப்படியே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறது. இந்த இளவல் யாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள நினைத்தாளோ, அவர்களை நோக்கி ஓடுகிறாள். அதாவது, ‘என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார்என்ற உறுதி வந்தவுடன், ‘என்னை ஏற்றுக்கொள்ளாமல் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலையில்லைஎன அவர்களை நோக்கி ஓடுகின்றாள் இளவல்.

இதற்கிடையில் உணவு வாங்க ஊருக்குள் சென்ற சீடர்கள் திரும்பி வருகின்றார்கள். தான் இதுவரை பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு, சம்பந்தமேயில்லாத ஒரு டாபிக்கை எடுத்துப் பேசிகின்றார் இயேசு. ‘அறுவடை இருக்கு, அரிவாள் இருக்கு, கதிர்கள் முற்றி இருக்கு, வேலைக்காரங்க சம்பளம் வாங்குறாங்கஎன்ற இயேசுவின் பேச்சு நகைச்சுவையைத் தருகின்றது.

ஊருக்குள் சென்ற இளவல், ‘நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?’ என மக்களுக்கு அறிவிக்கின்றார். ‘வந்து பாருங்கள்என்ற வார்த்தையை இயேசு தன் முதற்சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலிடம் சொல்லும் வார்த்தையும் இதுவே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ‘இவர்தான் மெசியாஎன உறுதியாக அறிவிக்காமல், ‘இவராக இருப்பாரோ!’ என தயக்கம் காட்டுகிறார் இளவல். இறையனுபவத்தில் தயக்கம் மிக அவசியம். சில நேரங்களில், ‘இதுதான் இறைவன். இதுதான் இறையனுபவம்என கடவுளுக்கு செக்ரட்டரி மாதிரி அவரை முற்றிலும் அறிந்தவர்போல, நாம் பேசுகிறோம். பல மதங்கள் தாலாட்டும் நம் இந்திய மரபில் இந்த தயக்கம் இன்னும் அதிகம் அவசியமாகிறது. இல்லையென்றால், ‘என் கடவுள்தான் பெரியவர்என நாம் அடுத்தவரை தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுவோம்.

இளவலின் பேச்சைக் கேட்டு, சமாரிய நகரத்தார் அனைவரும் இயேசுவிடம் வருகின்றனர். அந்த மக்களின் தாராள உள்ளத்தையும் நாம் பார்க்க வேண்டும்.’யார் சொன்னது?’ என்பது முக்கியமல்ல; ‘என்ன சொன்னாள்?’ என்பதுதான் முக்கியம் என இயேசுவை நோக்கி புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் தங்குமாறு இயேசுவிடம் கேட்கின்றனர். தாங்கள் இறையனுபவம் பெற்றவர்களாக, ‘இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்என அறிந்துகொண்டோம் என நம்பிக்கை அறிக்கை செய்கின்றனர்.

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். குருக்களின் மறையுரை, வழிபாடு, ஞாயிறு மறைப்போதனை, வகுப்புகள் என நிறைய வழியில் நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், அந்த அறிவு முழுமையானது அல்ல; அனுபவம் வழியாக இயேசுவை அறிய புறப்பட வேண்டும்.

இறைவாக்கினர்,’ ‘கிறிஸ்து,’ ‘மீட்பர்என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களும், நற்செய்தி வாசகத்தில் சமாரியப் பெண்ணும், அவருடைய ஊராரும் தண்ணீர் கேட்பவர்களாக மாறுகின்றனர். இவர்களின் மற்றும் நமது தாகத்தையும் தீர்ப்பவர் கடவுள் ஒருவரே. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:1-2,5-8), தூய ஆவியின் வழியாய் கடவுளின் அன்பு நம்மேல் பொழியப்பட்டுள்ளது என்கிறார் பவுல்.

எனக்கு தாகமாய் இருக்கிறதுஎன்பதை இயேசு இங்கே மறைமுகமாகவும், சிலுவையில் நேரிடையாகவும் (காண். யோவா 19:28) சொல்கிறார் இயேசு. இன்று நாமும் தாகமாய் இருக்கிறோம் - நேரிடையாக, மறைமுகமாக. என் தாகம் தணிக்க நான் சில நேரங்களில் கானல் நீரை நோக்கிச் சொல்கிறேன். ஆனால், கானல்நீர் ஒருபோதும் தாகம் தணிக்காது. சில நேரங்களில் அழிவைத் தரும் கசப்பு நீரையும் நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்வின் ஊற்றாம் இறைவனை அருகில் வைத்துக்கொண்டு, சாவின் சாக்கடை நீரை நான் ஏன் குடிக்க வேண்டும்? வாழ்வின் நீரைப் பெற்ற நான் என்னுடைய காலிக்குடத்தை அப்படியே போட்டுவிட்டு, என் ஊரை நோக்கிப் புறப்பட வேண்டும்.

தண்ணீர் எடுக்கச் சென்றவள் வாழ்வின் ஊற்றைக் கண்டுகொள்கிறாள். தண்ணீர் கேட்டு முணுமுணுத்தவர்கள் இறைவனின் இருப்பை உறுதிசெய்துகொள்கின்றனர்.

குடிக்க தண்ணீர் கொடு!’ என்ற இயேசுவின் வேண்டுதலில் தண்ணீர் எதற்காக என்ற தெளிவு இருக்கிறது. தெளிவு இருக்கும் இடத்தில் தண்ணீர் வீணாவதில்லை. இதுவே என்னுடைய இறைவேண்டலாக இருந்தால், நான் ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் (காண். திபா 95).

Comment