No icon

ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர்

புல்டோசர் அரசியல்

இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் கோடாரி வைத்தாயிற்று. அண்மைக்காலமாக, இந்திய அரசியலில், ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியைவிட, நாகரீகமிக்க சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்விதான் மிஞ்சியிருக்கிறது. காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சமூகத்தை நோக்கி, இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது; நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாட்டுக்கறி அரசியல், சி.ஏ.ஏ, ஹிஜாப், ஒலிபெருக்கி என்று அடுத்தடுத்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சனைகளைக் கிளப்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மதக்கலவரம் வட இந்திய மாநிலங்களில் தலைதூக்கி வருகிறது. ஐ.நா கவலைப்பட்டால் எனக்கென்ன? அமெரிக்கா அறிவுரை சொன்னால் எனக்கென்ன? சீனாவும் தாலிபானும் ஆலோசனை சொன்னால் எனக்கென்ன? என்று கண்களைக் கட்டிக்கொண்டு மகாபாரத திருதாராஷ்டிரர் வழியில் ஒன்றியத்திலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பாஜகவினர் ஆட்சி செய்கின்றனர். யாருடைய உபதேசமும் எங்களுக்கு வேண்டாம்? பரதேசம் மட்டுமே போதும் என்று பாரதத்தைக் கட்டமைக்க முற்படுகின்றனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு என்று மக்களைத் துன்புறுத்தும் எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்கவிடாமல், மதத்தைப் பற்றி மட்டுமே மாட்டு மூளையுடன் சதா சிந்தித்து செயல்படுகின்றனர். சனாதனத்தைப் பற்றியெல்லாம் ஓர் ஆளுநரே பாடம் எடுக்கும் அளவுக்கு இந்திய ஜனநாயகம் தளர்ந்துள்ளது. இப்போது தேசமெங்கும் புல்டோசர் பாபாக்களும், மாமாக்களும், பையாக்களும் பெருகி வருகின்றனர். நாம் வாழ்வது நாட்டிலா? இல்லை காட்டிலா? என்ற ஐயம் எழுகிறது.

ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்து முடிந்த இராமநவமி விழாவின்போது, குஜராத், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் காவிக்கொடி அணிவகுப்பு நடத்தி, சென்ற வழியெங்கும் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, வன்முறையை விதைத்தனர். அடுத்து வந்த அனுமன் ஜெயந்தி அன்றும் ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் ஏற்படுத்தினர். நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், சிறையில் அடைக்கப்பட்டனர். எரிகின்ற தீயில் எத்தனால் ஊத்திய கணக்காக, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, (ஸல்) முகம்மது நபி அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி, வெறுப்புத்தீ வளர்த்தார். இந்த விவகாரம் அடங்குவதற்குள், வட மாநிலங்களில் இதனை எதிர்த்து தெருக்களில் போராடிய முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் அடுத்தடுத்து புல்டோசர்கள் மூலம் குறிவைத்து இடிக்கப்பட்டன. மத்தியப்பிரதேசத்தில் கர்கோனின் காஸ்கஸ்வாடியில் 16 வீடுகள், 29 கடைகள் இடிக்கப்பட்டன. உத்தராகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவார், உதம்சிங் நகர், ஹல்த்வானி ஆகிய இடங்களில் முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.

உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சட்டவிரோதமான கட்டிடங்கள் எங்கு காணப்பட்டாலும் புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் என்று கர்ஜித்தார். ஏப்ரல் 16 ஆம் தேதி டெல்லி ஜஹாங்கீர்புரியில், நியு ஃபிரண்ட்ஸ் காலனி, துவாரகா ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், பாஜக ஆளும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் புல்டோசர்களைப் பயன்படுத்தி முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கியது. மே மாதம் 18 ஆம் தேதியுடன் டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் புல்டோசர் அரசியலைக் கையிலெடுத்தது.

இந்த புல்டோசர் கலாச்சாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தவர் புல்டோசர் பாபா என்கிற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். இவர், ‘சமூக விரோதிகள், ரௌடிகளாகக் கருதப்படும் நபர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து தன்னை புல்டோசர் பாபாவாக சுய நிர்ணயம் செய்துகொண்டார். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, (ஸல்) முகம்மது நபி அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய நாள்முதல் வட இந்தியா கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் நுபுர் ஷர்மா, இந்திய அரசியலை, வலதுசாரி தத்துவத்தை நோக்கி உந்தித் தள்ளியிருக்கிறார். இது மிகப்பெரிய ஆபத்து.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அயோத்தி) உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதுடன் கல்வீச்சும் நடைபெற்றுள்ளன. 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டம் என்னும் உபா பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரயாக்ராஜில் நடந்த வன்முறைக்குக் காரணமானவர் என்று ஜாவத் அகமது கைது செய்யப்பட்டார்.

