No icon

விடுதலை தரும் கடவுள்

“கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!” (எசா 58:6) என்ற விடுதலைக் கீதத்தை எசாயா ஆழ்ந்த பற்றுறுதியோடு முழக்கமிடுகிறார். அடிமைத்தளையில் சிக்குண்டு, சொல்லவியலாத் துன்பங்களை அனுபவித்த இஸ்ரயேல் மக்களை விடுவிப்பவராகக் கடவுளை விடுதலைப் பயண நூல் காட்டுகின்றது (விப 2:2). கடவுளை விடுதலை அளிக்கும் கடவுளாகப் போற்றிப் புகழ்ந்தனர் இஸ்ரேயல் மக்கள் (விப 15). இஸ்ரேயல் மக்கள் கடவுளைப் படைப்பின் கடவுளாகப் பார்ப்பதற்கு முன்னமே விடுதலை அளிக்கும் கடவுளாக அனுபவித்தார்கள். ஆண்டவரின் விடுதலை வெறும் நீதியை மட்டுமல்ல, அவரது ஆழ்ந்த அன்பையும் காட்டுகின்றது. அவரது அன்பின் ஆற்றலே இஸ்ரேயல் மக்களை உருவாக்கியது.

இறைவன் இஸ்ரேயல் மக்களுக்கு அளிக்கும் விடுதலை ஒரு நாளில் நடந்ததோ அல்லது ஒரு மந்திர, தந்திரத்தினாலோ நடந்ததல்ல; மாறாக, இஸ்ரேயல் மக்களை எரியூட்டும் பாலைவனம் வழியாக நடத்தி வந்தார். அங்கு அவர்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள், மூடத்தனங்கள், கீழ்ப்படியாமை, தண்டனைகள் வழியாகப் புதிய விடுதலை அனுபவத்தைப் பெறுகின்றனர். விடுதலை என்னும் அனுபவ முதிர்ந்த கனியை ஆண்டவர் அவர்களுக்குப்  பரிசாகத் தருகிறார்.

பாலை நிலத்தில் நடந்த மக்கள் பழைய உணவுக்காக ஏங்கினர், முணு முணுத்துக் கடவுளை எதிர்த்தனர். பழைய அடிமைத்தன வாழ்வின் மோகம் அவர்களைச் சூறையாடியது. எனினும், அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, இறப்பிலிருந்து வாழ்வுக்கு இட்டுச் செல்கிறார் இறைவன். சுதந்திர வாழ்வுக்கு நடத்திச் செல்லும் பயணம் சுலபமானதல்ல; கடவுள் மக்களின் துயர் கண்டு துடிதுடிக்கிறார்.

“என் மக்கள் எகிப்தில் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும், தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்” (விப 3:7-9) என்று இறைவன் கூறுகிறார். இது நம் கண்களில் கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிறது.

மண்ணின் ஈர்ப்பு

மனிதன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன்; மண் அவனைப் பற்றிக் கொண்டுள்ளது. அவன் வாழும் நாள்களில் இதன் அழுத்தமும், ஈர்ப்பும் அவனை விட்டுப் பிரியாது. அது ஆதாமை மட்டும் வீழ்த்திச் சாய்க்கவில்லை; மாறாக, ஒவ்வொரு மனிதனையும் புடமிடுகிறது. ஒவ்வொரு  மனிதனிலும் ஆதாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆதாம் தோட்டத்தில் விடப்பட்டான். இதற்கு மாறாக, இயேசு பாலைவனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்.

பாலையின் இரகசியம்

பாலைநிலம் மணல், முள்செடிகள் நிறைந்தது. அங்கு மனிதர்கள் இல்லை, சத்தம் இல்லை, எங்கும் ஒரே அமைதி. தனிமையும், அச்சமும்தான் மிச்சம். ஆனால், அங்கு நாம் புரியவியலா ஓர் ஈர்ப்பு உண்டு. புரியவியலா ஆழ்ந்த இரகசியம் உண்டு. ஊரில் இருக்கும் உருட்டும், புரட்டும் இல்லாத உண்மைக் குரல் அங்குண்டு. அச்சமிருந்தாலும் ஆண்டவன் குரல் அங்கு ஒலிக்கும். பாலைவனம் மாசற்றது. அது தூய்மையான, கலப்படம் இல்லாத உலகு. கலகலப்பை விட்டுவிட்டு, கலப்படம் இல்லாப் பாலையின் அழைப்பை ஏற்ற மனிதர்கள் உள்ளனர். அங்குச் செல்பவன் புதிய நிலையை, புதுப்பிறப்பை அடைகிறான். புதிய மனிதனாய் வலுப்பெறுகிறான். பாலை பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக, பலப்படுத்துவது.

பாலையின் தந்தையர்கள்

நாற்பது நாள்களுக்குப் பிறகுதான் மோசே இறைவனின் பத்துக் கட்டளைகள் எனும்  உடன்படிக்கைச் சொற்களைப் பெற்றார். நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தைக் கடந்த பின்புதான் இஸ்ரயேல் ஓர் இனமாக உருவாகிறது. அசைக்கவியலா இறையனுபவத்தை அங்குதான் பெறுகிறது. பாலை நிலத்திற்குத் தனிமையாகச் செல்வது இஸ்ரயேல் மக்களுக்குப் புதிதல்ல (விப 24:18; 1அர 19:8). கும்ரான் துறவிகள் பாலையில் வாழ்ந்தார்கள். கத்தோலிக்கப் பாரம்பரியம், முதுபெரும் தந்தையர்கள் இறையனுபவம் தேடி பாலைக்குச் சென்றதைக் கூறுகிறது. இயேசுவும் பாலையில் இழுத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கு யோவானும் பாலை நிலத்தில் வாழ்ந்தவரே. பாலைவனமும், இறையனுபவமும், நாற்பது நாள்களும் யூதப் பாரம்பரியத்தில் புதிதல்ல.

பாலையில் செதுக்கப்படுதல்

பாலையில் வதைக்கப்படுவதும், பசிப் பிணியால் வருந்துவதும், பாம்பு கடித்து மாள்வதும், வெயிலில் வெந்து சோர்வதும், குளிரில் வாடுவதும், இதனால் கடவுளை மறந்து சிலைகளை வழிபடுவதும் மனிதனுக்குக் கொடுக்கப்படும் சோதனைகள். இங்குதான் இறைவன் காட்சி வழங்குகிறார். இங்குதான் மனிதன் செதுக்கப்படுகிறான். நம்பிக்கையில் உறுதிப்படுத்தப்படுகிறான். இங்குதான் அவனது அனுபவம் முதிர்ச்சி பெறுகிறது.

இயேசுவும் இங்குதான் பதப்படுத்தப்படுகிறார்; பக்குவம் கொள்கிறார். சோதனைகளில் இறை சார்ந்த அனுபவம் அவருக்கு ஏற்படுகிறது. மறை பொருளின் விந்தையை அங்குக் காண முடிகிறது (மத் 4:1-11; லூக் 4:1-13).

இயேசுவின் சோதனை

சாத்தான் வந்து இயேசு பெருமானை  மலை உச்சியில் எடுத்துச் செல்வதும், கோபுரத்தின் உச்சியில் நிறுத்துவதும் என்ன பொருளைத் தருகிறது என்பதைச் சற்று ஆய்தல் நல்லது. அதன் பொருள் என்ன? அதன் சிறப்புப் பாடம் என்ன? என்பதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். எனினும், இச்சோதனைகள் குறித்துக் காட்டுவது என்ன என்பதையும், சோதனைகளின் உள்ளிருக்கும் தந்திரம் என்ன என்பதையும் இயேசு கண்டு கொள்கிறார். பசியைப் போக்க, புதுமை செய்யும் ஆற்றலைப் பயன்படுத்த சாத்தான் கூறுகிறான்:  “இஸ்ரேயலின் அரசனாகிய மெசியா சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்” (மாற் 15:32) என்பது போல் இது உள்ளது. இயேசு இறப்பை ஏற்று, தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிகிறார்.

