No icon

(நெகே 8:2-4, 5-6, 8-10  1கொரி 12:12-30 லூக் 1:1-4, 4:14-21)

ஆண்டின் பொதுக்காலம் 3 ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையின் இறைவார்த்தை வழிபாடானது நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்றும், அந்த ஒரே கடவுள், நம் அனைவருக்குமான கடவுள் என்பதை உணர்ந்து வாழவும் அழைப்பு விடுக்கின்றது. யாவே இறைவன், இஸ்ரயேல் மக்களின் கடவுள்; அவர் இஸ்ரயேல் மக்களாகிய எங்களுக்கு மட்டுமே சொந்தம். எனவே, நாங்கள் மட்டுமே அவரை வழிபட உரிமை பேறு பெற்றவர்கள், நாங்கள் மட்டுமே அவரது குரலைக் கேட்க தகுதியானவர்கள். பிற இனத்தவர்களாக கருதப்படும் அந்நிய நாட்டு மக்கள், பாவிகள், ஆகியோருக்கு அவர் கடவுள் இல்லை. எனவே, அவரின் வார்த்தையைக் கேட்கும் தகுதி இவர்களுக்கு இல்லை என்ற மேலாதிக்க சிந்தனையைப் பின்பற்றி கட்டப்பட்டது தான் எருசலேம் தேவாலயம். ஆனால், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கேற்ப அந்த எருசலேம் தேவாலயம் தரைமட்டமாக்கப்பட்டது. எந்த  ஏழைகள், பாவிகள், ஊனமுற்றோர் இறைவனின் வார்த்தையை கேட்கத் தகுதியற்றவர்கள் என்று இஸ்ரயேல் மக்கள் கருதினார்களோ அந்த மக்களை மீட்கவே, அந்த மக்களுக்கு விடுதலை தரவேதான் தந்தை கடவுளால் அருள் பொழிவு செய்யப்பட்டதாக ஆண்டவர் இயேசு உரக்கச் சொல்கிறார். மனித சமுதாயம் பல்வேறு வேறுபாடுகளின் அடிப்படையில் நம்மை ஒதுக்கி வைத்தாலும், நம்மைப் படைத்த இறைவன் ஒருபோதும் நம்மை ஒதுக்கி வைப்பதில்லை. அத்தகைய அதீத அன்பு கொண்ட ஒரே கடவுளின், ஒரே மக்களாக வாழும் வரத்தினை வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

நாடு கடத்தப்பட்டு அடிமைகளாக இருந்து, தங்கள் நாட்டுக்கு திரும்பிவந்த இஸ்ரயேல் மக்களுக்கு, எஸ்ரா திருசட்டங்களை வாசித்துக் காட்டி, மீண்டும் தந்தை கடவுளோடு ஒரு நல்லுறவை ஏற்படுத்தி நல்ல மக்களாக வாழ அறிவுறுத்துவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உடலின் உறுப்புக்கள் பலவாயினும் அவை இணைந்து ஒரே உடலை உருவாக்குவதுபோல நாம் வேறுபாடுகளால் பிரிந்து இருந்தாலும், ஒரே கடவுளின் மக்களாக இருந்து ஒரே திரு அவையை உருவாக்க, ஒரே தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றுள்ளோம் என்று கூறும் இரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. இரக்கமுள்ள தந்தையே! அருள் பணிகளால், மொழிகளால் நாங்கள் பலவாறு பிரிந்திருந்தாலும் உம் திருமகனை தலையாக கொண்டுள்ள ஒரே திரு அவையின் அங்கத்தினர்கள் என்பதை நினைவில் கொண்டு திரு அவையின் திருப்பணியாளர்களோடு இணைந்து உம்மை நோக்கி வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் பரம தந்தையே! மதத்தால், பொருளாதாரத்தால் எங்கள் நாட்டில் நாங்கள் வேறுபட்டிருந்தாலும், எங்களை ஆளும் தலைவர்கள் எங்கள் அனைவரையும் ஒரே நாட்டின் மக்களாகக் கருதி, சமமாக வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வானகத் தந்தையே! எங்கள் பங்கு தந்தை எங்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், பங்கின் முன்னேற்றத்திற்காகவும் முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் பங்குமக்களாகிய நாங்கள், எங்கள் முழு ஒத்துழைப்பு தந்து அவரோடு ஒன்றிணைந்து வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பரிவுள்ள தந்தையே! எம் பங்கு இளையோர்கள் நீர் கொடுத்துள்ள கொடைகள் உம்மை மகிமைப்படுத்தவே என்பதை உணர்ந்து, உம் திருமகனைபோல பிறருக்கு உதவக்கூடியவர்களாக, திரு அவையின் மீது ஆர்வமுள்ளவர்களாக வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் விண்ணகத் தந்தையே! கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும் தாயாம் திரு அவையிலிருந்து பிரிந்திருக்கும் பிற சபைகளோடு, நல்ல, ஆரோக்கியமான பிணைப்பை ஏற்படுத்தி, ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment