No icon

ஓலக்கோடு ஜான்

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

திருத்தந்தைக்கு தஞ்சாவூர்த் தட்டு

கோட்டாறு மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு தாமஸ் ரோச் ஆஞ்ஞிசுவாமி ஆண்டகை 26.01.1971 இல் மறைசாட்சியை குறித்த ஒரு செபத்தை வழங்கினார்.  09.01.1985 இல் வருகைதந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுக்கு மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர்த் தட்டு ஒன்றினை மேதகு ஆயர். ஆரோக்கியசாமி அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

இவ்வாறு புனிதர் பட்டத்திற்கான சிறு சிறு முயற்சிகள் நடந்திருந்தாலும், முறையான, அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கோட்டாறு மறைமாவட்டப் பொதுநிலையினர் மூவர் இதற்காக உழைக்க முன்வந்தனர். அவர்கள்

1. திரு. அமலகிரி பி. அந்தோணிமுத்து. வரலாற்று ஆசிரியர், புனித அல்போன்சாவின் புனிதர் பட்டக்குழுவில் முன்னாள் உறுப்பினர், புலவர் தொம்மன் திருமுத்துவின் கொள்ளுப்பேரன்.

2. திரு. பி. ஜெ. தாஸ். திருவனந்தபுரம் (ஆகாச வாணி) வானொலி நிலைய முன்னாள் துணை இயக்குநர்.

3. திரு. ஆன்றனி தம்புரான், தமிழ் வித்வான்.

இவர்கள் பொதுநிலையினராக இருந்து மறைச்சாட்சியாக மரணம் அடைந்த தேவசகாயத்தின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டனர்.

முதல் முயற்சியாக அவர்கள் நாகர்கோவில் கத்தோலிக்க வளர்ச்சி சங்க கூட்டம் 23.10.1984 அன்று நடத்தினர்.

மாலை 3 மணிக்கு அசிசி வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் “வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் வழங்க முயற்சி செய்தல்” என்ற தலைப்பினை ஆய்வுப் பொருளாக வைத்தனர். பின் இதுபற்றிய கூட்டங்கள் வாரந்தோறும் தொடர்ந்தன. இதில் நட்டாலம் ஊரில் இவருக்கு நினைவாலயம் அமைக்க உழைத்துக் கொண்டிருந்த திரு. அமிர்தப்பன் ஆசிரியர், திரு. செல்வராஜ், திரு. அம்புறோஸ் மற்றும் நாஞ்சில் பதிப்பக அதிபர் திரு. என்.டி. ஜோசப் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். (இதில் தற்போது திரு. செல்வராஜ் ஆசிரியர், திரு. அம்புறோஸ் ஆகியோர் மட்டுமே உள்ளனர்).

மேதகு ஆயர். ஆரோக்கியசாமி தலைமையில் ஆயர் இல்லத்தில் 28.11.1984 இல் நடைபெற்ற கூட்டத்தில் அன்று குருமட அதிபராக இருந்த அருள்தந்தை லியோன் அ. தர்மராஜ் இப்புனிதர் பட்டக் குழுவுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். அத்துடன் ஆர்வமுள்ள 8 அருள்தந்தையர்களும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சுவாமிதாஸ் உள்பட 11 பொதுநிலையினரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து குருகுல முதல்வராகப் பணியாற்றிய அருள்பணி. சூசைமரியான் இதில் தீவிரக் கவனம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து அருள்பணி. அ. செல்வராஜ் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். இவர்கள் மறைச்சாட்சி தேவசகாயம் பற்றிய ஆவணங்கள் சேகரிப்பதிலும் திருத்தலங்களைச் சந்திப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் மறைச்சாட்சியின் வாழ்வு, மனமாற்றம், திருமுழுக்கு, கொடுமைப்படுத்தப்பட்டதற்கான காரணங்கள், மரணம், அடக்கம் பற்றிய உண்மைகளை முறையே அருள்தந்தை லியோன் அ. தர்மராஜ் அவர்களிடம் சமர்ப்பித்தனர். இக்காலகட்டத்தில் மறைச்சாட்சி பற்றி 5 மொழிகளில் அதிகப் புத்தகங்கள் வெளியிட்டு பரப்புரைப்பணி செய்தவர் நாகர்கோவில் நாஞ்சில் அச்சக உரிமையாளர் திரு. என். டி. ஜோசப் ஆவார். முதன் முதலாக 14.01.1985 இல் கோட்டாறு மறைமாவட்டத்தில் தேவசகாயம் தினம் கொண்டாடப்பட்டது. இதற்குத் தலைமையேற்றவர் அன்றைய மறைமாவட்டப் பரிபாலகர் பேரருள்பணி. சூசைமரியான் ஆவார். 1986 ஆம் வருடம் மே திங்கள் 16 ஆம் நாள் உரோமை சென்றிருந்த கோட்டாறு ஆயர் வேதசாட்சியின் வரலாற்றை திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களிடம் சமர்ப்பித்து அருளாளர் திருப்பணிக்குரிய திருப்பேராய கர்தினால் ஆண்டகையின் ஆசீரும் அனுமதியும் பெற்று வந்தார்.