இரண்டாம் சோதனையில், இயேசுவை எல்லாம் வல்ல கதாநாயனாக மாற்ற சாத்தான் விரும்புகிறான். மனித எல்லையைத் தாண்டச் சொல்லி, மாய வித்தை காட்ட இயேசுவை உட்படுத்துகிறான். இயேசு கடவுளைப் போல் ஆக வேண்டும் என்ற பலவீனத்தில், ஆதாமைப் போல் வீழ்ந்துவிடவில்லை; இறைச்சித்தத்தை நிறைவேற்றுவதே தம் உணவு எனக் கொள்கிறார் (யோவா 4:34).

மூன்றாவது சோதனை ஆட்சியை, அதிகாரத்தைப் பிடிப்பது பற்றிக் கூறுகிறது. எல்லாரையும் ஆண்டுகொள்ள வேண்டும்; அகங்காரத்தோடு ஆணையிட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிறது. இயேசுவோ சாத்தானை எதிர்த்து வெற்றி வாகை சூடுகிறார். இயேசு தந்தைக்குக் கீழ்ப்படிகிறார். அவருக்கு நேர்மையைக் காட்டினார்; உண்மையுள்ளவராய்ச் செயல்பட்டார்.

இயேசு கடவுளின் பராமரிப்பை நம்பினார்

மேலும் இயேசு தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்ளவில்லை (மத் 4:1-4); தம்மை முன்னிலைப் படுத்தவில்லை (மத் 4:5-7); தமக்கு வெற்றிகளைத் தேடவில்லை (மத் 8-10).

அவரது இதயம் கடவுளுக்காக ஏங்கியது. கடவுளது வார்த்தையை வாழ்வளிக்கும் வார்த்தையாகக் கொண்டார். அவர் ஆவியால் நிறைந்திருந்தார். இயேசு பொய்களின் தந்தையான  சாத்தானின் பேச்சைக் கேட்கவில்லை (யோவா 8:44); ஆனால், தமது தந்தையின் குரலுக்குச் செவிமடுத்தார். செபம், தவம், தர்மம் இவைகள் அவரது தாரக மந்திரங்கள் ஆயின. திருவிவிலியச் சொற்கள் விதையாகின, விந்தையாகின. இயேசு  கடவுளின் பராமரிப்பை நம்பினார்.

மனித நிலைமை

நமது நிலைமை அப்படியல்ல; கடவுள் நம்மீது மனமிரங்கி நம்மை மீட்க வருகிறார். பாலைவனப் பயணத்தில் இறைவனின் சமூகம் இஸ்ரயேலைச் சூழ்ந்த போதிலும், பார்வோனின் ஆட்சியின் அழுத்தங்கள் மக்களை விடவில்லை. பாலை நிலம் நம்மைச் சோர்வுறச் செய்கிறது. அந்தச் சோர்வு தொடர்கிறது. நம்மிடமுள்ள வளர்ச்சி நம்மிடமிருந்து திருடப்படுகிறது. நமது விடுதலை ஏக்கம் மழுங்கிப் போகிறது. விடுதலையை எட்டிப் பிடித்தாலும், அடிமைத்தனம் விலகவில்லை. நமது சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். பார்வோன் அரசனில் நமக்குண்டான அடிமைத்தனமும், அதனால் நமது மாண்பு சிதைக்கப்படுவதும் மாறவில்லை. நமது இலட்சியக் கனவுகள் சிதைக்கப்படுகின்றன.

