No icon

புனித ஜொவான்னி ஆலயம்

முன்னாள் கார்மேல் துறவு மடத்தில் திருத்தந்தை

ஹங்கேரி உள்ளூர் நேரம் 12.20 மணிக்கு முன்னாள் கார்மேல் துறவு மடத்தில் அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையினை ஆற்றினார். அரசியல் தலைவர்களுடனான சந்திப்பை முடித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 3.3 கிமீ காரில் பயணம் செய்து, ஹங்கேரி திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். மதிய உணவினை திருப்பீடத்தூதரகத்தில் உண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சற்று நேரம் இளைப்பாறினார்.

முன்னாள் கார்மேல் துறவு மடமாக கருதப்படும் இவ்விடம் ஹங்கேரிய பிரதமரின் அலுவலகமாகும். 1200 ஆம் ஆண்டுகளின் இறுதியில் உருவாக்கப்பட்டதாக உள்ள இவ்விடத்தின் வரலாறு, பிரான்சிஸ்கன் துறவு சபைக்கு சொந்தமானதாக இருந்தது என்று கூறுகின்றது. இங்கு இருந்த பிரான்சிஸ்கன் சபையின் புனித ஜொவான்னி ஆலயமானது 1541 ஆம் ஆண்டில் துருக்கியப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் இஸ்லாமிய மசூதி ஒன்றும் கட்டப்பட்டது. புடா மீண்டும் கைப்பற்றப்பட்டபோது அம்மசூதியும் அழிக்கப்பட்டது. கார்மேல் துறவு சபை 1736ஆம் ஆண்டில் இங்கு மடாலயத்தைக் கட்டி 1763ஆம் ஆண்டில் அதை புனிதப்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது, பெரும் சேதத்தை சந்தித்த இக்கட்டிடமானது 1978 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. முன்னாள் துறவு இல்லமாக இருந்த இக்கட்டிடம் 2001 ஆம் ஆண்டில் தேசிய நடன அரங்கின் சொத்தாக மாறியது. அதன்பின் மறுசீரமைப்புக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு முதல், பிரதமரின் அலுவலகமாகவும் உள்ளது.

ஹங்கேரி உள்ளூர் நேரம் மாலை 4.40 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.10 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் இருந்து திருத்தந்தை பிரான்சிஸ் புறப்பட்டார். 5.6 கிமீ தூரம் காரில் பயணித்து ஹங்கேரியின் துணைப்பேராலயமான புனித ஸ்தேவான் பேராலயத்தை சென்றடைந்தார். இப்பேராலயத்தில் ஹங்கேரியின் ஆயர்கள் அருள்பணியாளர்கள் ஆண்பெண் துறவறத்தார், திருத்தொண்டர்கள் மற்றும் மேய்ப்புப்பணியாளர்களை சந்தித்து தனது இரண்டாவது உரையினை அவர்களுக்கு ஆற்றினார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் தனது முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தார்.  

Comment