முதல் மறைமாவட்ட நீதிமன்றம்

1993 மார்ச் 2 முதல் 4 ஆம் தேதி வரை தமிழக ஆயர் பேரவையின் அமர்வு கோட்டாறு ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது தேவசகாயம் மறைசாட்சிக்கு “புனிதர் பட்டம் வழங்க நடபடிகள்” ஆரம்பிக்கும்படி ஒரு விண்ணப்ப வரலாறு எழுதி தமிழகத்திலுள்ள அனைத்து ஆயர்களுக்கும் திரு. பி.ஜே. தாஸ் அவர்களும், திரு. அமலகிரி அந்தோணிமுத்து அவர்களும் கொடுத்தனர். இதற்கான தீவிர பரப்புரைகளும் மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் கோட்டாறு ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களும், மறைமாவட்டக் குருக்களும் தேவசகாயம் மறைசாட்சியின் வரலாறு ஆவணங்களை தமிழக ஆயர்களுக்கு விளக்கினர். மறைசாட்சியின் விசுவாச வரலாற்றுச் செய்தியைப் புரிந்து கொண்ட ஆயர் பேரவையினர் ஏகமனதாக தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க நடவடிக்கையைத் தொடங்கும்படி கோட்டாறு ஆயரை கேட்டுக் கொண்டனர். இச்செய்தியை கோட்டாறு புனித சவேரியார் பேராலய 400 வது ஆண்டு நிறைவு விழாவில் ஆயர் லியோன் தர்மராஜ் அவர்கள் இறைமக்களுக்கு அறிவித்தார். அதன்படி 8.12.1993 ஆம் நாள் 2164/93 எண் கொண்ட கடிதம் மூலம் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கிடைக்க மறைமாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. முதல் பாஸ்ட்டுலேட்டராக அருள்திரு எ. கபிரியேல் அவர்கள் நியமிக்கப்பட்டார். அன்றைய ஆரல்வாய்மொழி பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவைக் கன்வீனராகக் கொண்ட ஒரு தேவசகாயம் பிள்ளை வரலாற்று கமிஷன் நியமனம் ஆனது. கோட்டாறு மறைமாவட்ட வட்டாரப் பிரதிநிதிகள் அருள் பணியாளர்கள் மரிய ஜேம்ஸ், ஆர். லாரன்ஸ், எ. கஸ்பர், எஸ். சூசை அந்தோணி, திருவாளர்களான அமலகிரி பி. அந்தோணிமுத்து (தக்கலை), பி.ஜே. தாஸ் (நாகர் கோவில்), எம்.எஸ்.ஜெ. தங்கசாமி (மாங்குழி), பி. புஷ்பராஜ் (தேவசகாயம் பிள்ளை வரலாற்று ஆய்வாளர்), ஜி. அமிர்தப்பன் (நட்டலம்), எஸ். சுவாமிதாஸ் (மாடத்தட்டுவிளை), தேவசகாயம் (ஆரல்வாய்மொழி), என்.டி. ஜோசப் (நாகர்கோவில்) ஆகியோர் அதன் உறுப்பினர்களாக செயல்பட்டனர். மறைசாட்சிக்கு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் புனிதர் பட்டம் கிடைத்துவிடும் என்ற எண்ணம் கோட்டாறு மறைமாவட்ட மக்களிடம் உருவானது. இந்நிலையில் கோட்டாறு ஆயர் தலைமையில் ஒரு டிரிபியுனஸ் என்ற கோட்டாறு தலத்திருச்சபையின் நீதிமன்றம் செயல்முறைக்கு வந்தது. அதில் 1. மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் - (தலைவர்), 2. பேரருள்திரு. குரூஸ் எரோணிமூஸ் -(தலைமை நடுவர்), 3. அருள்திரு. குழந்தைசாமி - (புரமோட்டர் ஃபார் ஜஸ்டிஸ்), 4. அருள்திரு. ஜார்ஜ் பொன்னையா - (ஆவணக்காப்பாளர் மற்றும் செயலர்) ஆகியோர் இடம் பெற்றனர். மறைசாட்சியின் வரலாறு நெறிபடுத்தி உரோம் திருப்பேராயத்திற்கு கோட்டாறு ஆயர் சமர்ப்பிக்க இக்குழு உதவி செய்தது. இக்குழு பல்வேறு ஆவணங்களைச் சேகரித்தது. தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று அருள்தந்தை ரொசாரியோ நற்சீசன் அவர்கள் தகவல்கள் சேகரித்து “மறைசாட்சி தேவசகாயம், ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வரலாறு” என்ற புத்தகத்தை எழுதினார். இந்நூல் ஆயர் மேதகு. லியோன் தர்மராஜ் 08.07.2003 இல் வெளியிட்டார்.

கோட்டாறு மறைமாவட்டத்தில் பணி மேலும் விறுவிறுப்படைந்தது. அச்சமயம் உரோமை புனிதர் பட்டப் பேராயத் தலைவர் கர்தினால் ஜோசப் சரைவா மார்டின்ஸ் அவர்களைச் சந்தித்த கோட்டாறு ஆயர் லியோன் 25-10-2003 இல் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுக்க கேட்டு மனு ஒன்றைக் கொடுத்தார். அடுத்ததாக தமிழக பேராயர்களும், ஆயர்களும் 17 பேர் இணைந்து கையெழுத்திட்டு 10-11-2003 இல் மேலும் ஓர் விண்ணப்பம் சமர்ப்பித்தார்.

அடுத்ததாக உரோமையில் பணியாற்றி வந்த அருள்தந்தை ஜார்ஜ் நெடுங்ஞாட், சே.ச, அவர்களை 14.11.2003 ஆம் நாள் புனிதர் பட்ட பணிகளைக் கவனிக்கும்படி வேண்டுகையாளராக ஆயர் லியோன் தர்மராஜ் அவர்கள் நியமனம் செய்தார்.

(தொடரும்)

Comment