No icon

ஆசிரியர் பக்கம்

புது வாழ்வு அளிக்கும் உறுப்பு தானம்!

வாழ்வு என்பது ஒரு மாபெரும் கொடை; அதில் ஊரும்- உறவும், நட்பும்-நலமும் அவ்வாழ்வை அணி செய்யத் துணை வரும் பெரும் பேறுகள்! நலன்களால் நிறைந்த இந்த நம் வாழ்க்கைப் பயணம், பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் எனக் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆயினும், ‘ஒருவரின் முடிவு, ஏன் மற்றொருவருக்குத் தொடக்கமாக அமையக்கூடாது?’ என வினாத் தொடுக்கிறது இன்றைய மருத்துவத் துறை.

முடிவுரையில் உங்கள் இமை மூடும்போது

முகவுரையை என் இமையில் எழுதலாமே?’

என்ற கவிஞர் தாராபாரதியின் வரிகள் இங்கே நினைவு கூறத்தக்கது.

பேராற்றல் கொண்ட அறிவியல் யுகத்தில், அதன் வளர்ச்சியால் யாவும் கூடும் என்பதே நம் நம்பிக்கையாகிறது. நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் இதயம், நுரையீரல் பொருத்துதலும், 24 மணி நேரத்திற்குள் கல்லீரலும், 14 நாள்களுக்குள் விழிகளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் கூடும் என்பது அறிவியலின், மருத்துவத் துறையின் பெரும் வெற்றியல்லவா!

விடியல் தேடும் பல விழிகளுக்கு, வாழ்நாள் நீட்டிப்புக்காகப் போராடும் நபர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும் ஆற்றல் கொண்டது ‘உறுப்பு தானம்’. மண்தானம், பொன் தானம், அன்னதானம்... என நீளும் தானங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் இருப்பது உறுப்பு தானம் அல்லவா! இருண்டு போன விழிகளுக்கு மட்டுமல்ல, இருண்டு போன பலருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றுவது இந்த ‘உறுப்பு தானமே.’

ஆகவே, இந்த உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த மத்திய-மாநில அரசுகள் அண்மைக் காலங்களில் பெரும் முனைப்புக் காட்டி வருகின்றன. ‘குருதிக்கொடை’ (இரத்ததானம்) பற்றி ஓரளவு விழிப்புணர்வு பெற்ற நம் மக்கள், இன்று குருதிக் கொடை முகாம்களில், அவசர உதவிக்கு மருத்துவமனைகளில் தாராளமாக முன்வந்து குருதி வழங்குவது பாராட்டத்தக்கது. இத்தகைய விழிப்புணர்வுக்குப் பின்புலத்தில் சமூக ஆர்வலர்கள், மருத்துவத் துறை சார்ந்த அதிகாரிகள், தந்தை ஜெரி சே.ச. போன்ற தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள், சமூக அமைப்புகள், நற்பணி மன்றங்கள், மனிதநேயப் பேரணிகள், அரசியல் கட்சிகள், சமயப் பல்நோக்கு சமூகப் பணி அமைப்புகள்... எனப் பலருடைய உழைப்பும், பெரும் முயற்சியும் இருப்பதை மறந்துவிட முடியாது.

அவ்வாறே, உறுப்பு தானம் பற்றிய புரிதலை இன்று மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இம்முயற்சியில் ‘உறுப்பு தானம்’ எனும் மாபெரும் மனிதநேயச் செயலை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ‘உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்று அண்மையில் வெளியிட்டிருக்கும் செய்தி மிகவும் பாராட்டத்தக்கது; பெரிதும் வரவேற்கத்தக்கது. உயிருடன் இருக்கும்போதே உறுப்பு தானம் செய்வது அல்லது இறப்பிற்குப் பிறகு உறுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள உறுப்பு தான ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் மூளைச்சாவு அடையும் துயர வேளையில், உறுப்புகளை வழங்க மனமுவந்து முன்வரும் குடும்ப உறுப்பினர்கள் போன்றோரின் தன்னலமற்றத் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அரசு முன்னெடுக்கும் இச்செயல் உண்மையிலேயே போற்றத்தக்கது. இத்தகைய மனிதநேயச் செயல்களில் நோயுற்றோர்க்குப் புதுவாழ்வு அளிக்கும் அரும் பணியில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வது நமக்குக் கூடுதல் பெருமையாகவும் உள்ளது.