குறைபாடுள்ள நமது நம்பிக்கை

நமது கனவுகளையும், அமைதியாக ஒலிக்கும் குரல்களையும் முடக்கும் சக்திகள் உள்ளன. அவற்றை முறியடிப்போம். நம்பிக்கைக் குறையும் போது அது நம்மை மறுபடியும் அடிமைத்தனத்திற்கு இழுத்துச் செல்கிறது. சமத்துவத்தின், சகோதரத்துவத்தின் நுழைவாயிலில் இருந்தாலும், நாம் இரவில் தடுமாறுவோரைப் போலிருக்கிறோம். எனினும், பாலையில் விடுதலை வீறுகொள்கிறது. நாம் எடுக்கும் முடிவுகளால் அடிமைத்தளையில் சிக்குவது தடைபடுகிறது. ஏனெனில், கடவுள் நம்மோடு உள்ளார். பாலையில் புதிய வழிகள், புதிய வரைமுறைகள், புதிய பாதைகள் தோன்றுகின்றன.

பாலை நிலப் பயணம் போராட்டம் நிறைந்தது. நமது பயணத்தின் சோதனைகள் கொஞ்ச நஞ்ச மல்ல. நமக்கு நாமே ஏற்படுத்தும் சிலைகள் ‘நீர் என் அன்பார்ந்த மகன்’ (மாற்.1:11) என்ற நம்பிக்கைக் குரலை ஏற்பதில்லை. இந்தச் சிலைகள் நம் மனத் தில் எழும்பும் தீய எண்ணங்கள்தான், காம உணர்ச்சிகள், பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், ஆணவம், நாமே தலைவர், நாமே எல்லாம், நாமே உச்சம், நாமே மையம் என்ற இறுமாப்பின் குரல்கள். எனினும், பலர் எளிமை, கனிவு, திறந்த மனது மேலும் அன்பினால் இவற்றை மேற்கொள்கின்றனர். இவர்கள் உலகை மீட்கவும், தாங்கிப் பிடிக்கவும் உண்மையான ஆற்றல் கொண்டவர்கள்.

தவக்காலக் கருவிகள்

தவக்காலத்தில் நமக்குக் கொடுக்கப்படும் பலமான கருவிகள் செபம், தவம், தர்மம். நாம் காயப்பட்டோர், வறியோரைச் சந்தித்து உதவ வேண்டும். செபம் நமது மனத்தைத் திறக்க, நம்மை இழக்க, நம்மில் உள்ள சிலைகளை உடைக்க உதவ வேண்டும். உண்மையான அன்புறவால் தூண்டப்பெற்ற நாம், எல்லாரையும் சகோதர சகோதரிகளாக, நம் நண்பர்களாக, உடனுழைப்பாளிகளாகக் காண வேண்டும். இதுவே கடவுளின் கனவு! ஒன்றாக வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நடைபயில வேண்டும். இதற்காக மனம் மாற வேண்டும். மனிதரில், படைப்பில் நமது நம்பிக்கை ஊடுருவிப் பாய வேண்டும். இங்கு உதிப்பது மனமாற்றம். இதனால் நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு கைகோர்த்துச் செல்ல ஏதுவாகின்றது. கூட்டொருங்கியக்கத் திரு அவையாக நாம் மலர வேண்டும்.

தவக்காலம் சோதனைகளோடு போராடும் காலம் (யாக் 1:13,14). நாம் கடவுளின் புதல்வர்கள் என்பதைச் சோதிக்கும் காலம். மனித இதயம், ஒளிக்கும்-இருளுக்கும், அன்புக்கும்- தன்னலத்துக்கும், கடவுளுக்கும்-சாத்தானுக்கும் இடையே நடக்கும் போர்க்களமாகிறது. தவக்காலம் பாலைவன அனுபவத்தின் வழியாக நமது வாழ்வைப் பரிசீலனை செய்து, உண்மை மனமாற்றத்தை உருவாக்கும் காலம்.

சோதனை இல்லாமல் சாதனை இல்லை. சோதனை இல்லாக் கிறிஸ்தவ வாழ்வைச் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் திடம் கொள்வோம், பலம் கொள்வோம். ஏனெனில், கடவுள் நம்மோடு உள்ளார். 

அன்புடன் ஆசீரளிக்கும்,

மேதகு முனைவர் அ. ஸ்டீபன் D.D., தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்

Comment