No icon

17, மார்ச் 2024 (இரண்டாம் ஆண்டு)

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (எரே 31:31-34; எபி 5:7-9; யோவா 12:20-33)

உடைபடா உடன்படிக்கை... இதயத்தில் இயேசுவாக...!

தவக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று! வருகின்ற ஞாயிறு குருத்து ஞாயிறு. தொடர்ந்து பாடுகளின் வாரம் ஆரம்பமாகிறது. இயேசு ஆண்டவர் சிலுவையிலே தமது உயிரை அர்ப்பணிக்கும் அளவிற்கு மனித இனத்தின்மீது அன்பு வைத்துள்ளார் என்பதை விவரிக்கும் விதமாக, நம் இதயத்தில் எழுதப்பட்டுள்ள உடைபடா இறைவனின் உடன்படிக்கையைப் பற்றி அழகுற விவரிக்கிறது இன்றைய வழிபாடு.

உடன்படிக்கை என்றால் என்ன? இரண்டு மனிதர்கள் அல்லது இரண்டு குழுக்கள் மத்தியில், உறவின் அடிப்படையில் உருவாக்கப்படுபவையே உடன்படிக்கை. உடன்படிக்கையின் முக்கிய நோக்கம் அமைதியை ஏற்படுத்துவதாகும். மனிதர்கள் இணைந்து செயல்படுவது மிகவும் தேவையானது என்பதற்காகவே உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன.

மீட்பின் வரலாற்றில் இறைவன் மனிதனோடு பல உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார். குறிப்பாக, ஆதாமோடு (தொநூ 1:28), நோவாவோடு (தொநூ 9:1), ஆபிரகாமோடு (தொநூ 17:2), மோசேவோடு (விப 19:5-6) உடன்படிக்கைகளைக் கடவுள் செய்துகொள்கிறார். ‘நீங்கள் என் மக்கள்; நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்’ (விப 6:7) என்பதே கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையால் விளையும் உறவு.

இங்கே உடன்படிக்கைக்கும், ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது நல்லது. ஒப்பந்தம் வணிக அடிப்படையிலானது. இரு தரப்பினரின் ஒப்புதலின் பேரில் அது முடி(றி)க்கப்படலாம். ஆனால், உடன்படிக்கையோ உறவு அடிப்படையிலானது. அன்புதான் அதன் இலக்கு. முழுமையாகச் செய்துகொண்ட உடன்படிக்கை முறிவுபடாத் தன்மை கொண்டது; அது இரத்த உறவுக்கு இணையானது; எனவேதான் உடன்படிக்கைகள் இரத்தத்தினால் நிறைவு செய்யப்பட்டன. ‘ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்’ (விப 19:8) என்று உடன்படிக்கை விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் ஆசி கிடைக்கும், மீட்படைய முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்களுடைய பாவத்தாலும், கீழ்ப்படியாமையினாலும் இறைவனிடமிருந்து அந்நியப்பட்ட இஸ்ரயேல் மக்களை மீண்டும் தம்மருகே அழைக்கின்ற கடவுள், அவர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்கின்றார். திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுள் மிக முக்கியமானது, கடவுள் சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையாகும் (விப 19:5:6). இந்த உடன்படிக்கையை மக்கள் என்றும் நினைவில் கொள்ளுமாறு கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகையை உடன்படிக்கைப் பேழையில் வைத்தனர். காலம் செல்ல இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடமையை மறந்து, உடன்படிக்கைப் பேழையைப் புதுமை செய்யும் பொருளாகக் கருதினர் (1சாமு 4:4). அவர்கள் தலைவராகிய கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறினர்; அவ்வுடன்படிக்கையை மறந்தனர்; தங்களுக்குக் கடவுள்களை உருவாக்கிக் கொண்டனர். எனவே, கடவுள் தம்மை ஒரு தந்தையாக இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கூட்டி வந்தபோது அவர்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்கிறார் (எரே 31:32). அவர்கள் உடன்படிக்கையை மீறினாலும், தாம் அவர் களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்துக்கொள்ளவில்லை. மனிதர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தாலும், கடவுளால் அவர்களைக் கைவிட முடியவில்லை. ‘நாம் நம்பத்தகாதவரெனினும், அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில், தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது’ (2திமோ 2:13) என்பதுதான் உண்மை. உடன்படிக்கை முறிக்கப்படாததற்குக் காரணம், கடவுளின் முடிவில்லாத பேரன்பே (1யோவா 4:8-10). கடவுளுக்கும், இஸ்ரயேலுக்கு முள்ள உறவு ஆயன்-மந்தை (31:10), தந்தை-பிள்ளை (எரே 31:20) உறவைப் போன்றது. ‘நான் உங்கள் கடவுள்; நீங்கள் என் மக்கள்என்பதை மீண்டும் நினைவூட்டும் கடவுள், இப்புதிய உடன்படிக்கைச் சட்டத்தை மக்களின் இதயத்தில் எழுதி வைப்பதாகச் சொல்கிறார் (31:33).

கற்பலகையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஏன் இதயத்தில் எழுத வேண்டும்? இதயம் மனித உயிரின், அன்பின் அடையாளம். உள்ளத்தில் எழுதப்படுவதால் அது தன்மயமாக்கப்படுகிறது; மனிதருள் ஒன்றித்துவிடுகிறது. எனவே, வெளியிலிருந்து எந்தவிதமான வற்புறுத்தலும் தேவை இல்லை (31:34). இதயத்தில் எழுதப்பட்ட மிக நெருக்கமான இந்த உடன்படிக்கை வாயிலாக, அவர்கள் கடவுளுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதும், கடவுள் அவர்கள்மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதும் புலப்படுகிறது. கடவுளின் அன்பைப் புரிந்துகொண்ட மக்கள், அந்த அன்பினால் தாமாகவே மனமுவந்து அதனைக் கடைப்பிடிக்கின்றனர்; வழிதவறி ஊதாரித்தனமாகச் சென்ற அவர்கள், தங்களது கசப்பான அனுபவத்தின் மூலம் கடவுளின் அன்பை உணர்ந்து மனமாற்றம் அடைகின்றனர்; கடவுளிடமே திரும்பி வருகின்றனர். ஆகவே, இதன் வழியாகப் புதியதோர் உடன்படிக்கை மலர்கிறது.

இறைவாக்கினர்களின் மூலமாகப் பல்வேறு வகைகளில் ஏற்படுத்தப்பட்ட இவ்வுடன்படிக்கை (எபி 1:1), இயேசுவில் நிறைவு பெறுகிறது (லூக் 22:20). இயேசு இந்தப் புதிய உடன்படிக்கையைத் தமது பாடுகளால், சிலுவையால், இரத்தத்தால், இறுதியில் தமது இறப்பினால் நிறைவு செய்கிறார் என்பதை விளக்கிக் கூறும் பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசுவைக் காண கிரேக்கர்கள் வருகின்றனர் (யோவா 12:20-21). யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவைக் காண விழைந்தார்கள்? இவர்களுக்கும், யூதர்களுக்கும் என்ன தொடர்பு? இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களுக்கு, இயேசு ஏன் புதிராக விடையளிக்க வேண்டும்? போன்ற பல கேள்விகள் நம்மில் எழுகின்றன.

உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் கிரேக்கர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாக்ரடீசைக் (கி.மு. 470-399) கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும் அவர் பின்பற்றும் கொள்கைகளுக்கென அல்லது அவர் மக்களிடையே பரப்பி வரும் கருத்துகளுக்கென கொல்வதில்லையென்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள். எனவேதான் சாக்ரடீசுக்குப் பிறகு வந்த பிளேட்டோ (கி.மு. 427-347), அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) போன்ற பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழ முடிந்தது, பேச முடிந்தது.

தங்கள் நாட்டு அறிஞர்களின் சிந்தனைகளை வளர்த்தது போதாதென்று, கிரேக்கர்கள் பலர் அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கினர். சுதந்திரச் சிந்தனை கொண்ட இந்தக் கிரேக்கர்களில் ஒருசிலர், இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர் என்பதில் வியப்பில்லை. இயேசுவைத் தேடி எருசலேம் நகருக்கு வந்த கிரேக்கர்கள் அந்நகரில் இயேசுவுக்கு எதிராக உருவாகி வந்த எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் (12:19) காண்கின்றனர். எனவே, அவர்கள் சிந்தனை சுதந்திரம் உள்ள தங்கள் நாட்டுக்கு இயேசுவை அழைத்திருக்கலாம். அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, ‘மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்து விட்டதுஎன்று பேச ஆரம்பிக்கிறார் (12:23).

யோவான் நற்செய்தியில்தம்முடைய நேரம் இன்னும் வரவில்லைஎன்று மூன்று இடங்களில் இயேசு குறிப்பிடுவார் (2:4; 7:30; 8:20). இப்போதுமானிட மகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ (12:23) என்று சொல்கிறார். மானிட மகன் மாட்சி பெறும் நேரம் என்பது அரியணை அல்லது அரசாட்சியில் அமரப் போகும் நேரமோ அல்லது மணிமகுடம் சூட்டப்பட்டு, அவர் அலங்கார மனிதராகத் தங்கத் தேரில் உலா வரும் நேரமோ அல்ல; மாறாக, அவர்மண்ணிலே மடிவதற்கானநேரம். எனவேதான் அந்நேரத்தை உணர்ந்த இயேசுகோதுமை மணிபற்றிய இந்த உருக்கமான உருவகம் வழியாகத் தமக்கு நிகழவிருக்கும் சாவு-மாட்சி பற்றிப் பேசுகிறார் (12:24).

கோதுமை மணி படைக்கப்பட்டதன் நோக்கம் ஒன்று, அது உணவாக மாறி, பிறருக்கு உயிரளிக்க வேண்டும்; மற்றொன்று, விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரு நோக்கங்களும் நிறைவேற வேண்டுமெனில், கோதுமை மணி தன் உருவை இழக்கவேண்டும்; மண்ணில் மடிய வேண்டும். தம்மைக் கோதுமை மணிக்கு உருவகப்படுத்தும் இயேசு, தாம் உணவாக உடைபடப் போவதையும் (மத் 26:26-28), பலவாறு துன்பப்பட்டு, கொலை செய்யப்படப் போவதையும் (மத் 16:21) எடுத்துக் கூறுகிறார். இயேசு கூறிய வார்த்தைகள் பலருடைய உள்ளங்களில் உறுதியை, வீரத்தை விதைத்துள்ளன என்பதில் ஐயமில்லை. தான் சிங்கங்களின் பசி தீர்க்கும் உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார், ‘இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காகப் படைக்கப்பட்ட கோதுமை மணி நான்என்றார் (Saint Ignatius of Antioch, Epistle to the Romans, 4). இயேசு கூறிய கோதுமை மணி உருவகம், புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார், புனித தேவசகாயத்தைப்போல பல்லாயிரம் மறைச்சாட்சிகள் மரணம் வரை உறுதியாக நிலைத்திருக்க இந்த இறை வாக்கியம் தூண்டுதலாக இருந்தது. திரு அவையின் வித்து மறைச்சாட்சியின் இரத்தம்!

இதயத்தில் இருத்த... இயேசுவைபோல வாழ்ந்திட...

● ‘உங்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்என்று சொல்லி, நம் இதயத்தில் உடைபடாத உடன்படிக்கையாக வரும் இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம்.

● ‘நான் பிறருக்காக வாழ்கிறேன்என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அவர்களுக்காகத் துன்பப்படவோ, இறக்கவோ முன்வரவில்லை என்றால், அது ஒரு போலியான வாழ்வு என்பதை உணர்வோம்.

ஒருவரின் பாவம் மனமாற்றத்தால் மட்டுமே கழுவப்படுகிறது. மனமாற்றமில்லா வெறும் பலிகள் ஒருவரின் பாவத்தைக் கழுவாது. இப்பலிகளில் கடவுளுக்கு எந்த நாட்டமும் கிடையாது. அவர் விரும்புவதெல்லாம் நொறுங்கிய உள்ளமும், குற்றமுணர்ந்த இதயமுமே என்பதை அறிவோம்.

Comment