மே 10 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி, மே 25 ஆம் தேதி இடிக்க உத்தரவுப் பிறப்பித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஷஹரான்பூரில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன. சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான அஃப்ரீன் பாத்திமா;  ஜாவத் அகமது அவர்களின் மகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்தம் வீடு உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

கிரிமினல்கள், மாஃபியாக்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை புல்டோசர்கள் மூலம் தகர்க்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சட்டத்தை தனக்கேற்றாற்போல் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமான புல்டோசர் அரசியல் செய்கிறது. புல்டோசர் பாபா யோகியின் அரசியல் அராஜகத்தை நீதிமன்றமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

புல்டோசர் பாபா யோகி, புல்டோசர் மாமா சௌகான், புல்டோசர் பையா புஷ்கர் சிங் தாமி ஆகியோரின் புல்டோசர் அரசியல் முழுக்க முழுக்க அரசுப் பயங்கரவாதமே தவிர வேறொன்றுமில்லை. மதச் சிறுபான்மையினரை மட்டுமே குறிவைத்து, அவர்களின் வீடுகள், கடைகள், உடைமைகள் அனைத்தையும் தகர்த்து, தரைமட்டமாக்கி, இந்திய ஜனநாயகத்தையும் இந்திய நீதி பரிபாலனமுறையையும் கேலிக்கூத்தாக்குகிறார்கள். அரசுக்கு எதிராகப் போராடினாலே, வன்முறையைத் தூண்டி, புல்டோசரையும் ஜேசிபிக்களையும் முன்னிலைப்படுத்துகின்றனர். இரண்டு கைகளே இல்லாத வாசிம் ஷேக் ஊர்வலத்தை எதிர்த்து கல்லெறிந்தார் என்று குற்றஞ்சாட்டி அவர்தம் வீடும் கடையும் புல்டோசர்களால் தகர்க்கப்பட்டன. வக்கிர மனம் படைத்த அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் வட இந்தியாவில் பெருகி வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலின்போது, இந்திய பிரதமரே, ‘ஆடைகளைக் கொண்டு அடையாளம் காணுங்கள்’ என்று தரங்கெட்ட அரசியல் செய்தார். தெலுங்கானா எம்எல்ஏ ராஜாசிங் என்பவர், தம் முகநூலில் ‘யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வர விரும்பாதவர்களுக்காக ஆயிரக்கணக்கான ஜேசிபிக்கள் முதல்வரால் வாங்கப்பட்டுள்ளன. ஜேசிபிக்கள் மற்றும் புல்டோசர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத்தெரியும் என்று நான் நம்புகிறேன்’ என்று வீடியோ வெளியிட்டார். அந்த அளவுக்கு வெறி அவர்களால் ஊட்டப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் செல்லுமிடமெல்லாம் புல்டோசர் பொம்மைகள் அவருக்குப் பரிசளிக்கப்பட்டன. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகியை ‘புல்டோசர் பாபா’ என்று பகடி செய்தார். யோகியோ, ‘புல்டோசருக்குப் பேசத் தெரியாது. ஆனால், நன்றாக வேலை செய்யும், மார்ச் 10க்குப் பிறகு சமூக விரோதிகளுக்கு எதிராக நகரும்’ என்றார். இப்படி, அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் புல்டோசர்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றன. மோடி மற்றும் அமித்ஷாக்களின் மௌனம் இதற்கு மேன்மேலும் முட்டுக்கொடுக்கிறது.

குற்றவாளிகள் சரணடையாவிட்டால் உத்தரப்பிரதேச காவல்துறையினர் காலக்கெடு விதித்து அவர்களின் வீடுகளுக்கு முன்பாக புல்டோசரோடு காத்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவ்ராஜ் சௌகான், பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட சிலரது சொத்துக்களை புல்டோசர் மூலமாக இடித்து, புல்டோசர் மாமாவாக தன்னை தகுதி உயர்த்தியுள்ளார். பீகாரில் உள்ள பாஜகவினரும் புல்டோசர் மாடலை ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைக்கின்றனர்.

சர்வாதிகார நாட்டில்கூட புல்டோசர் அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இராணுவ எதேச்சதிகாரமிக்க நாடுகளில்கூட இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றியது போதும். உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிய வேண்டும். இல்லையென்றால், ஜமியத் உலாமா  ஐ- ஹிந்த் அமைப்பு தொடுத்த வழக்கையும் முன்னாள் நீதியரசர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசாள்பவர்களே நீதிபதிகளானால் ஜனநாயகம் மரித்துப் போகும். சாமானியனின் கடைசிப் புகலிடமான நீதிமன்றம், எல்லாரும் புகழும் இடமாக என்றும் திகழ வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறையை விதைத்தால் வன்முறையையே அறுவடைசெய்ய நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து நல்லாட்சி புரிந்திட வேண்டும்.

Comment