2022-ஆம் ஆண்டின் உலகப் புள்ளி விவரப்படி, உறுப்பு தானத்தில், உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பது சிறப்புக்குரியது. ஆயினும், இத்துறையில் நாம் எட்ட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இறப்பிற்குப் பின்னர் உறுப்பு தானம் செய்வதாக இந்தியா முழுவதும் சுமார் 4.66 இலட்சம் நபர்கள் பதிவு செய்திருந்தாலும், குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், விழிகள் என உறுப்புத் தானத்திற்காகக் (தேவைக்காகக்) காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது பெரும் கவலையளிக்கிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 3-ஆம் தேதி தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில் உறுப்புதான தினமாகக் கடை பிடிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு இத்தினத்தைச் சற்றே சிறப்பாக, செப்டம்பர் 23-ஆம் நாள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் அருகில் ஹிதேந்திரன் என்ற மாணவர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தபோது, அவரின் உறுப்புகளைத் தானமாக அவரது பெற்றோர் வழங்கி உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வைத் தொடங்கி வைத்ததை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நினைவுகூர்வது பாராட்டத்தக்கதே. இத்தகைய நிகழ்வு நமது வாழ்விலும் ஆழமாகப் பொருள்பட வேண்டுமன்றோ!

உடலின் உயிர்ப்பிலும், மறுவாழ்விலும் நம்பிக்கைக் கொண்ட கிறிஸ்தவம் இன்று அத்தகைய உயிர்ப்பையும், மறுவாழ்வையும் இம்மையிலேயே காண உறுப்பு தானத்தைப் பெரிதும் வலியுறுத்துவதை நாம் அறிவோம்.

மண்ணுக்குக் கண் எதற்கு?

கொடுத்திடுவோம் மனிதர்க்கு

புதைத்து எரித்துச் சிதைப்பதைத் தவிர்த்து

தானமாய்க் கொடுத்திடுவோம்

தரணியில் மீண்டும் வாழ்ந்திடுவோம்’

என்ற வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன. உறுப்பு தானத்தால் பிறரில் மீண்டும் நாம் வாழ்ந்திடுவோம். பெரும் கொடை வாழ்வில் புரிந்திடுவோம். இம்மாபெரும் கொடையில் பங்குகொண்டோர் நம் போற்றுதலுக்குரியோர். ‘நம் வாழ்வு’ வார இதழின் மேனாள் நிர்வாகி மேதகு ஆயர் முனைவர் அந்தோணி டிவோட்டா அவர்கள் தன் உடலையே பெங்களூரு புனித ஜான் மருத்துவமனைக்கு உடல்கூறு ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்காக வழங்கியதும், அண்மையில் திருச்சி மறைமாவட்ட அருள் பணியாளர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, அன்னாரின் அடக்கச் சடங்கு தமிழ்நாடு அரசின் அரசு மரியாதையுடன் நிகழ்ந்ததும் நாம் அறிந்ததே. இத்தகையோர் ஐயன் வள்ளுவரின் வார்த்தைகளை வாழ்வாக்கியவர்களே.

‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு’ (குறள் 72)

அதாவது, அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர்; ஆனால், அன்புடையவரோ, தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

ஆகவே, அன்பு உடையவர் ஆகிடுவோம்;

உறுப்பு தானம் செய்திடுவோம்;

வாழ்வு தொடர்வதை அறிந்திடுவோம்;

பிறரில் வாழ உறுதி கொள்வோம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment